திருவெம்பாவை பாடல் 9
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்
பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப்
பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே
பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.
இது வரை நாம் ஓதிய பாடல்களில்,தோழியர்கள், தம்மைச் சேர்ந்தோரை ஒவ்வொருவராக எழுப்பிய வகை கூறப்பட்டது.இந்தப் பாடலில், அவர்கள் எல்லோரும் பாவை நோன்புக்காக ஒருங்கு கூடிய பின், முதற்கண் இறைவனைப் பாடித்துதிப்பது கூறப்படுகின்றது ..
பொருள்:
‘முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
காலத்தால் மிகவும் முற்பட்டனவென்று அறியப்பட்ட பழம்பொருள்களுக்கும், முற்பட்ட பழமையான பரம்பொருளே !!..
‘பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப்
பெற்றியனே’
பின்னர் தோன்றப்போகும் புதிய பொருள்களுக்கும் புதிய பொருளாகி நின்ற தன்மை உடைய இறைவனே !!.
‘உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே
பாங்காவோம்’
உன்னை ஆண்டவனாகப் பெற்ற, சிறப்புப் பொருந்திய அடியார்களாகிய நாங்கள், உன் தொண்டர்களது திருவடிகளையே
வணங்குவோம் !!.. அவர்களுக்கே உரிமை உடையவர்களாக எங்களைக் கருதிக் கொள்வோம் !!..
‘அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப்
பணிசெய்வோம்’
அத்தகைய சிவபக்திச் செல்வர்களே எங்களுக்கு கணவராவார்கள் !!.. அவர்கள் உகந்து கட்டளையிட்ட பணிகளை, அவர்கள் மனதோடு பொருந்தி நின்று, அவர்களுக்கு அடியவராய் ஏவல் செய்து முடிப்போம்.
‘இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய் ‘
எங்கள் பெருமானாகிய இறைவனே !!.. எங்களுக்கு நாங்கள் விரும்பிய இம்முறையிலான வாழ்வைக் கிடைக்குமாறு அருள் செய்வாயாக. அவ்விதம் செய்வாயாயின், நாங்கள் குறையும் இல்லாது இருப்போம் !!