அட்சய திருதியை
அள்ள அள்ள குறையாமல் செல்வத்தை அள்ளித் தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது அட்சய திருதியை.அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால் அது பல மடங்கு புண்ணியத்தை தரும்.
அட்சயம் என்றால் வளரக்கூடியது, அழியாதது என்று அர்த்தம். சயம் என்றால் தேய்தல் அட்சயம் என்றால் தேயாது, குறையாது வளர்தல் என்று பொருள்படும். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் அமாவாசை அடுத்து வரும் வளர்பிறை திருதியை நாளை அட்சய திருதியை நாளாக கொண்டாடுகிறோம்.
இந்த வருடம் ஏப்ரல் 23 ஞாயிற்றுக்கிழமை அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இம்முறை ஏப்ரல் 22ஆம் தேதி அந்த திதி வந்து விடுகிறது.
அட்சய திருதியை அன்று தங்க நகை வாங்கினால் அது பல மடங்காக பெருகும் எனக் கூறப்படுகிறது. எனவே தங்கம் வாங்க சிறந்த தினமாக அட்சய திருதியை விளங்குகிறது. அதேசமயம் தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும், தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும். அன்று நாம் தொட்டது துலங்கும்.
அட்சய திருதியை அன்று செய்யப்படும் பிதூர் தர்ப்பணம் பல தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையும். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு வறுமை நீங்கி வளமான வாழ்வு அமையும்.
அட்சய திருதியை அன்று பிறருக்கு பானகம், நீர்மோர் வழங்குவது சிறப்பு. தண்ணீர் தானம் கூட சிறந்தது. அட்சய திருதியையின் பல சிறப்புகள் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.
அட்சய திருதியை நாளில் என்ன செய்ய வேண்டும்
மூன்றாம் திதியில் இணைந்த செயல்கள் யாவும் முன்னேற்றத்தை தரும். அதனால் தான் நல்ல காரியங்களை தொடங்குவதற்கு திருதியை உகந்தது என பரிந்துரைக்கிறது முகூர்த்த சாஸ்திரம்.
க்ஷயம் என்றால் குறை; அக்ஷயம் என்றால் நிறை. நிறைவை வழங்கும் திருதியை அக்ஷய திருதியை என வழங்கப்படுகிறது. அந்த நாளில் மகாலட்சுமியுடன் இணைந்த ஸ்ரீமத் நாராயணனை வழிபட்டால் குறைவற்ற வாழ்வை பெறலாம்.
வேதம் ஒதுபவர்களை வசந்த மாதவனாக நினைத்து உணவளித்து, உபசரிக்க வேண்டும். நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும்.
க்ரீஷம ருதுவின் தோற்றமாக இருப்பதால் வெப்பத்தை தணிக்கும் வகையில் உடுக்க உடை, தயிர் சாதம், குடை, பாதரட்சை, பானகம், நீர்மோர், விசிறி போன்றவற்றை தானம் தர சொல்கிறது பவிஷய புராணம். அன்றைக்கு கொடுக்கப்படும் பொருள்கள் அவற்றை அளிப்பவருக்கு அக்ஷயமாக, நிறைவாக பெருகும். புண்ணியங்கள் சேரும்.
அக்ஷய திருதியை வசந்த மாதவனையும், வேதம் ஓதுவோரையும், மறைந்த முன்னோர்களையும் வணங்கச் சொல்கிறது பவிஷ்ய புராணம்.
அட்சய திருதியை நாளில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள்
- ஜமக்கனி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் பரசுராமர் மகனாக அவதரித்த நாள்.
- சிவபெருமான் தன்னை வணங்கும் பக்தர்கள் பசியை போக்குவதற்காக அன்னபூரணி தேவியிடம் உணவு பெற்று கொடுத்தார்.
- சூரிய பகவான் கைகளால் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை திரௌபதி பெற்றுக் கொண்டாள்.
- இந்த உலகத்தின் முதன்முதலாக தெய்வ யக்ஞங்களும், பரிகார ஹோமங்களும் இன்று தான் தொடங்கப்பட்டன.
- மதுரை மீனாட்சி அம்மை சுந்தரேஸ்வரர் சுவாமியை திருமணம் செய்து கொண்டார்.
- படைப்பு கடவுளான பிரம்மதேவன் உலகத்தை படைத்தது இந்த நாளில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன.
- அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை நோயுற்றவர்கள் அருகில் அமர்ந்தபடி தண்ணீரை வைத்து ஜபம் செய்துவிட்டு, விபூதி இட்டு கொடுத்தால் அதன் வீரியமும் தாக்கமும் குறைந்து உடல்நலம் தேறும். இந்த மந்திரம் தொடங்கப்பட்டதும் இந்த நாள்தான்.
- ஒரு காலத்தில் பூமியில் நீர் வறண்டு பஞ்சம் ஏற்பட்டபோது வானுலகத்திலிருந்து பகிரத மன்னன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார். கிருதயுகம் என்று புனித ஆன்மாக்களும், தவசீலர்களும் அவதரித்த காலம் தொடங்கிய நாள்.
- மகாபாரத கதையை விநாயகப் பெருமானுக்கு வியாசக மகரிஷி இந்த நாளில் சொல்லத் தொடங்கினார்.
- உத்திரப்பிரதேசம், பீகார் மாநிலத்தவர் அக்ஷய திருதியை சுபநாளில் பொன்மணி ஆகிய நெல்மணியை பூமியில் விதைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
- இந்த நாளில் ஒரிசா மாநிலத்து மக்கள் பகவானை வழிபட்டு தாகத்துக்கு நீர் கொடுக்கும் கிணறு தோண்டும் பணியை செய்கின்றனர்.
அக்ஷய திருதியை நாளில் விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்
அக்ஷய திருதிய நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருள்கள் வாங்குவது இவற்றை விட முக்கியமானது தானமளிப்பதும், முன்னோர் கடன்களை செய்வதும் தான். இல்லாதோருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவுவது இவற்றினாலும் தெய்வ அருளைப் பெறலாம். கோயில்களிலும் தத்தம் இல்லங்களிலும் முறைப்படி பூஜை செய்பவர்களும் திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும்.
அன்று செய்யும் தான தர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் பெறும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தான தர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும். பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும். தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர்சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோர்க்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.
அக்ஷய திருதியை தினம் விலை உயர்ந்த ஆபரணங்கள் பொருட்களை வாங்க மட்டுமின்றி வணிகத்தினை துவங்குதல், பூமி பூஜை போடுதல், புதிய கலையினை கற்க ஆரம்பித்தல் போன்றவற்றிற்கும் உரியதாக கருதப்படுகிறது.