திருவெம்பாவை பாடல் 3
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்
தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற்
பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம்
அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர்
எம்பாவாய்.
பொருள்:
இந்தப் பாடலும் உரையாடல் நடையிலேயே அமைந்துள்ளது.
தோழியர், தம் தோழி ஒருத்தியின் வீட்டு வாயிற்படிக்கு வருகிறார்கள். எப்போதும் காத்திருப்பவள் அந்தத் தோழி. இன்றோ அவள்
இல்லக் கதவு கூடத் திறக்கக் காணோம். அதனால், தோழியர், தம் தோழியை நோக்கி,
“முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்
தெதிரெழுந்தென்
அத்தன்ஆ னந்தன் அமுதனென்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்”
முத்தைப் போல் ஒளி வீசும்
வெண்ணிறமான பற்கள் மின்ன புன்னகை
செய்பவளே !! ,
நீ எப்போதும் எங்களுக்கு முன்பே எழுந்து, எங்கள் எதிரே வந்து, சிவனார்
என் தந்தை, ஆனந்தமான வடிவுடையவன், இறவா நிலை தரும் அமுதத்தின் உருவானவன் என்றெல்லாம், வாயூறும்படி இனிப்பாகப் பேசும் தன்மையுடையவள். இன்று நீ, அவ்வாறெல்லாம் செய்யாது இன்னும் உறங்குதல் ஏன் ?. வந்து உன் வாசற்கதவைத் திற !!.. என்கிறார்கள்.
“புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற்
பொல்லாதோ”=
இருக்கும் தோழி, ‘நீங்களெல்லாம், அதற்கு உள்ளேஇருக்கும் தோழி, ‘நீங்களெல்லாம், சிவனடியார்க்கு உளவாகிய பத்துக் குணங்களைக் கொண்டிருப்பவர்கள், ஈசனின் பழமையான அடியார்கள்(அதாவது பக்குவம் மிகுந்த பழமானவர்கள்). ஒழுக்க நெறிகளை விடாது ஓம்புபவர்கள். நானோ புதியவள் அத்தனை பக்குவமில்லாதவள். எனது குறைகளைத் தீர்த்து, உங்களுள் ஒருத்தியாக என்னை ஏற்றுக் கொண்டால் அது தீயதாய் முடியுமோ!’ என்று பதிலுரைக்கிறாள்.
“எத்தோநின் அன்புடைமை எல்லோம்
அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை”
அதற்கு தோழியர், ‘உன்
அன்புடைமையை நாங்கள் அறிய
மாட்டோமா?, நன்றாக அறிவோம். நம்
போல், சித்தம் அழகானவர்கள், சிவனைப்
பாடாது இருப்பாரோ! (ஆகவே, நீயும் எழுந்து வந்து பாடு!).
“இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்”= நீ எழுந்து வருதல், சிவனைச் சிந்தித்தால், சிவனைப் பாடுதல், ஆகிய இவ்வளவே எங்களுக்கு வேண்டும்என்று பதிலுரைக்கிறார்கள்.
இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சைவ சித்தாந்தத்தின் முப்பொருள் உண்மைகளுள் ஒன்றான பதியாகிய இறைவனார், முதல் பாடலிலும், பாசம் இரண்டாவது பாடலிலும், பசு வாகிய ஆன்மாக்களைக் குறித்து மூன்றாவது பாடலிலும் மறைமுகமாகச் சுட்டுகின்றார் மாணிக்கவாசகப் பெருமான்.
தோழி, ‘இறைவனை, தன் தந்தை எனப் பேசுகிறாள்’ என்று சொல்வதன் மூலம், உயிர்களுக்கு எல்லாம் பதியாகிய, இறைவனைச் சுட்டி, அதன் மூலம் உயிர்கள் பற்றிக் குறிப்புத் தருகிறார்.
உயிர்கள், மாயையால் மயங்கும் தன்மையுடையன. ஆன்மீக உயர் நிலையை அடைந்த ஞானியரைக் கூட மாயையின் மந்திரக்கோல் தட்டாது விட்டு வைப்பதில்லை.ஞானியரும் யோகியரும் எந்நேரமும் மாயையின் சதிராட்டத்துக்கு ஆட்படாது தம்மைத் தற்காத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது.
இப்பாடலில், பக்தி மிகுந்திருந்த தோழி, ஒரு நாள் உறக்கம் விட்டே எழாததால் தோழியர் அவளை எழுப்புகிறார்கள். அவளை மீண்டும் சிவபக்தி செய்ய அழைக்கிறார்கள். பாசத்தால் சூழப்பட்ட உயிர்கள், உயர் நிலை நோக்கி எழுந்து வருங்கால், அவ்விதமே தொடர வேண்டும் என்பதும், எக்காரணம் பற்றியும், பழைய நிலைக்குத் திரும்புதல் சரியல்ல என்பதும் உட்பொருளாகச் சொல்லப்பட்டது.
முத்தன்ன வெண்ணகையாய் = முத்து என்பது நவக்கிரகங்களில் சந்திரனுக்குரியது. சந்திரன் மனோகாரகன். அம்பிகையின் அம்சமே சந்திரபகவான் என்றும் கூறுவதுண்டு. ஒரு பரம்பொருளாகவும், அருவுருவினனாகவும் இறைவனைத் துதித்த மாணிக்கவாசகப் பெருமான், இந்தப் பாடலில், உருவில் இரண்டான, அம்மையப்பனாகத் துதிக்கிறார்.
மேலும், மஹாமாயையான அம்பிகையின் கருணை இருந்தாலன்றி, மாயத்திரை விலகாது. பரிபூரண நிலை கிட்டாது. ஆகவே
மறைமுகமாக அம்பிகையைத் துதிக்கிறார்.
முத்து மாலை அணியும் போது, பெண்களுக்கு அழகும் மென்மையும் மேம்படுகின்றது. சந்திரனின் சாதகமான ஒளி அலைகள்
ஈர்க்கப்பட்டு, பெண்களின் பிரத்தியேக நோய்கள் தீர்கின்றன. மன அமைதி, படபடப்பு குறைதல், மன ஒருமைப்பாடு, தெளிந்த சிந்தனை ஆகியவை ஏற்படுகின்றன. பெண்தெய்வங்கள், முத்து மாலை அணிந்திருப்பதாகக் கூறுவர்.
(வார்குங்கும முலையும் முலை மேல் முத்து
மாலையுமே’ அபிராமி பட்டர்)
மனமானது முத்தைப் போன்ற வெண்மையும், தெளிந்த சிந்தனை மற்றும் நற்குணங்களாகிய ஒளியும் பொருந்தி இருந்தாலே, இறைவனை அடைய முடியும். மனத்தூய்மையின் முக்கியத்துவமும் இவ்வரியில் சுட்டப்பட்டது.
யோகியரும் ஞானியரும், புன்னகை பூத்த மலர்ந்த முகத்தினர். அந்நிலையில் இருப்பவள் தோழி என்பது, ‘வெண் நகையாய்’ என்று
கூறப்பட்டது.
“பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்”
== இந்த வரிக்கு, ‘ஈசன் மீது பற்று
வைத்திருப்பவர்’ என்றும் பொருள்
கூறுவதுண்டு. ஆயினும், பத்து உடையீர் என்பது,
சிவனடியார்க்கு உளவாகிய பத்துக்
குணங்களையே குறிப்பது கண்கூடு(பத்து
குணங்கள் == சிவனடியார்கள், சிவனைச்
சிந்திக்கையில், 1. அவர் குரல் தழுதழுக்கும்,2.நாக்குழறும்,3.உதடுகள் துடிக்கும்,4. மெய்சிலிர்க்கும், 5.வியர்க்கும், 6.மயிர்க்கூச்செறியும்,7. கால்கள் பின்னும், 8. கண்களில் நீர் அரும்பும்,9. அன்பு மீதூற அழுவதும் தொழுவதும்செய்வர், 10. தன் உணர்வு இழந்து சமாதி நிலை எய்துவர்.
‘பாங்குடையீர்’ என்பதை, தொடர்ந்த யோக சாதனையில் ஈடுபட்டு விடாது ஒழுகுபவர் என்றும் பொருள் கொள்ளலாம். இதன் மூலம்
எழுப்பும் தோழியர், பரிபக்குவ நிலையை அடைந்த ஆன்மாக்கள் என்பது மீண்டும் நிறுவப்படுகின்றது.
‘சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை’ == மிக ஆழமான பொருளுடையது இந்த வரி.மனம் அழகியர் என்று கூறாமல் சித்தம் அழகியர் என்று கூறுதல் சிந்திக்கத் தக்கது. இறைவன் உயிர்களின் சித்தாகாசத்தினுள் வீற்றிருப்பவன்.
ஆகாசம், பூதாகாசம், சித்தாகாசம், சிதாகாசம் என மூவகைப்படும். நாம் வெளியில் பார்ப்பது பூதாகாசம். சித்தாகாசம் ஏற்கெனவே நடந்தது, நடப்பது, நடக்கப்போவது அனைத்தும் உள்ளடக்கியுள்ளது. இதன் ஒவ்வொரு அணுவும் ஞானமயமானது. ஞான மயமான இறைவன் அதில் வீற்றிருக்கிறான். நாம் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே, இந்த சித்தாகாசத் தொடர்பினால், நாம் வாழப் போகும் வாழ்வு குறித்து அனைத்தும் அறிந்து கொள்கிறோம், ஆயினும், பிறக்கும் போது மாயையால் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டு விடுகின்றன. சிதாகாசம் என்பது படைப்பவனையே குறிக்கும்.
‘அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும்’ என்கிறார் அபிராமி பட்டர்.
தொடர்ந்த தியானத்தின் மூலம், எண்ணங்களற்ற நிலையை அடைந்து, அதைக் கடந்த சிதாகாச நிலையில் இறைவனோடு ஒன்றியிருப்பவர்கள், மிக உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் தோழிகள் என்பது உட்குறிப்பு.
பெரும்பாலான நூல்களில், ‘இத்தனையும் வேண்டும்’ என்பதற்கு, ‘உன்னைப் போய் எழுப்ப வந்தோமே, எங்களுக்கு இதுவும்
வேண்டும், இன்னமும் வேண்டும்’ என்பதாகப் பொருளுரைக்கப்பட்டிருக்கிறது.
‘பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே; அன்பால்.’என்ற வரிகளுக்கொப்ப, மிக உயர்ந்த ஆன்மீக
நிலையை அடைந்தோர், அதனின்றும் வழுவியர் பால் இரக்கம் கொண்டு திருத்த முனைவரே
அன்றி சலித்துக் கொள்ள மாட்டார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.
‘மாயையால் வழுவிய நீ, மீண்டும், உன் யோக சாதனைகளைத் தொடர்ந்து, எம் போல் ஆகுதல் வேண்டும். இவ்வளவும் உன் ஆன்மா
கடைத்தேற, நீ செய்தல் வேண்டும்’ என்பதையே, ‘இத்தனையும் வேண்டும்’ என்ற சொல் குறிக்கிறதென்று நினைக்கிறேன்.
மாணிக்கவாசகப் பெருமான் மலரடிகள் போற்றி !!.