திருவெம்பாவை பாடல் 8
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம்
கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.
பொருள்
அதிகாலைப் பொழுதில் நாம் காணும்காட்சிகள் இப்பாடலில் விவரிக்கப்படுகின்றது ..வாழி (வாழி’ என்ற சொல், ஐந்தாவது வரியின்துவக்கமாக இருந்தாலும், விடியற்காலையில், தோழி எழும் வேளையில் மங்கலச் சொல்லாக, ‘நீ வாழ்வாயாக’ என்ற பொருளில் முதலில் கூறப்பட்டது .. )
பெண்ணே, நீ வாழ்வாயாக …
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
கதிரவன் உதயமாகும் முன்பாகக் கோழி கூவுகிறது .. நாரை முதலான பறவைகள், சத்தமிடத் துவங்குகின்றன …
‘ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்’
திருக்கோயில்களில், ஏழு ஸ்வரங்களாலான இசையை எழுப்பும் ஏழு வித இசைக் கருவிகள் ஒலிக்கத் துவங்குகின்றன. வெண்சங்கு ஒலிக்க, திருக்கோயில்களில் பூசைகள் துவங்கி விட்டன.
‘கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம்
சோதி
உருவானவரும், ஒப்புவமை இல்லாத, கருணைப் பெருங்கடலுமான சிவபெருமானது நிகரில்லாத உயர்ந்த புகழை நாங்கள் பாடினோம் .. உனக்கு அது கேட்கவில்லையா !!..
கேட்டிலையோ’
‘ஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்’
இது எத்தகைய உறக்கமோ ?!! வாயைத் திறந்து பதிலுரைக்கக் கூட மாட்டேன் என்கிறாயே ?!!!… (உன் வாயைத் திறந்து பதிலாவது கூறு என்பதாகவும் கொள்ளலாம்)
‘ஆழியான் அன்புடைமை ஆமாறும்
இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்
திருக்கரங்களில் சக்கரம் ஏந்திய திருமாலைப் போல் இறைவனாரிடம் அன்புடையவள் ஆவேன் என்று நீ உறுதி கூறிய திறம் இவ்வாறோ ?!!! ஊழிக்காலமாகிய பிரளய காலத்தில், யாரிடம் இவ்வுலகப் பொருட்கள் எல்லாமும் ஒடுங்குகிறதோ, முதல்வனாகிய அந்த இறைவனை, உமையொரு பாகனைப் பாட எழுந்து வாராய் !!!!