சனி பெயர்ச்சி பலன்கள் 2025 – கடகம்
(புனர்பூசம் 4ம் பாதம் ,பூசம் 1,2,3,4ம் பாதம் ,ஆயில்யம் 1,2,3,4ம் பாதம் )
கடக ராசியும் சனியும்
கடக ராசிக்கு சனி 7 மற்றும் 8-ஆம் அதிபதி. அவர் இவ்வளவு நாளும் கடக ராசியின் எட்டாம் இடத்தில் அஷ்டம சனியாக அமர்ந்திருந்தார். இப்போது 9-ஆமிடத்திற்கு மாறி யோக சனியாக அமர்ந்துள்ளார்.
கடக ராசி
இதன் அதிபதி: சந்திரன்
உருவம்:நண்டு
வகை: சர ராசி
தத்துவம்: நீர்
திசை: வடக்கு
நிறம்: முத்து வெண்மை
கடவுள்: ஆதிபராசக்தி
குறிப்பு : சந்திரன் ஆட்சி ,செவ்வாய் நீசம் ,குரு உச்சம்
சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025
இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
சனி அமர்ந்த இடத்தின் பலன்கள்
சனிபகவான், கடக ராசியின் 9-ஆமிடத் திற்கு மாறுகிறார்.இதனால் கடக ராசியினருக்கு அதிர்ஷ்ட நிகழ்வுகள் அமைதியாக அமையும். நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்வோருக்கு செய்யும் வேலையில் மேன்மை வரும். வேலையில் உள்ள இன்னல் தீரும். சுபக் கடன் வாங்குவீர்கள். உங்கள் எதிரிகள் பலமிழந்துவிடுவர்.
திருமணம் நடக்கும். இப்போது நடக்கும் திருமணத்தில் நன்மையும்- தீமையும் 50 என்ற அளவில் இருக்கும் அல்லது திருமணம் நடக்கும் போது சில இடர்பாடுகள் தலை தூக்கும்.இப்போது கிடைக்கும் வாழ்க்கைத்துணை அல்லது தொழில் பங்குதாரர் கொஞ்சம் சோம்பேறியாகவும், நிறம் குறைந்தவராகவும் அமைவார்.
நீங்கள் சந்திக்கும் நபர்கள், மனதில் பொய்யும் வாக்கில் உண்மை போலவும். பேசுவர் உங்கள் முதலாளிகள் நல்லவர் போல் பேசி செமத்தியாக வேலை வாங்கிவிடுவர்.
இப்போது மாறும் வீடு நன்மையாக இருக்கும். வேலை விஷயமாக வெளிநாட்டு, வெளியூர் பயணம் உண்டு உங்கள் இளைய சகோதான் மேல்கல்வி விஷயமாக கடல் தாண்டுவார். உங்கள் மாமனார், ஆன்மிக விஷயமாக வெகுதூரப் பயணம் மேற் கொள்வார். கம்ப்யூட்டர் சம்பந்த வேலை கல்வி பெற்றவர்கள் மிக பயணம் மேற்கொள்வர். சோதிடர், வழக்கறிஞர்களும் அலைந்து தொழில் செய்வர் பணியாளர்கள் ஏனோ அடிக்கடி மாறும் நிலை ஏற்படும்.
2025 மார்ச் 29 முதல் ஏப்ரல் 27 வரை
இப்போதில் சனிபகவான் கடக ராசியின் 9-ஆமிடத்தில் பூரட்டாதி நட்சத்திரம் எடுப்பார். ஒரு வேலை கிடைத்து விடும். அதன்வழி சற்று குறுக்காக இருக்கும். வேலையின் பொருட்டு வெளிநாடு செல்லலாம். அதன் காரணம் சற்று கருப்பாக அமையும். சிலருக்கு திருமணம் நடக்கும். குறைந்தபட்சம் இரண்டாயிரம் பொய் சொல்வீர்கள். இத்தனை பொய்யின் மேல் கல்யாணம் நடக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். சாட்சிகளைப் பல்டியடிக்க வைத்து விடுவீர்கள். சிறையில் இருந்து வெளிவந்து விடலாம். நிறைய கள்ளத்தனத்தால் இந்த விடுதலை கிடைக்கும்.
உங்களில் சிலர், அபாண்டமாக பொய் கூறி, வாழ்க்கைத் துணையை பிரிந்து விடுவீர்கள். இதேபோல் உங்கள் வணிகப் பங்குதாரரையும் பொய் காரணம் கூறி பிரித்துவிட்டு, நீங்கள் மட்டும் தனி முதலாளி ஆகிவிடுவீர்கள். உங்கள் எதிரிகளை ரொம்ப சிரமப்பட்டு சிறைக்கு அனுப்பிவிடுவீர்கள். இப்போது நடக்கும் சம்பவங்கள் தீபத்தின் அடியில் கருப்பு போல் நல்ல விஷயங்களில் கள்ளத்தனம் இருக்கும். சனி உங்கள் 8-ஆம் அதிபதியும் ஆவதால் இவ்விதம் நடக்கும்.
2025 ஏப்ரல் 27 முதல் 2026 மே 17 வரை
இக்காலத்தில், கடக ராசியின் 9-ஆமிடத்தில் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் எடுத்துக் கொள்வார். உங்கள் வர்த்தகத்தை மிக செழுமைபடுத்தி விடுவீர்கள். அதற்கு நிறைய அண்டர் கிரவுண்ட் வேலைகள் செய்திருப்பீர்கள். அரசியலில் ஒரு நல்ல பதவியை கைப்பற்றி விடுவீர்கள். அதற்கு எத்துனை ஆட்களை ஓரங்கட்டினீர்கள் என்பது உங்களுக்கு மட்டும்தான் தெரியும்.
உங்கள் வாழ்க்கைத் துணையின் சொத்துக்களை, அகடவிகடம் செய்து, உங்கள் பெயருக்கு மாற்றிவிடுவீர்கள். உங்கள் தந்தையின் சொத்துக்களை உங்கள் பெயருக்கு மட்டும் வரும்படி உயில் எழுத செய்துவிடுவீர்கள். பரம்பரை சொத்துக்களில் பெரும்பங்கு உங்களுக்கே சேரும்படி செட்டப் பண்ணி விடுவீர்கள். உங்கள் குடும்ப இன்ஸ்யூரன்ஸ் பணம் உங்கள் கைக்கு கிடைக்கும்படி வேலை செய்து விடுவீர்கள்.
உங்கள் தாய் மாமன், தந்தை இவர்களது சொத்தும் உங்கள் கைக்கு கிடைக்கும் படி ஏற்பாடு செய்து விடுவீர்கள். இப்போதைய காலகட்டத்தில் நிறைய அதிர்ஷ்டம் பெருக்கெடுக்கும். அத்தனையிலும் திருட்டுத்தனமும், போக்கிரித்தனமும் ஒளிந்திருக்கும். மனசாட்சியா அப்படினா என்ன என்று கேட்பீர்கள்.
2026 மே 17 முதல் 2027 ஜூன் 3 வரை
கடக ராசியில் 9-ஆம் இடத்தில் அமர்ந்த சனி, இப்போதில், ரேவதி நட்சத்திரம் மாறுவார் சென்ற வருடத்தில் நிறைய சொத்தை சேர்த்து வைத்திருப்பீர்கள் இப்போது அதை செலவழித்து அனுபவிக்க வேண்டுமே. அதற்கான வேலையை ஆரம்பித்து விடுவீர்கள். வெளிநாட்டுக்கு மனைவியுடன் சுற்றுலா செல்வீர்கள். உங்கள் தந்தை தூரத்தில் உள்ள ஆன்மிகத் தலம் செல்வார். தூங்குவதற்கு நல்ல விலை அதிகமான படுக்கை, மெத்தை, கட்டில் வாங்குவீர்கள். தம்பியின் மனைவிக்கு அல்லது இளைய சகோதரனின் திருமணத்திற்கு நிறைய செலவு செய்வீர்கள். விலை அதிக மான கைபேசி வாங்கி விடுவீர்கள்.
சில பணியாளர்களை நீக்கிவிட்டு, வேறு வேலையாட்களை நியமித்துக் கொள்வீர்கள். விலை மதிப்பான இரு சக்கர வாகனம் வாங்குவீர்கள். உங்கள் முதலீடுகளை வெளிநாடு சென்று செய்வீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி விஷயம் சார்ந்து உள்நாடு வெளிநாடு என்று சுற்றுவீர்கள். எவ்வித செலவு செய்தாலும் எங்கு பயணம் மேற்கொண்டாலும், அதில் ஒரு வகை லாபமும், ஒரு வகை மறைவும் இருக்கும்.
சனியின் பார்வை பலன்

சனிக்கு 3, 7, 10-ஆம் பார்வை உண்டு.
3-ம் பார்வை பலன்
சனி, கடக ராசியான 9-ஆம் வீட்டில் இருந்து, தனது மூன்றாம் பார்வையால், உங்களின் 11-ஆம் வீட்டை பார்க்கிறார். இந்த சனி பார்வை எதையும் மட்டுப்படுத்தும்.
எனவே நீங்கள் எண்ணியது நடப்பது சற்று தாமதமாகும். அரசியல் நொண்டி அடிக்கும். உங்கள் மூத்த சகோதரி சற்று சிரமப்படுவார். உங்கள் மருமகள் உங்களுடன் மனப்பிணக்கு கொள்வாள். உங்களின் சில வார்த்தைகள், குடும்பத்தில் ஒற்றுமையை குலைக்கும். இதுபோல உங்கள் நண்பர்களிடத்திலும் நடக்கும். உங்கள் தொழில் லாபங்களை, வரவை தாமதப்படுத்துவார். இதற்கு உங்களின் கவனக் குறைவும், ஞாபகமறதியும் காரணமாக அமையும்.
அரசியல்வாதிகள் அதிலும் குறிப்பாக கடக பெண் அரசியல்வாதிகள் பயணங்களை மேற்கொள்ள இயலாமல் ஒரே இடத்தில் முடங்கும் நிலை உண்டாகும். சமையல் முடிய வெகு நேரமாகும். உங்கள் பகுதி சொஸைட்டி, கிளப் என இவற்றில் தலைமை பதவி வகித்தால், அதனை தொடர் முடியாத நிலை உருவாகும்.
சனியின் 7-ஆம் பார்வை பலன்
கடக ராசிக்கு சனி தனது ஏழாம் பார்வை யால், ராசியின் 3-ஆமிடத்தை முறைத்துப் பார்க்கிறார். இந்தப் பார்வை, உங்களின் தைரியத்தை வெகுவாகக் குறைக்கும். அட மற்ற விஷயங்களிலும் கொஞ்சம் சொங்கி ஆகிவிட்டோமோ எங்காவது ரகசியமாக வைத்தியரைப் பார்க்கலாமா என்றெல்லாம் மானாவாரியாக நினைப்பு தோன்றும். நினைப்புதான் பொழப்பைக் கெடுக்கும். உங்கள் இளைய சகோதரன் கொஞ்சம் முரண்டு பிடிப்பான். உங்கள் மாமனார் நான் எங்காவது ரொம்ப தூரம் போனால் தான் ஆச்சு என பாடாய்ப்படுத்துவார்.
சிலர் புத்தகங்களை தேடி அலைவீர்கள். வீட்டில் நிறைய பொருட்களை காணாமல் எங்காவது வைத்து விட்டு தேடுவீர்கள். உங்களில் வயதானவர்கள் தினப்படி பேசும் வார்த்தைகள் நினைவுக்கு வராமல் திண்டாடுவார்கள். மருத்துவர் இதற்கு ஒரு நாமகரணம் சூட்டுவார். சனியின் நேர் பார்வையை, கடக ராசியின் 3-ஆமிடம் பெறுவதால், மனதளவில் ரொம்ப குறுகி போகும் நிலை ஏற்படும். யாருக்கும் ஜாமின் கையெழுத்து கண்டிப்பாக போடக்கூடாது. முடிந்த மட்டும் குத்தகை ஒப்பந்தங்களை வீட்டில் வேறு யார் பெயரிலாவது அமைத் துக் கொள்ளுங்கள்.
சனியின் 10-ஆம் பார்வை பலன்
சனி தனது பத்தாம் பார்வையால், கடக ராசியின் 6-ஆம் வீட்டை அதிரப் பார்க்கிறார். எனவே 6-ஆம் வீட்டின் பலனான ருண, ரோக எதிரிகளை அடித்து விரட்டிவிடுவார். உங்கள் நோய்கள் தீர்ந்துவிடும். கடன்கள் அடைந்துவிடும். எதிரிகள் விலகுவர். இதற்கு உங்கள் வேலையில், சனிபகவான் ஏற்றம் தருவதால் கடன்களும் எதிரிகளும் தன்னிச்சை யாக நீங்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் வேலை சம்பந்தமாக சொந்தத் தொழில் ஆரம்பிக்க முடியுமா எனும் சிந்தனை விதையை சனி மண்டைக்குள் தூவுவார்.
வேலை செய்யும் இடத்தில் உங்களின் சுறுசுறுப்பு சற்று மட்டுப்படும். இதற்கு சில சமயம் உங்களின் பெண் நண்பிகள் காரணமாக அமைவர். சிலரின் தாயாருக்கு, உடல்நலம் சற்று குன்றி, பின் சரியாகிவிடும். சிலரின் மறுமணம் நடக்கும்போது, உங்கள் தாயார் குடும்பத்தி னர் சற்று எதிர்ப்பு எண்ணம் கொள்வர்.பெண் அரசியல்வாதிகளின் உடல்நலம் கவனிக்கப் பட வேண்டும்.
உங்களின் உயர் கல்வி பயணத்தின்போது, பயண சீட்டில் சில தவறான பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு, சிறு தடை ஏற்படும்.
கடக ராசி புனர்பூசம் 4 ம் பாதம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்
புயல் ஓய்ந்த நிலை. வேலை பார்க்கும் இடம் அல்லது தொழில், குடும்ப உறவுகள் என எல்லா பக்கமும் இருந்த அலைச்சல், எரிச்சல், குழப்பம் எல்லாம் சுமுகமாக தீர்ந்து விடும். எல்லா பிரச்சனைகளுக்கும் நல்லவிதமான தீர்வு எட்டப்பட்டு எல்லா சண்டைகளும் சரியாகி உறவுகள் சகஜ நிலைக்கு திரும்பி விடுவார்கள். வேலையில் இருந்த தடங்கல் நீங்கிவிடும். சம்பள உயர்வு அவசியம் கிடைக்கும். அயல் நாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும்.
வருமானத்தை மீறி கழுத்தை நெருக்கிக் கொண்டிருந்த செலவுகள் கட்டுக்குள் வந்துவிடும் வெளியிலிருந்து நிதி உதவி அவசியம் கிடைக்கும் இடமாற்றம் வீடு மாற்றம் வேலை மாற்றம் போன்ற பல முன்னேற்றமான மாற்றங்கள் அவசியம் நிகழும்.
பல சுப காரியங்கள் வீட்டில் நிகழும். புதிய வீடு வாங்குதல், பழைய வீட்டை புதுப்பித்தல், வாகனம் வாங்குதல் போன்ற அனைத்தும் கைகூடி வரும்
சனி பகவான் இந்த பெயர்ச்சி காலத்தில் தனது சுயசாரமான உத்திரட்டாதி சாரத்தில் பயணிக்கும் போது புனர்பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அதாவது கடக ராசி புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பல ஆச்சரியமான நன்மைகள் நிகழ்ந்து அவர்களை திக்கு முக்காட வைக்கும், உறவுகளில் யாராவது ஒருவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து அதன் வழியே புனர்பூசம் நான்காம் பாத நட்சத்திர நண்பர்கள் அனுகூலம் அடைவது சனியின் மிகப்பெரிய கருணையாக அமையும். சனி உத்திரட்டாதி சாரத்தில் பயணிக்கும் போது நன்மைகள் நேரடியாக நடக்காது என்றாலும் மறைமுகமாக உறவுகள் மூலமாக அவசியம் நடந்தே தீரும் இது சனி கொடுக்கும் கருணை
புனர்பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் இந்த சனி பெயர்ச்சி காலகட்டத்தில் கல்வி வளர்ச்சியில் திறமை மேம்பாட்டில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால் வாழ்வில் பிற்காலத்தில் பெரிய உயரத்தை தொடலாம்.
இந்த காலகட்டத்தில் அவர்கள் மனது மிகவும் பக்குவம் அடைந்து அதிகமாக கவனம் செலுத்த முடிந்த காலமாக இருக்கும். அதனால் கல்வி மேம்பாடு திறமை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.
புனர்பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் இத்தனை நன்மைகளை சனி பெயர்ச்சியால் அடைந்தாலும் சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும் குறிப்பாக சகோதர உறவுகளில் விரிசல் உண்டாகும் வாய்ப்பு உண்டு. சகோதர உறவுகளில் வாக்குவாதத்தை தவிர்த்து விடுதல் மிகவும் நல்லது. அதே சமயம் சுய கௌரவத்தை பாதிக்காத அளவில் உறவு நிலைகளை அவசியம் பேணி பாதுகாக்க வேண்டும்.அதேபோல் நெருக்கமான உறவுகளின் யாராவது உடல் நலம் குறைந்து இருந்தால் இவர்கள் அதிகம் கவலைப்பட அவசியம் உண்டாகும். காரணம் நெருங்கிய உறவு வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி இரண்டும் கலந்து காணப்படும் காலமாக இருக்கிறது.
தானாக முன்வந்து ஆரோக்கிய மேம்பாட்டில் கவனம் செலுத்துவார்கள் அப்படி செலுத்தினால் மிகுந்த நன்மையை சனி இந்த காலத்தில் தருகிறார்
சனி ரேவதி நட்சத்திர சாரத்தில் பயணம் செய்யும்போது பொருளாதார விஷயத்தில் பணம், கடன், அலுவலக பொறுப்பு ஏற்பு இந்த மாதிரி விஷயங்களில் அதிக கவனமாக இருக்க வேண்டும் காரணம் தனது சக்திக்கு மீறி அகலக்கால் வைத்து விடும் அபாயம் உள்ளது. சனி பகவான் ரேவதி நட்சத்திர சாரத்தில் சஞ்சரிக்கும் போது புனர்பூசம் நான்காம் பாத அன்பர்கள் வாக்குறுதி கொடுப்பதை எச்சரிக்கையுடன் செய்ய வேண்டியது அவசியம்.
கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்
கடக ராசி பூசம் நட்சத்திர அன்பர்கள் மகிழ்ச்சியுடன் இந்த சனி பெயர்ச்சி காலத்தை எதிர்கொள்ளலாம் .முதல் மூன்று காரணம்! சனி இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் சஞ்சாரம் செய்யும் பூரட்டாதி நட்சத்திரம் அதி மித்ர தாரை, உத்திரட்டாதி நட்சத்திரம் ஜன்ம தாரை ரேவதி நட்சத்திரம் சம்ப தாரை.
பெரிய இடத்திலிருந்து உதவிகள், பெரிய இடத்திலிருந்து வியாபார சம்பந்தங்கள், பதவி உயர்வு போன்ற அளவில் அதிகமான நன்மைகள் நிகழ வாய்ப்புள்ள காலகட்டம்.
பதவி உயர்வு, வியாபார அபிவிருத்தி புதிய முயற்சிகள் வழியாக வருமானம் என்று பல வகையில் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் எதிர்பார்க்கலாம். இதுவரை திட்டத்திலேயே இல்லாத புதிய வாய்ப்புகள் பூசம் நட்சத்திர அன்பர்கள் தானாக உருவாக்கி மேம்பாடு அடைவதை சனி தனது பெயர்ச்சி காலத்தில் கருணையாக வழங்குகிறார்.
பல நன்மைகள் கொண்ட காலகட்டம் என்றாலும் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டிய கட்டம் .
கடக ராசி பூச நட்சத்திர அன்பர்கள் எதிரிகள் குறித்து கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கலாம். ஆனாலும் எதிரிகளின் முயற்சிகளை முன் கூட்டியே சனி காட்டிக் கொடுத்து விடுவார், இவர் நமக்கு ஆபத்து தருகிறவர்,இது நமக்கு சாதகம் இல்லை இதை செய்யக்கூடாது என்ற உள் உணர்வு மேலோங்கி நிற்கும் காலம். தொழிலில் உறவுகளின் எதிர்பார்க்கும் போட்டிகளை தனி முன்கூட்டியே உள் உணர்வு மூலம் காட்டிக் கொடுத்து விடுவார். ஆகையால் அதை பயன்படுத்திக் கொண்டு சண்டை சச்சரவு இல்லாமல் விலகி நின்று வேடிக்கை பார்க்கலாம்.
கடக ராசி பூசம் நட்சத்திர அன்பர்களுக்கு சிறு சிறு காயங்கள் அடிக்கடி உண்டாகும். இதன் காரணமாக சின்ன சின்ன மருத்துவ சிகிச்சைகள் மூலம் கொஞ்சம் கொஞ்சம் காசும் பணமும் சேர்த்து வைத்த பொருளும் விரையம் ஆகும். பல நாள் பயன்படுத்தி வந்த பொருள்கள் செயல் இழந்து புதிய பொருள்களை வாங்க வேண்டிய அவசியம் உருவாகும். இது சுப விரயச் செலவாகவே இருக்கும். குறிப்பாக வாகன மாற்றம் நிச்சயம் நிகழும்.
கவனக்குறைவினால் பொருள் தொலைந்து போவது அதிலும் அதிக மதிப்புள்ள பொருள்கள் தொலைந்து போவது நிகழ்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது .ஆகவே இந்த விஷயத்தில் பூசம் நட்சத்திர அன்பர்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்ளும் போது இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்.
இரண்டாவது சொத்து வாங்குதல் பெரிய அளவில் வீடு வில்லா வாங்குதல் போன்றவை நிகழும்.
சனி சஞ்சாரம் செய்யும் போது இருக்கும் தார பலனும் சனி பார்வையால் தூண்டப்படும் நட்சத்திர தாராபலமும் பூசம் நட்சத்திர அன்பர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது ஆகவே இந்த சனி பெயர்ச்சி பூசத்திற்கு அனுகூலமான பயன்களை கொண்டு வந்து தரும்
கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்
சனி பூரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது மித்திர தாரையாகவும் உத்திரட்டாதி நட்சத்திர சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது அதிமித்ர தாரையாகவும் ரேவதி நட்சத்திர சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது ஜென்ம தாரையாகவும் அமைந்து இந்த சனி பெயர்ச்சி கடக ராசி ஆயில்யம் நட்சத்திர அன்பர்களுக்கு பெரிய வரப்பிரசாதம் என்று சொல்ல வேண்டும்.
சனியின் பார்வையால் தூண்டப்படும் நட்சத்திர தார பலன்களும் பெருமளவில் நன்மையை தருபவயாக இருக்கின்றன
கடன் கொடுத்துவிட்டு எப்படி வசூல் செய்வது என்று தெரியாமல் இருந்தவர்களுக்கு நான் வசூல் செய்து தருகிறேன் என்று சொல்லி மிகவும் பலமுள்ள ஒரு நபர் வந்து வசூல் செய்து கொடுப்பது போல் இதுவரை தடங்கலாகி இருந்த அனைத்து விஷயங்களையும் சனி நான் செய்து தருகிறேன் என்று சொல்வது போல் செய்து தருவார்.
என்ன காரணம் என்று தெரியாமல் அலைக்கழித்த பல தடங்கலான விஷயங்கள் காரணமும் தெரிந்து நிவாரணமும் தெரிந்து முன்னேற்றமடைந்து பலன்களை கொடுக்கக் கூடிய காலகட்டம் இந்த சனிப்பெயர்ச்சி காலகட்டம்.
குறிப்பாக ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமண தடை விலகி விரைவில் திருமண பாக்கியம் அமைந்தவர்களாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
இதே போல. குழந்தை பாக்கிய தடை இருந்தவர்கள் அந்தத் தடை விலகி நல்லவிதமாக புத்திர பாக்கியம் அமைந்து மகிழ்ச்சி அடைவார்கள்,
இப்போது தொடங்கலாமா அப்புறம் தொடங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த தொழில் முயற்சிகள் தொடர்பான முக்கிய முடிவுகள் நீங்கள் எடுப்பீர்கள். அப்படி எடுக்கும் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி தரும். லாபம் தரும. சொத்து சேரும் வாகன வசதி பெருகும் அதிகாரம் மிக்க பதவிகள் தேடி வரும் பொது நலம் காக்கும் அமைப்புகளில் பெரிய பொறுப்புகளை கொண்டு வந்து கொடுப்பார்கள்.
இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் சில முக்கியமான விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியம். உதாரணமாக மேலதிகாரிகள் அரசாங்கம் அரசு லைசன்ஸ் தரும் அதிகாரிகள் இவர்களிடம் எச்சரிக்கையாக பேச வேண்டியது அவசியம்.
ஆயில்யம் நட்சத்திர அன்பர்கள் தங்கள் தசா புக்தி காலம் சரியாக இருப்பின் இந்த சனி பெயர்ச்சியால் கிடைக்கும் ஆதாயத்தை கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி விடக்கூடும், மிகப்பெரிய ஆதாயமான ஆதரவான பண வரவு தரக்கூடிய பொருள் வரவு தரக்கூடிய சனிப்பெயர்ச்சி என்று சொல்லலாம்.
கடக ராசிக்கு சனி தரும் மொத்த பலன்
கடக ராசிக்கு, 9 -ஆமிடத்தில் சனி இருந்து, நற்பலன்களை கொடுத்தாலும், நேர் வழியில் கொடுக்க இயலாது. ஆயினும் வேலை கிடைக்கவும் செய்கிறார். கடன்.எதிரி, நோய்களை அழிக்கிறார். மன தைரியத்தை குறுக்கி, நிதான போக்கை கடைபிடிக்கச் செய்கிறார். எனவே ஓரளவு நல்ல பலன்களை அனுபவிக்கலாம்.
சனி வக்ர பலன்
2025 ஜூலை 12 முதல் நவம்பர் 27 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் ஆவார். இந்த காலகட்டத்தில் உங்கள் சொத்து சேர்க்கும் பரபரப்பை கொஞ்சம் தள்ளிவைத்து ஒத்தி போடுவீர்கள் சுற்றி இருப்பவர்கள் உஷாராகி விட்டார்களோ எனும் தயக்கம் வந்து, சூதானமாக நடந்துகொள்வீர்கள். வக்ரம் விலகியவுடன் மறுபடியும் ஆரம்பித்துவிடுவீர்கள்.
2026 ஜூலை 26 முதல் டிசம்பர் 10 வரை ரேவதி நட்சத்திரத்தில் வக்ரம் செலவுகளும் அலைச்சலும் கட்டுப்படும்.
வக்ர காலத்தில் திருவாரூர் எட்டுக்குடி சாலை திருக்குவளை ஸ்தல கோளிலிநாதர் வழிபாடு நன்று.
பரிகாரங்கள்
தஞ்சாவூர் மாவட்டம் விளாங்குளம் அருள்மிகு பூசம் ஸ்ரீ அட்சயபுரிஸ்வரர் திருக்கோவில் சென்று வணங்கவும். சோளிங்கர், ஆஞ்சநேயரை வணங்கவும். அருகில் உள்ள சனீஸ்வரர் சன்னதிக்கு அபிஷேகப் பொருட்கள் வாங்கி கொடுக்கவும். ஆஞ்சனேசயருக்கும் அபிஷேகத்துக்குரிய பன்னீர், இளநீர், பால், தயிர், சந்தனம் என வாங்கி கொடுத்து வணங்கவும். சனி ஸ்தோத்ரம் கூறவும். சனி, கடக ராசியின் 3-ஆமிடத்தைப் பார்ப்பதால், தைரியம் உண்டாக, ஆஞ்சநேயரின்
“புத்திரி பலம் யசோ தைர்யம் நிர்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்பகுதாம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்”
என இந்த மந்திரம் கூறி வழிபடவும். வயதான, வேலை பார்க்கும் தம்பதிகளுக்கு குடிக்க சுத்தமான தண்ணீர் வாங்கிக் கொடுக்கவும்.