ஜாதகரீதியாக ஒருவர் எந்த தொழிலை செய்தால் வெற்றி கிடைக்கும்❓
ஒருவருக்கு அமையும் தொழிலை அறிந்து கொள்ள 10-ம் அதிபதியின் காரகத்தொழில், 10-ம் அதிபதி அமர்ந்த வீட்டின் காரகத்தொழில், 10-ம் அதிபதி நின்ற சாரநாதனுடைய வீட்டின் காரகத்தொழில் ,10-ம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டவர்களில் பலமானவர்களின் தொழில் இவைகளை நன்கு கவனித்து ஒருவரின் தொழிலை கூற வேண்டும். இது பொது விதி ஆகும்.
முக்கியமாக 10-ம் அதிபதியுடன் தொடர்பு கொண்ட தற்கால திசாநாதனின் கிரக காரத் தொழிலையும், ஆதிபத்திய காரக தொழிலையும் இணைத்து தொழிலை கூற வேண்டும்.
ஒருவரை அவர் செய்யும் தொழிலை வைத்து அடையாளம் காட்டுவதற்கும், அறிமுகப்படுத்துவதற்கும், அடையாள அட்டை வைத்துக் கொள்வதற்கும், பெயர் பலகை வைத்து தொழில் செய்வதற்கும், அவருக்கும் 10-ம் அதிபதியும், தற்கால திசாநாதனும் பலமாக அமைய வேண்டும்.
💚ஒருவருக்கு 10-ம் அதிபதியும் 2-ம் அதிபதியும் சம்பந்தப்பட்டு அவர்களுடன் இணைபவரின் தொழிலை தான் ஜாதகர் செய்வார். இவர்களுடன் லக்னாதிபதி எவ்விதத்திலாவது சம்பந்தப்பட்டு இருக்க வேண்டும்.
💚10-ம் அதிபதியுடன் இரண்டாம் அதிபதி கூடி அவருடன் குரு, செவ்வாய் ,கேது கூடினால் ஜோதிடத்துறை, ஆசிரியர் துறை, வங்கிப் பணி, வட்டி தொழில், பத்திரப்பதிவுத்துறை, உணவுத்துறை, நகைக்கடை போன்ற தொழில்களில் ஒன்றில் ஜாதகர் ஈடுபடுவார்.
💚பத்தாம் அதிபதியுடன் மூன்றாம் அதிபதி சனி, புதன், ராகு கூடினால் அச்சகம், விளையாட்டு துறை, பத்திரிக்கை துறை, செய்தி துறை, தொலைக்காட்சி, கேபிள், தூதுத்துறை, தொலைபேசி போன்ற துறைகளில் ஒன்று ஜாதகர் ஈடுபடுவார்.
💚பத்தாம் அதிபதியுடன் நான்காம் அதிபதி சம்பந்தப்பட்டு சுக்கிரன், செவ்வாய், சந்திரன் சம்பந்தப்பட்டால் கட்டிடம், விவசாயம், வாகனம், கால்நடை, உணவு விடுதி, பர்னிச்சர், தானியக்கிடங்கு, கிணறு தோண்டுதல் போன்ற துறைகளில் ஜாதகர் ஈடுபடுவார்.
💚10-ம் அதிபதியுடன் 5-ம் அதிபதி சம்பந்தப்பட்டு குரு ,புதன், சூரியன் கூடினால் முன்னோர் தொழில், பூர்வீகத்தால் வருமானம், பந்தயத்துறை, பங்கு மார்க்கெட், விஞ்ஞான துறை, சாஸ்திரம், பெரிய மனிதர் சவகாசத்தால் வருமானம் போன்ற துறைகளில் ஒன்று ஜாதகர் ஈடுபடுவார்.
💚10-ம் அதிபதியுடன் 6-ம் அதிபதி இணைந்து இவர்களுடன் செவ்வாய், சனி, சூரியன் சம்பந்தப்பட்டால் மருத்துவத்துறை, வழக்கறிஞர், காவல்துறை ,ஸ்டண்ட் மாஸ்டர், மருத்துவமனை பணி போன்ற துறைகளில் ஒன்றில் ஜாதகர் ஈடுபடுவார்.
💚10-ம் அதிபதியுடன் 7-ம் அதிபதியும் இணைந்து இவர்களுடன் சுக்கிரன் சம்பந்தப்பட்டால் பயணத்துறை, அரசு ஒப்பந்த துறை, வஸ்திர வியாபாரம், சாலை பணித்துறை, கூட்டுத் தொழில், மனைவி வர்த்தகத்தால் தொழில், கல்யாண ஸ்டோர் ,திருமண அமைப்பாளர் போன்ற துறைகளில் ஒன்று ஜாதகர் ஈடுபடுவார்.
💚10-ம் அதிபதியுடன் 8-ம் அதிபதி இணைந்து இவர்களுடன் சனி, செவ்வாய் சம்பந்தப்பட்டால் தொழிற்சாலை பணி, ஆயுள் காப்பீடு, கசாப்பு கடை, தாதா, ராணுவம், போலீஸ், அறுவை சிகிச்சை நிபுணர், கிளப் கேளிக்கை விடுதி, மதுக்கடை பணி, வாகன ஓட்டுனர், போன்ற துறைகளில் ஒன்றில் ஜாதகர் ஈடுபடுவார்.
💚10-ம் அதிபதியுடன் 9-ம் அதிபதி இணைந்து இவர்களுடன் சூரியன், குரு சம்மந்தப்பட்டால் போதனை துறை, பள்ளி உருவாக்குதல், தந்தை வழித்தொழில், வெளிநாட்டுப் பணி, பாஸ்போர்ட் ஆபீஸ், அறநிலையத்துறை, ஆசிரமம் நடத்துதல், நீதிபதி, அரசு அதிகாரத்துறை, தூதரகம், புரோகிதத் தொழில், தர்மகர்த்தா, பூஜை சாமான்கள் கடை போன்ற துறைகளில் ஒன்றில் ஜாதகர் ஈடுபடுவார்.
💚10-ம் அதிபதி 11-ம் அதிபதி இணைந்து இவர்களுடன் சனி,குரு சம்பந்தப்பட்டால் புத்தக எழுத்தாளர் ,புத்தக வெளியீட்டாளர், சபா நடத்துதல், நில புரோக்கர், வாடகை மூலம் வருமானம், திருமண தரகர் ,பயிர்த்தொழில் போன்ற துறைகளில் ஒன்றில் ஜாதகர் ஈடுபடுவார்.
💚10-ம் அதிபதியும் 12-ம் அதிபதியும் இணைந்து இவர்களுடன் சனி, குரு சம்பந்தப்பட்டால் விவாதம் செய்யும் தொழில், விரயம் செய்யும் தொழில், வெளிநாட்டுப் பணி,ஏற்றுமதி துறையில் பணிபுரிதல், உணவு பணி, ஜெயிலர், இரவு காவலர் பணி போன்ற துறைகளில் ஒன்று ஜாதகர் ஈடுபடுவார்.
தற்கால திசா நாதனின் ஆதிபத்திய காரகத்தையும், அவரின் கிரக காரகத்தையும்,பத்தாம் அதிபதியின் கிரக காரகத்தையும், அவர் அமர்ந்த வீட்டின் ஆதிபத்திய காரகத்தையும் இணைத்து தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே அவரின் ஜீவனமாக அமையும் என்பது திண்ணம்.