விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025: விருச்சிக ராசி
சகோதரகாரனாகிய செவ்வாயை ஆட்சி வீடாகக் கொண்ட விருச்சக ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருந்த குருபகவான் மே 14ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 8ம் இடத்திற்கு செல்கிறார். அக்டோபர் 18ஆம் தேதி முதல் அதிசாரமாக எட்டாம் இடத்தில் இருந்து, 9ம் இடம் வருகிறார். டிசம்பர் 5 முதல் வக்ரகதியில் மீண்டும் 8ம் இடம் செல்கிறார்.
ராகு கேதுக்கள் மே 18ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 5, 11-மிடத்திலிருந்து 4,10மிடம் சஞ்சாரம் செய்கிறார்கள்.
வருடம் முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
இதனால் இவ்வருடம் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. வயிற்றில் கோளாறுகள் ஏற்பட்டு சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும். தனக்கு குரு பலம் குறைந்திருந்தாலும் வரனுக்கு குரு பலம் இருந்தால் திருமணம் முடிவாகும். திருமணம் முடிவானால் காலதாமதம் செய்யாமல் திருமணத்தை முடித்து விடுவது நல்லது. மாணவர்கள் மிகுந்த கருத்துடன் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் கிடைக்கும். இளங்கலை படித்த மாணவர்கள் வேலைக்கு செல்வதை விட மேல் படிப்பு படிப்பதே நல்லது.
தொழில் துறையில் பணம் முடக்கம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையில்லாமல் இடமாற்றம் உண்டாகும். தனியார் துறைகளில் வேலை செய்பவர்கள் வேறு வேலை கிடைக்கும் வரை இருக்கும் வேலையை விட வேண்டாம். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதையோ, கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது நலம். தேவையில்லாமல் கடன் வாங்குவதை தவிர்க்கவும். குழந்தைகள் கல்விக்காக செலவினங்கள் அதிகமாகும்.
பரிகாரம்
வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய்விளக்கு ஏற்றி வரவும். ஒரு முறை திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு வரவும்.
மொத்தத்தில் இந்த வருடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய வருடமாக உங்களுக்கு உள்ளது. 60% மட்டுமே நற்பலன்கள் கிடைக்கும் வருடமாக இந்த வருடம் இருக்கும்.