திருவெம்பாவை பாடல் 6
மானேநீ நென்னலை நாளைவந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட்
கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன்
வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர்
எம்பாவாய்.
பொருள்:
“மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ”
“மான் போல மருளும் பார்வை அழகையுடைய பெண்ணே !! , ‘நாளை நானே வந்து உங்களை எழுப்புவேன்’ என்று நேற்று நீ சொன்னாய். அப்படி சொல்லிச் சென்ற நீ போன திசையைச் சொல்வாயாக .. ‘நாம் நேற்று சொன்ன சொல்லைக் காக்கவில்லையே’ என்ற நாணம் சிறிதும் இல்லாமல், இன்று நீ இன்னமும் எழாமல் தூங்குகின்றாயே ?!!.. உனக்கு இன்னமும் பொழுது விடியவில்லையா !!.. “
“வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட்
கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன்
வாய்திறவாய்”
‘இப்பூவுலகும், வானுலகும், பிற உலகங்களும் அறிவதற்கு அருமையானவன், நம் மீது பெருங்கருணை கொண்டு, தானாகவே உவந்து, நம்மை ஆட்கொண்டருள வந்தவனின் நெடிய கழல்கள் அணிந்த திருவடிகளைப் பாடி வந்த எமக்குப் பதில் கூறுவதற்காக, உன் வாய் திறவாய்.”
“ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர்
எம்பாவாய்”.
“நாங்கள் இவ்வளவு கூறியும், பக்தியால் உன் உடல் உருகி மெலியவில்லை .. இவ்வாறு நீ இருப்பது உனக்குத் தான் பொருந்தும் .. எமக்கும் பிறருக்கும் தலைவனாய் இருக்கும் எம்பெருமானை எழுந்து வந்து பாடுவாயாக !!!.. “