ஶ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் திருநாங்கூர்
பகவான்-பக்தர்களுக்காகவே இருப்பவர். பிரார்த்தனை செய்தால் தான் தரிசனம் கொடுப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டார்.திருமாலின் தொழிலே பக்தர்களை காப்பது என்பதால் இந்த மண்ணுலகில் பிறந்த அனைவருடைய கஷ்ட நஷ்டங்களையும் மிக நன்றாக அறிவார். ‘திருநாங்கூர்‘ பகவானுக்கு பிடித்த ஸ்தலம் என்பதால் அவரது கருணை இந்த ஊருக்கு மிக நன்றாகவே கிடைத்திருக்கிறது. ‘திருமணிக்கூடம்’ என்னும் சிற்றூரில் கோயில் கொண்டு தனது தாமரை கண்களால் பக்தர்களுக்கு கருணை மழை பொழியும் காட்சி மிகவும் அலாதியானது எல்லோரையும் ஆனந்தப்பட வைக்கவும் செய்கிறது.
திருநாங்கூருக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் “திருமணிகூட கோயில்” அமைந்திருக்கிறது.
மூலவர் வரதராஜ பெருமாள் நின்ற திருக்கோலம்.
தாயார் திருமாமகள் நாச்சியார்.
இங்கு பூதேவிக்கு தனி கோயில் உண்டு.
தீர்த்தம் சந்திர புஷ்கரணி
விமானம் கனக விமானம்
பிரம்ம தீர்த்தம் என்று தீர்த்தத்திற்கு வேறு பெயர்.
திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம் பெற்ற அருமையான ஸ்தலம்.
திருநாங்கூரில் நடக்கும் 11 கருட உற்சவத்தில் இந்தக் கோயில் பெருமாளும் பங்கேற்பது உண்டு. சிறிய கோவில் என்றாலும் மகத்தான சக்தியை பெற்றது.
ஒருமுறை சந்திரன் தான் செய்த தவறை நினைத்து வருந்தி அதற்குப் பாவ விமோசனம் கிடைக்குமா கிடைக்காதா என்று மனம் வருந்தி அலைந்து கொண்டிருக்கும் பொழுது திருமணி கூடத்திலுள்ள பெருமாளை அங்குள்ள புஷ்கரணியில் நீராடி வழிபட்டால் விலகும் என்று சொல்லப்பட்டது. சந்திரனும் இந்த திருமணி கூடத்தில் உள்ள பிரம்ம தீர்த்த புஷ்கரணையில் நீராடி பெருமாளை நோக்கி தவம் இருந்தான். பெருமாளும் சந்திரனுக்கு காட்சி கொடுத்தார். சந்திரனுடைய பாவமும் விலகியது. அவன் நீராடிய புஷ்கரணி பின்னர் சந்திர புஷ்கரணியாக மாறியது.
சந்திரனுக்கே தரிசனம் தந்து அருள் பாலித்து இது போல் தனக்கும் பகவான் இந்த திருமணி கூடத்தில் தரிசனம் தர வேண்டும் என்று பெரிய திருவடிகிய கருடன் திருமாலை விரும்பி கேட்டான் அப்படியே ஆகட்டும் என்று மணிகூட நாயகனாகிய திருமால் கருடனுக்கு காட்சி தந்து வாழ்த்திய தலம் என்பது இரட்டிப்பு பெருமை.
பரிகாரம்
பெண்களால் ஏற்பட்ட சாபங்கள் நீங்க வேண்டும் என்றாலும், பெண்களால் நல்ல காரியங்கள் தடையில்லாமல் நடக்க வேண்டும் என்றாலும், பெண் சிசுக்களை காப்பாற்ற முடியாமல் அவஸ்தைப்படுபவர்களுக்கும், ஊனமுற்ற பெண்களுக்கு நல்லபடியாக வாழ்க்கை அமைய வேண்டும் என்றாலும், திருமணமாகாத பெண்களுக்கு முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்றாலும் இங்கு வந்து பெருமாளை மனப்பூர்வமாக தரிசித்து செய்ய வேண்டிய பரிகாரங்களை செய்து வந்தால் போதும் அவர்கள் அத்தனை பேருக்கும் புது வாழ்வு கிடைத்துவிடும்.
Google Map