விரும்பிய வாழ்க்கை-வெளிநாட்டு வேலையை பெற்று தரும்-நர்த்தன விநாயகர்
திருச்சி புகைவண்டி சந்திப்பில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் செங்குளம் காலனியில் இந்த நர்த்தன விநாயகர் ஆலயம் உள்ளது.
திருச்சி மன்னார்புரம் அருகே உள்ள செங்குளம் காலனியில் தனிக் கோயிலில் அருள்பாலிக்கிறார் நர்த்தன விநாயகர். இவருக்கு இளவயது பக்தர்கள் அதிகம். காரணம் வேலைவாய்ப்பு அருளும் பெரும் வரப்பிரசாதி அவர்.
சில வருடங்களுக்கு முன்பு அந்த காலனியில் வேலை தேடி அலைந்து கொண்டிருந்த ஒரு இளைஞர் கூட்டம் வேலை தேடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அருகேயிருந்த நர்த்தன விநாயகர் ஆலயத்தை பராமரிப்பது, கோவிலுக்கு வரும் பக்தர்களின் தேவைகளை நிறைவு செய்வது, விநாயகருக்கு சிறப்பாக திருவிழா நடத்துவது என சதாசர்வ நேரமும் அந்த இளைஞர் கூட்டம் அந்த ஆலயத்தை சுற்றி வந்தது.
விரைவில் கணபதியின் கனிவான பார்வை அவர்கள் மேல் பதிந்து அதன் பலன் அந்த இளைஞர்கள் கூட்டத்தில் ஒருவர் பின் ஒருவராக அனைவருக்கும் வேலை கிடைக்க தொடங்கியது. அதுவும் வெளிநாட்டில் எல்லா இளைஞர்களும் வெளிநாட்டிற்கு சென்று நன்றாக சம்பாதிக்க தொடங்கி விட்டனர்.
இருந்தாலும் தங்களை காத்து வாழ வைத்த நர்த்தன விநாயகரை அவர்கள் என்றும் மறப்பதில்லை. தாயகம் திரும்பும் போதெல்லாம் இக்கோவிலுக்கு வந்து நர்த்தன விநாயகரை தரிசித்து நன்றி கூறத் தவறுவதில்லை.
குரு பெயர்ச்சி நாட்களில் ஆலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும், பிரதோஷம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரியன்று சங்கரர், பவானி இருவருக்கும் 4 கால சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. கந்தசஷ்டி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவதுடன் முருகப்பெருமானின் திருக்கல்யாண உற்சவமும் அற்புதமாக நடைபெறுகிறது.
விஷ்ணு துர்க்கைக்கு செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. தாங்கள் விரும்பியபடி வாழ்க்கை துணை அமைய இத்தல துர்க்கை அருள் புரிவது உண்மை என்கின்றனர். அப்போதைய கன்னியரும் இப்போதைய சுமங்கலிகளும்.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள நர்த்தன விநாயகர் ஆலயம் முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் அழகான விசாலமான மகா மண்டபம் உள்ளது. வலதுபுறம் விஷ்ணு துர்க்கை நின்ற கோலத்தில் தரிசனம் தர, எதிரே அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் மூலவர் நர்த்தன விநாயகர் நடமாடும் கோலத்தில் அருள்பாலிக்கிறார். விநாயகர் சதுர்த்தி மற்றும் சித்திரை முதல் நாள் என ஆண்டுக்கு இருமுறை நர்த்தன விநாயகர் வீதி உலா வருவதுண்டு.
திருச்சுற்றின் மேற்கில் ஆதிவிநாயகர், நாகர்கள் மற்றும் தலவிருட்சமான அரசமரமும்,அடுத்து முருகன் ஞானாஸ்கந்தன் என்ற திருநாமத்துடன் வள்ளி-தெய்வானையுடனும், தொடர்ந்து தன் மகன்களுக்கு துணையாக சிவபெருமானும் பார்வதியும் சங்கரர்,பவானி என்ற திருநாமங்களுடன் தனி சன்னதியிலும் அருள்பாலிக்கிறார்கள்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …