சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக மாறிய கதை
மண்ணையும் விண்ணையும் அளந்த பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை விளங்குகிறது. புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த நாள்தான். வேண்டிய வரம் பெற வேங்கடவனை நினைத்து விரதம் இருக்க நல்ல நாளாக சனிக்கிழமையைச் சொல்லலாம். ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து மீட்சி பெற ஒரே வழி எம்பெருமானை சரணடைவதுதான்.சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்கிறோம். இவர் சூரியன் மற்றும் சாயாதேவியின் புதல்வன். புரட்டாசி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் சனீஸ்வரன் பிறந்தார்.
நவக்கிரகங்களின் சனிபகவான் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஒருவனது ஆயுட்காலம் அமைகிறது. சனியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் பெருமாளே சனிக்கு அதிபதியாக இருப்பவர்.
ஒருமுறை சனிபகவான் கலியுகத்துக்கு முதன் முதலாக வருவதற்கு ஆயுத்தமானார்.அப்போது எதிர்பட்ட நாரதரைச் சந்தித்தார். அப்போது தான் கலியுகத்துக்கு செல்வதாக கூற .. அப்படியானால் சரி ஆனால் நீங்கள் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று யாரை வேண்டுமானாலும் துன்புறுத்தலாம். ஆனால் தவறிகூட திருமலை பக்கம் சென்றுவிடாதீர்கள். ஏன் உங்கள் பார்வை கூட அங்கு படாமல் இருப்பதே நல்லது என்று மறைமுகமாக வழக்கத்துக்கே உரிய தம் கலக பாணியில் தெரிவித்தார் நாரதர். என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்று சொல்லும்போது தான் கவனம் அவற்றில் போகும். குழந்தைகளும் இதைத்தான் விரும்புவார்கள். சனிபகவான் மட்டும் விதிவிலக்கா…
நான் சனிபகவான்.. நான் பிடித்தால் யாராக இருந்தாலும் எனக்கு கட்டுப்பட வேண்டியதுதான் என்று, திருமலையில் பாதம் பதித்த அடுத்த நொடியில் தூக்கியெறியப்பட்டார். மற்றவரை துன்பப்படுத்தி இன்பம் காணும் உனக்கு திருமலையில் இருப்பது யார் என்று தெரிந்தும் உன் திரு விளையாடலை என்னிடம் காட்டுகிறாயா? என்று சினம் கொண்ட வேங்கடவனைக் கண்டு நடுங்கினார் சனிபகவான். எல்லோரையும் துன்பப்படுத்தி மகிழும் என்னை வழிநடத்தும் பரம்பொருளே என்னை மன்னித்தருளும் என்று அவர் பாதம் பிடித்து மன்னிப்பு கேட்டார்.
என்னை நினைத்து வாழும் பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்க கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார். அப்போது சனி பகவானின் விருப்பத்துக்கிணங்க அவர் பிறந்த தினமான சனிக்கிழமையன்று பெருமாளை வழிபட்டால் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார் வேங்கடவன். அன்று முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக ஆயிற்று.
பக்தர்களின் வேண்டுதல் செல்வம், ஆயுள், ஆரோக்யம் இவற்றை முன்னிறுத்தி தான். இவை அனைத்தும் குறைவின்றி கிடைக்க ஒவ்வொரு சனிக்கிழமையும் சங்கடத்திலிருந்து காக்கும் வேங்கடவனை வழிபடுவோம். சனியின் உக்கிர பார்வையைத் தணித்து நம்மைக் காக்கத்தான் வேங்கடவன் இருக்கிறாரே…
ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள்கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது?
சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு?
இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது.
சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன்.கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள்.
கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, “சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.அங்கே வந்த நாரதர், “சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை உகப்பித்தால் மங்களமாகி விடுவாய்!” என்று கூறினார்.
“அவனை உகப்பிக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று சனீஸ்வரன் கேட்டார்.அதற்கு நாரதர், “ஹோலிகா என்று இரணியனுக்கொரு சகோதரி இருந்தாள். அவளுக்குத் தீயால் சுடப்படாமல் இருக்கும் விசேஷத் தன்மை உண்டு. பிரகலாதனைப் பல விதமான தண்டனைகளுக்கு உள்ளாக்கியும் அவன் அவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்ட இரணியன், ஹோலிகாவிடம் பிரகலாதனை ஒப்படைத்தான். பிரகலாதனைத் தீயில் தள்ளிய ஹோலிகா, தானும் தீக்குள் இறங்கி அவனை வெளிவரமுடியாதபடி அழுத்தினாள். அப்போது நரசிம்மப் பெருமாள் ஹோலிகாவின் பிடியிலிருந்து பிரகலாதனைக் காத்து வெளியே அழைத்து வந்தார்.
ஹோலிகாவிடமிருந்து நரசிம்மர் பிரகலாதனைக் காத்த நாளைத்தான் ஹோலிப் பண்டிகையாக மக்கள் கொண்டாடுகின்றார்கள். அந்த ஹோலிகா பெண் என்பதால் நரசிம்மர் அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டார். இப்போது அவள் தன் சகோதரனான இரணியனைக் கொன்ற திருமாலைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறாள். திருமால் கண்ணனாக அவதாரம் செய்ததை அறிந்து கோகுலத்துக்கு அவள் வந்துவிட்டாள். நாளை இங்கே ஹோலிப் பண்டிகை. தன்னிடம் இருந்து பிரகலாதனை அவன் காத்த நாளான ஹோலிப் பண்டிகையன்று கண்ணனையும் அவன் தோழர்களையும் தீக்கு இரையாக்கிப் பழிதீர்க்கத் திட்டம் தீட்டியிருக்கிறாள். சனீஸ்வரா! நீ அந்த ஹோலிகாவைக் கண்டறிந்து அவளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டால், கண்ணனை மகிழ்விக்கலாம். அவன் அருளைப் பெறலாம். நீயும் மங்களகரமாக ஆகலாம்!” என்றார்.
அடுத்தநாள் ஹோலிப் பண்டிகை. கண்ணனும் அவன் தோழர்களும் பெரிய பெரிய கொள்ளிக் கட்டைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, நரசிம்மர் மற்றும் பிரகலாதனின் திருநாமங்களைப் பாடி, ஹோலிகாவின் கொடும்பாவியை எரித்து ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கொள்ளிக்கட்டைகளுக்குள் ஹோலிகா ஒளிந்திருந்தாள். தீ மூட்டப்பட்டவுடன் கண்ணனையும் அவன் தோழர்களையும் உள்ளே இழுத்துவிட வேண்டும் என்று எண்ணிய அவள் மேல் சனீஸ்வரன் தன் பார்வையைச் செலுத்தினான். சனிபார்வை பட்டவுடனேயே ஹோலிகா தன் சக்திகள் அனைத்தையும் இழந்து விட்டாள்.
கண்ணன் தீ மூட்டினான். அத்தீயில் ஹோலிகா எரிந்து சாம்பலானாள்.நாரதர் சனீச்வரனைக் கண்ணனிடம் அழைத்துச்சென்று நடந்தவற்றை விவரித்தார். அப்போது சனீஸ்வரனது தொண்டுக்கு மனமுகந்த கண்ணன், “சனீஸ்வரா! நீ இனிமேல் மங்களமானவனாகத் திகழ்வாய். உன் கிழமையான சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மிகவும் மங்களமானதாகக் கருதப்படும். அந்நாளின் திதியோ, நட்சத்திரமோ எதுவாக இருந்தாலும், சனிக்கிழமையின் விடியற்காலைப் பொழுது மங்களமானதாகவே கருதப்படும். 28-வது கலியுகத்தில் நான் திருமலையில் மலையப்பனாக வந்து தோன்றுவேன். சனிக்கிழமைகளில் என்னை வந்து தரிசிக்கும் அடியார்கள் வேண்டும் வரங்கள் அனைத்தையும் அருளுவேன்!” என்று வரமளித்தான்.
அதனால்தான் ‘சனி உஷஸ்’ எனப்படும் சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மங்களமானதாகவும், அனைத்து சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு
உகந்த_நாட்களாகவும் விளங்குகின்றது
ஸர்வம் க்ருஷ்ணார்ப்பனம்
நமோ வெங்கடேசாய நமஹ.