ஜோதிட குறிப்புகள்-பகுதி-11
- ஒரு ஜாதகரின் பலம் ஓங்கி இருக்க வேண்டுமானால் பாவகிரகங்கள் ஆண் ராசிகளில் முதல் 15 பாகைக்குள் இருக்க வேண்டும். அல்லது பின் 15 பாகைகளில் பெண் ராசிகளில் அமைந்திருக்கவேண்டும். பலம் மட்டுமல்லாமல் துணிவும், செல்வமும், தொழில்நுட்ப ஞானமும், தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்கின்ற திறனும், ஜாதகருக்கு மிகவும் சரளமாக அமைந்துவிடும்.
- ஆண் ராசிகளில் பின் 15 பாகைகளில் சுப கிரகங்கள் இருந்தாலும், பெண் ராசிகளில் முதல் 15 பாகங்களில் இருந்தாலும் ஜாதகன் கண் நிறைந்த தோற்றமுடையவனாகவும், மென்மைத்தன்மை மிகுந்தவராகவும், அதிர்ஷ்ட வாய்ப்பு உடையவராகவும் விளங்குவார். அவரது பேச்சு இனிமையாக இருக்கும்.
- ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எண்ணும்போது லக்னத்திலோ, 4-ம் வீட்டிலோ, ஏழாம் வீட்டிலோ, 10-ம் வீட்டிலோ செவ்வாய் அல்லது புதன் அல்லது குரு அல்லது சுக்கிரன் உச்சம், ஆட்சி பெற்று இருந்தால் மகா புருஷ யோகம் ஏற்படும். இந்த யோகத்தின் பலன் ஜாதகர் உயர்ந்த மனிதராக பாராட்டபடுவார். செல்வம் குவிப்பார். உயர ஸ்தானத்தை பெறுவார்.
- செவ்வாய் மேஷம் அல்லது விருச்சிகம் அல்லது மகரத்தில் இருக்கப் பெற்று அந்த இடம் கேந்திரங்களில் ஒன்றாகுமானால், சர்வ சக்தியையும் அளிக்கும் ருசக யோகம் ஏற்படும்.
- புதன் மிதுனம் அல்லது கன்னியில் இருக்கப்பெற்று அந்த இடம் கேந்திரங்களில் ஒன்றாகுமானால் பத்ர யோகம் உருவாகும். பல நலன்களும் ஜாதகருக்கு பெருகும்.
- குருவானவர் கடகம் அல்லது தனுசு அல்லது மீனத்தில் இருந்தால் அந்த இடம் கேந்திரங்களில் ஒன்றாகுமானால் ஜாதகர் சகல பாக்கியங்களையும் பெறுகின்ற அம்ச யோகம் உடையவராவார்.
- சுக்கிரன் ரிஷபம் அல்லது துலாம் அல்லது மீனத்தில் இருக்கப் பெற்று அந்த இடம் கேந்திர ஸ்தானங்களில் ஒன்றாக அமையுமானால் விசேஷ நற்பலன்களைத் தரக்கூடிய மாளவியா யோகம் உண்டாகும்.
- சனி பகவான் துலாத்திலோ, மகரத்திலோ, கும்பத்திலோ இருக்க பெற்று அந்த இடமானது கேந்திரங்களில் ஒன்றாகுமானால் உன்னதமான பலன்களை அளிக்கின்ற ஸச யோகத்திற்கு ஜாதகர் உரியவர் ஆவார்.
- மேலே சொன்ன ஐந்து மகா புருஷ யோகங்களில் ஒன்று இருந்தாலே மிகவும் சிறப்பு உண்டாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருக்குமானால் அந்த ஜாதகர் பூர்வ ஜென்மத்தில் நிறைய புண்ணியங்களை செய்து அவற்றை எல்லாம் இப்பிறவியில் அனுபவிக்கப் பிறந்தவர் என்று திட்டவட்டமாக கூறலாம்.
- ஒரு ஜாதகத்திற்கு மூன்று அல்லது நான்கு கிரகங்கள் உச்ச நிலை பெற்றிருக்கின்ற வாய்ப்பு அமைந்திருக்குமானால் அந்த ஜாதகர் அரசனாவான் அல்லது அரசனுக்கு நிகரான தகுதியை பெறுவார்.
- ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்றால் மூன்று அல்லது நான்கு கிரகங்கள் உச்சம் பெற்றதற்கு நிகராகும்.
- பாபக் கிரகங்கள் மட்டுமே உச்சம் பெற்றிருந்தால் ஜாதகருக்கு அரச யோகம் உண்டாகும். என்றாலும் கூட தயவு என்கின்ற குணம் ஜாதகரிடம் மிகவும் குறைவாக இருக்கக்கூடும்.
- சுபக்கிரகங்கள் மேற்சொன்ன பலத்தைப் பெற்று இருந்தால் ஜாதகர் பரந்த கருணையின் மூலம் உலகத்தை நேசிக்கின்ற நெறியில் தன்னை ஆட்படுத்திக் கொள்பவராக இருப்பார்.
- சூரியன் மேஷத்திலும், சந்திரன் ரிஷபத்திலும், சனி கும்பத்திலும் இருக்க மேற்சொன்ன மூன்று வீடுகளில் ஒன்று லக்னமாக அமைய இப்படிப்பட்ட நிலையில் பிறந்த ஜாதகர் ராஜயோகம் பெற்றவராவார். இதன் பலன் வாழ்வில் உன்னதமான ஸ்தானத்தை பெற்றிருப்பது ஆகும்.
- புதன் மிதுனத்திலும், குரு சிம்மத்திலும், செவ்வாய் விருச்சகத்தில் அமையப் பெற்று இந்த மூன்று இடங்களில் ஒன்றில் லக்னம் அமைந்திருக்குமானால் மேற்சொன்ன ராஜயோகம் உண்டாக தடை இல்லை.
- சனியும், சந்திரனும் ஜாதகத்தில் உச்சம் பெற்று இருவரில் ஒருவர் லக்னத்தில் இருந்தாலும் அல்லது சூரியனும், புதனும் கன்னியில் இருந்து, செவ்வாய் மேஷத்திலும், குரு கடகத்திலும், சுக்கிரன் துலாத்திலும் இருக்கப் பெற்றால் அந்த ஜாதகருக்கு வலிமைமிக்க ஒரு ராஜ யோகம் உண்டாகும்.
- சனியும், குருவும், செவ்வாயும், சூரியனும் உச்ச ராசியில் இருந்து அந்த ராசிகளில் ஒன்று லக்னமாக அமையுமானால் உயர்தரமான ராஜயோகம் உண்டாகும்.
- மூன்று கிரகங்கள் (அதாவது மேலே சொல்லப்பட்ட நான்கு கிரகங்களில் மூவர் மட்டுமே உச்ச ராசிகளில் இருந்து அவற்றில் மூன்றில் ஒன்று ஜனன லக்னமானால் அப்போதும் ராஜ யோகம் உண்டாகும். இந்த ராஜ யோகம் முன்சொன்ன ராஜ யோகத்தைக் காட்டிலும் சற்று பலம் குறைந்ததாகும்.
- இரண்டு கிரகங்கள் உச்ச ராசிகளில் இருந்து அந்த ராசிகளில் ஒன்று ஜனன லக்னமாகி சந்திரன் கடகத்தில் இருந்தால் மேற்சொன்ன அளவுக்கு அதே ராஜயோகம் உண்டாகும்.
- 9-ம் அதிபதியும், சுக்கிரனும் அவரவர்களின் சொந்த வீடுகளில் உச்ச ராசிகளில் இருந்து, அந்த இடம் 1, 4, 5, 7, 9 அல்லது 10 ஆகிய இடங்களில் ஒன்றாகுமானால் ஜாதகத்தில் லட்சுமி யோகம் உண்டாகும். சுகபோக வாழ்வும் செல்வமும் வந்து சேரும்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …