திருப்பள்ளியெழுச்சி பாடல் 2
சலசல வெனவரும் சலநிறை யாற்றில்
சலநிறை குளம்வாழும் தாமரைப் பூவில்
நலமுடன் அதையூதும் நல்லிசை வண்டில்
நாளுமவ் வண்டுறும் கோதையர் சொல்லில்
நலந்தரு மவர்குழ வியின்மழ லையில்
நன்கதைச் சிறப்பிக்கும் நற்குறள் நூலில்
நிலைபெறும் தமிழ்கண்டோம் நின்னையும் கண்டோம்
நிகழ்தமிழ்த் தாய்பள்ளி யெழுந்தரு ளாயே!
பொருள் : செந்தமிழ்த் தாயே! மிக்க நீர் ஒழுகும் யாற்றிலும், குளத்திலும், தாமரைப் பூவிலும், வண்டின் இசையிலும், மகளிர் பேச்சிலும், குழந்தையின் மழலையிலும், திருக்குறளிலும் இனிமையைக் கண்டோம்; நின்னையும் கண்டோம்; பள்ளியெழுந்தருள்வாயாக.