பிரம்மஹத்தி தோஷம் (குரு சனி)
பிரம்மஹத்தி தோஷம்
ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி சேர்க்கை பெற்றாலும் குருபகவானை சனி பகவான் எங்கிருந்து பார்வை செய்தாலும் குருவின் சாரத்தில் சனியும் ,சனியின் சாரத்தில் குரு இருந்தாலும் குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று நோக்கினாலும் அது “பிரம்மஹத்தி தோஷம்”(Brahmahathi-Dosham) உள்ள ஜாதகம் ஆகும். ஆண் பெண் இரு பாலருக்கும் வரும்.
பிரம்மஹத்தி தோஷம் எதனால் வருகிறது?
பிரம்மன் படைத்த ஒரு உயிரை கொள்வதால் இந்த “பிரம்மஹத்தி தோஷம்” ஆனது ஏற்படுகிறது.பொருளுக்காக ஒரு எளிய வரை கொல்லுதல், வேதத்தின் உட்பொருளை அறிந்த அந்தணர்களை வதைத்தல் அல்லது துன்புறுத்தல் மற்றும் ஒருவரிடம் தற்கொலை எண்ணங்களை உருவாக்குதல் போன்றவற்றால் “பிரம்மஹத்தி தோஷம்” ஏற்படுகிறது.
ஏதேனும் ஒரு பொருளிற்கோ,பொன்னிற்கோ ஆசைப்பட்டு ஒரு உயிரை வதம் செய்தால் இந்த தோஷமானது பற்றிக்கொள்ளும்.பெற்றோர்களை கவனிக்காமல் தனியாக விட்டு விட்டாலும் இந்த தோஷம் ஏற்படும்.இந்த பாவமானது நமது தலைமுறைகளையும் தொடரும் .
ஒருவரை அவமானம் செய்து தற்கொலைக்கு தூண்ட முயற்சிப்பது “பிரம்மஹத்தி தோஷத்தை” கொடுக்கும்.
பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?
பிரம்மஹத்தி தோஷம் உடைய ஜாதகர்கள் வாழ்வில் நிம்மதி இருக்காது. தேவையில்லாத எதிர்மறை எண்ணங்கள் அவர்களை துன்புறுத்தும்.இந்த தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் திருமண தாமதம் ஏற்படும்.
கல்வி, வேலை மற்றும் குழந்தைப்பேறு இவற்றில் பல பிரச்சனைகள் ஏற்படும்.அதிக அளவில் சம்பாதித்தாலும் கையில் பணம் தங்காது.கனவுத் தொல்லைகள், தாங்கள் நடத்திவரும் தொழிலுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்கள் இருந்து வரும்.நல்லறிவு ,நல்ல பழக்கங்கள், நல்ல உழைப்பு போன்றவை இருக்கும் ஆனால் தகுந்த பலன்கள் கிடைக்காது.
பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட கடவுள்கள்
- பைரவர் – பிரம்மனின்தலையைக் கொய்தமையால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
- சப்த கன்னியர்- மகிஷாசுரன் என்னும் அரக்கனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
- ராமர்- ராவணனை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
- வீரசேனன், வரகுணபாண்டியன்-பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
பிரம்மஹத்தி தோஷ பரிகாரங்கள்
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்று பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியே வர வேண்டும். அங்கே அதற்குரிய யாகம் நடத்த வேண்டும். இது மிகவும் சிறந்த பரிகாரமாகும் .
பிரம்மஹத்தி தோஷத்திற்கு குலதெய்வத்தை முதலில் வணங்கி விட்டு ராமேஸ்வரம் காசி, கயா, கங்கை உள்ளிட்ட புனித தலங்களில் நீராடி இறைவனை வணங்கி வந்தாலும் பலன் பெறலாம்.
அமாவாசை தினத்தன்று மாலை சிவன் கோவிலுக்கு சென்று 9 சுற்றுகள் சுற்றி வணங்கி வரவேண்டும் 9 அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கி சிவனுக்கு மூன்று அகல்விளக்கு ஏற்றி அர்ச்சனையும், அபிஷேகமும் செய்து வந்தால் ‘பிரம்மஹத்தி தோஷம்’ நீங்கும்.
பழமையான சிவன் கோவில்களில் அனைத்து சன்னதிகளிலும் பஞ்சக்கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கேற்றி வந்தால் ‘பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்’ என்பது ஐதீகம்.
ராமேஸ்வரம் கடலில் நீராடி அனைத்து தீர்த்தங்களிலும் குளித்து ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி ஜடாமகுடேஸ்வரரை வழிபட்டு வந்தால் ‘பிரம்மஹத்தி தோஷம்’ நீங்கும்.
திருவண்ணாமலை அருகில் வில்வராணி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் இவரை வணங்கினால் ‘பிரம்மஹத்தி தோஷம்’ நீங்கி நற்பலனை பெறலாம்.
மேலும் செல்ல வேண்டிய கோவில்கள்
- பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோயில், கண்டியூர், தஞ்சாவூர்.
- திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், நாகப்பட்டினம்.
- ஆலந்துறையார் திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர்.
- கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்,கோட்டூர் ,திருவாரூர்.
- திருநோக்கி அழகிய நாதர் திருக்கோவில், திருப்பாச்சேத்தி, சிவகங்கை.
- அமணீஸ்வரர் திருக்கோயில், மஞ்ச நாயக்கனூர், கோயம்புத்தூர்.