குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026- விருச்சிகம்
குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்
சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.
கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
விருச்சிகராசி அன்பர்களே! உங்களுக்குக் கடந்த முறை குருப்பெயர்ச்சினால், சிறிய இடைஞ்சல்கள், எதிரிகள், பயம், கோர்ட், கேஸ் பிரச்சனைகள், சிறுகடன் போன்றவைற்றைச் சந்தித்தாலும், அவற்றிலிருந்தும் நீங்கள் வெற்றியைத் தான் பெற்றீர்கள். அதே சமயம், வியாபார முன்னேற்றமும், புது தொழில் வாய்ப்புகள், எதிர்பார்த்த லோன் கிடைத்தல், பெரிய மனிதர்களின் ஆதரவு, எதிர்பாராத பண உதவி, உத்யோகத்தில், மதிப்பும், மரியாதையும், விரும்பிய இடமாற்றம், சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற நன்மைகளை அடைந்தீர்கள்.
குரு பார்வை பலன்கள்

திருமணம், சடங்கு போன்ற சுபகாரியங்களும், ஒரு சிலருக்கு புதுவீடு, மனை வாங்குதல், புதிய கட்டிடம் கட்டிக் குடியேறுதல், ஆடம்பரச் சாமான்கள், புதுவாகன லாபம், நூதன ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டானது. பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் நீங்கியது. கோர்ட் கேஸ் பிரச்சனையில் வெற்றியும், சகோதரர்களுக்குள் ஒற்றுமையும் ஏற்பட்டது. ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும், மாணவர்களுக்கு நல்ல கல்வியும் அமைந்தது. ஆனால் சனியாலும், சிலருக்கு விபத்துக்கள், தாய்க்கு பீடை வீண் விரயங்கள் ஏற்பட்டது. பிள்ளைகள் வழியில் அதிக செலவு ஏற்பட்டது. இந்த முறை குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாமிடமாகிய மிதுனத்துக்கு பெயர்ச்சியாகப் போகின்றார்.
புலிப்பாணி முனிவரும்
“முட்டப்பா இன்னமொரு மொழியைக் கேளு
மூர்க்கமுள்ள வாலியுமோ சத்ருபங்கன்
கூட்டப்பா கோதண்டபாணி அம்பால்
கொற்றவனே மலைபோலே சாய்ந்தான் காளை
நாட்டப்பா ஜென்மனுக்கு நமனால் கண்டம்
நலம்தப்பும் பொருள்தேசம் அரசர் தோஷம்
வீட்டப்பா வேதியனும் மதிக்கேயெட்டில்
விளங்கவே வெகுபயமாம் விளைவு யோகமே”
என்றார் அதையே இன்னொரு ஜோதிடப் பாடலும்,
“இன்மை யெட்டினில் வாலி பட்டமழிந்து போகும்படியானதும்” என்று சொல்கிறது. அதாவது வாலியானவன் ராமருடைய அம்பால் மடிந்து போனது போல துன்பமுண்டாகும் என்று அர்த்தம். வாலியைப் போன்று தம்பியின் மனைவியைச் சேர்ந்தால் பின்பு தெய்வத் தண்டனை பெறத்தானே வேண்டும்.
குரு எட்டாமிடத்துக்கு வரும்போது வியாதி, சோகம், நோய்கள். சண்டை கஷ்டம். கணவன், மனைவி கருத்து வேறுபாடுகள். கடன் தொல்லைகள், பொருள் திருடு போகுதல் போன்றவை ஏற்படும். குருபகவான் வக்ர கதியில் கடகராசியில் 72 நாட்கள் பிரவேசிக்கும் போது நன்மையான பலன்கள் ஏற்படும்.
வியாபாரிகள் : பொதுவாக அஷ்டமகுரு காலத்தில், வீண் பிரச்சனைகள் தொழிலாளர் முதலாளி ஒற்றுமை பாதிப்பு, கோர்ட்டு, கேஸ் பிரச்சனைகள், வீண் அலைச்சல், தொழில் முடக்கம், பண விரயம், மிஷின், வாகன ரிப்பேர் போன்றவையும், பணம் திருடு போகுதல், கடன் படுதல் போன்றவையும் ஏற்படும். கடன் வாங்காமல், அகலக்கால் வைக்காமல் இருப்பதற்குள் தொழில் செய்யுங்கள். பார்ட்டிகளை நம்பி, நிறையக் கடன் கொடுத்து விடாதீர்கள். எதிலும் திட்டமிட்டுக் காரியமாற்றுங்கள். பணம் அதிகமாக நிலுவையில் நிற்கும். செலவினங்கள் அதிகம் ஏற்படும். புதுமுயற்சிகள் காலதாமதமாகும். யாருக்கும் ஜாமீன் போட்டு விடாதீர்கள்.
உத்யோகஸ்தர்கள் : மேலதிகாரிகளின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரிடலாம். செய்யாத ஒரு தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிவரும். ஆனால் மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு, உங்கள் மீது தவறில்ல என்று தெரியவரும். ஆபிஸில் லோன் போட்டும், மனைவியின் நகைகளை அடகு வைத்தும் வீட்டில் சுபகாரியங்களை நடத்துவீர்கள். பின்பு கஷ்டப்பட்டு உழைத்து அந்தக் கடனை அடைப்பீர்கள். பிடிக்காத ஊருக்கு திடீர் டிரான்ஸ்பர் கிடைக்க வாய்ப்புண்டு.
பெண்கள் : உடற்சோர்வும், வயிற்று வலியும் ஆட்கொள்ளும், கர்ப்பப்பை சம்மந்தமான பிரச்சனைகள் தோன்றும். சிலருக்கு வயிற்றில் ஏதாவது ஆபரேசன் செய்ய நேரிடலாம். பணச்செலவு உண்டாகும். மற்றபடி குடும்பப் பொறுப்புகளை நல்லமுறையில் நிறைவேற்றுவீர்கள். உத்யோகம் பார்க்கும் பெண்கள் அதிக வேலைச் சுமையினால் திண்டாடுவீர்கள். கணவரும், குழந்தைகளும் உங்களைப் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். பணம், பொருள் ஏதாவது களவு போக நேரிடும் எச்சரிக்கை.
மாணவர்கள் : அருமையாகப் படிப்பீர்கள். ஆனால் தேர்வில் மட்டும் மதிப்பெண்கள் அதிகமில்லை. ஏனென்று யோசிப்பீர்கள். சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று வெளியூரில் படிக்க நேரிடலாம்.
கலைஞர்கள் : வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் வரும். அதே சமயம் செலவுகளும் அதிகம் வரும், நல்ல பெயரும், கெட்ட பெயரும் சம அளவில் ஏற்படும். அலைச்சல் அதிகமுண்டு லாகிரி வஸ்துக்கள் பழக்கம், மற்றும் தவறான முறையில் பணத்தைச் செலவழிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் : யாரையும் நம்பாதீர்கள். உங்கள் நண்பர்களே உங்கள் எதிரிகளாக மாறுவார்கள். கட்சிக்குள் பாதிப்பேரின் வெறுப்பையும், சம்பாதிப்பீர்கள். திடீரென்று பதவிக்கு ஆபத்து அல்லது கோர்ட்டு, கேஸ் பிரச்சனைகள் வரலாம். கவனம் தேவை.
விவசாயிகள் : விவசாயம், சுமாராக இருக்கும். கால்நடை, வாகனம் சற்று சேதமாகும். கடன்தொல்லை தரும், அதிக மகசூல் இராது. அதிக செலவினங்கள் ஏற்படும்.
பரிகாரம்
கும்பகோணம் அருகிலுள்ள ஆலங்குடி, திட்டை போன்ற குரு ஸ்தலங்கள் சென்று தக்ஷிணாமூர்த்தியை வழிபடுங்கள்.
மதுரை மேலூர் அருகேயுள்ள பட்டமங்கலம் என்னும் ஊருக்குச் சென்று, அங்குள்ள அஷ்டமாசித்தி தக்ஷிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள்.
தெற்கே உள்ளவர்கள் குற்றாலம் – செங்கோட்டைக்கு அருகிலுள்ள புளியரைக்குச் சென்று, தக்ஷிணாமூர்த்தியை வழிபடுங்கள்.
வாரந்தோறும், வியாழக்கிழமை அருகிலுள்ள சிவன் கோவிலில் தக்ஷிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி, கொண்டைக்கடலை படைத்து மஞ்சள் அல்லது பொன்னிற வஸ்திரம் சாற்றி முல்லை மலரால் வழிபட உத்தமம்.