ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 :மிதுனம்
ராகு கேது பெயர்ச்சி நாள் -2025
வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
கலைகளில் ஆர்வமுடைய மிதுன ராசி அன்பர்களே! நடனம், நாட்டியம், இசை, ஓவியம் ஆகிய இவற்றில் ஏதாவது ஒரு கலையில் நீங்கள் தேர்ச்சியுடையவராயிருப்பீர்கள். ஆனால் அதை கலைத் தொழிலை வைத்து வாழ்க்கைக்கு சம்பாதிக்க உங்களில் பெரும்பாலோருக்குத் தெரியாது. புத்திக்கூர்மையும், சாஸ்திர ஞானமும் உங்களுக்கு உண்டு. பெண்கள் தொடர்பு ஏற்படும். அதன் விளைவால் அவச்சொல் வாங்க நேரிடும்.
அதிக நண்பர்கள் உண்டு. ஆனால் அனைவருமே பகையாகி விடுவார். ஆபத்துக் காலத்தில் உதவக்கூடிய நண்பனைத் தேட வேண்டி வரும். சாப்பாட்டில் மிகப் பிரியமிருக்கும். JACK OF ALL MASTER IN NONE!” என்பது உங்களுக்குத் தான் பொருந்தும். எல்லாத் தொழிலும் தெரிந்தும், ஒன்றிலுமே சிறக்க மாட்டீர்கள்.
உங்களுக்கு ஒன்றரை வருட காலமாக இராகுவும், கேதுவும் அத்தனை யோகங்களை வழங்கவில்லை. இராகு தொழில் ஸ்தானத்தில் அமர்ந்தாலும் சனி, குரு, கேதுவினால் தொழில் முன்னேற்றமில்லை. வியாபாரம் நலிவடைந்து உங்கள் முயற்சிகள் பலிக்கவில்லை. வீண், அவமானம், அவச்செயல் முதலியவற்றைச் சந்தித்தீர்கள். கேது, பகவானும், வாகன விபத்து, உடல் பிணி, தாய்க்குப் பீடை. கால்நடைகள், கடன்கள், வாகன வகையில் செலவுகள் ஆபரேசன் போன்ற கெட்ட பலன்களையே ஏற்படுத்தினார்.
தற்சமயம் 18.05.2025 அன்று இராகு பகவான் உங்கள் இராசிக்கு ஒன்பதாமிடமாகிய கும்ப ராசிக்கும், கேது பகவான் உங்கள் இராசிக்கு மூன்றாமிடமாகிய சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இராகு ஒன்பதாமிடத்திற்கு வருவது அத்தனை சிறப்பானதல்ல என்றாலும் கெடுதலுமல்ல.
இராகு பகவான் ஒன்பதாமிடத்துக்கு வரும் போது திடீரென்று பெற்றோர் உடல்நிலை பாதிக்கலாம். நல்ல முறையில் கவனிக்காவிட்டால் பின்னர் கஷ்டமாகிவிடும். நண்பர் உறவினர் போன்றோருக்காக நீங்கள் பணம் செலவு செய்வீர்கள். யாருக்காவது ஜாமீன் போட்டு விடுவீர்கள். அதனால் வீண் பிரச்சனைகள், பழிச்சொல் வாங்குவீர்கள். தொழில் மந்தமாக நடக்கும். ஆனால் கேது பகவான் மூன்றாமிடத்துக்கு வருவது மிகவும் சிறப்பு. மனோதைரியமும், உற்சாகமும் ஏற்படும். எதையும் சமாளிக்கக் கூடிய திறன் ஏற்படும். சகோதர உறவு நன்றாக இருக்கும். உங்களது உடல்நிலையும் நல்லமுறையில் இருக்கும். நல்ல சாப்பாடு, தூக்கம், தாம்பத்திய சுகம் போன்றவை கிடைக்கும். கணவன் – மனைவி உறவு சுகப்படும்.
குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களும், புத்திர பாக்கியமும் ஏற்படும். புதுவீடு, வாகன, ஆபரண யோகம் ஏற்படும். மொத்தத்தில் இராகு – கேது பெயர்ச்சி உங்களுக்கு நன்மையானதாகவே இருக்கும். கடன்கள் தீரும், வருமானம் பெருகும். பெரிய மனிதர்களை சந்திப்பு, தீர்த்த யாத்திரை போன்றவை அமையும்.
வியாபாரிகள்:
வியாபாரத்தில் நெளிவு சுளிவாகக் கொண்டு செல்வீர்கள். அதனால் இலாபம் அதிகரிக்கும். தொழிலாளர் முதலாளி உறவு நல்ல முறையில் அமையும். கடன் கட்டுக்கடங்கி நிற்கும். சிலருக்கு பங்காளிகள் உங்களுக்கு அடங்கி நடப்பார்கள். அரசாங்க உதவி மற்றும் பெரய மனிதர்கள் நட்பு கிடைக்கும். வருமானம் பெருகும். புதிய முயற்சிகள் கைகூடும். கடன் தீரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
உத்தியோகஸ்தர்கள்:
உத்தியோக உயர்வு ஏற்படும். அடிக்கடி பிரயாணம் செல்ல நேரிடலாம். அதனால் இலாபம் அதிகம் கிடைக்கும். மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற நல்ல பலன்களே ஏற்படும். ஆபிஸில் லோன் கிடைத்து, வீட்டிற்கு தேவையான சாமான்கள் வாங்குவீர்கள். அதே சமயம் யாருக்காவது வைத்தியச்செலவு ஏற்பட்டு, அதற்காகவும் கடன் வாங்க நேரிடலாம். ஆனால் சுமூகமாக கடனை அடைத்து விடுவீர்கள்.
பெண்கள்:
அன்பான கணவர், குழந்தைகள் என்று குடும்பம் சந்தோஷமாக நடக்கும். கணவர் அன்பைப் பொழிவார். பிறந்த வீட்டில் யாருக்காவது செலவு செய்ய நேரிடலாம். புதிய நகை, ஆடை, வாங்க யோகம் ஏற்படும். நேர்த்திக்கடன் செலுத்தவும், புண்ணிய ஸ்தலங்களுக்குச் செலவும் வாய்ப்பு உண்டாகும்.
மாணவர்கள்:
உயர்கல்வி யோகம் உண்டாகும். நல்லமுறையில் படித்து, ஆசிரியர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பெற்றோர் உங்களுக்காக நிறையச் செலவழிப்பார்கள். அதற்கு தகுந்தவாறு நீங்களும் பரீட்சையில் தேர்ச்சி பெறுவீர்கள். சிலருக்கு Campus interview-வேலை கிடைக்கும்.
கலைஞர்கள்:
அன்னிய இனத்தவர்களாலும் பிற மதத்தைச் சேர்ந்தவர்களாலும் நல்ல வாய்ப்புகள் ஏற்படும். அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். பேரும், புகழும், செல்வமும் சேரும். பெரிய மனிதர்கள் தொடர்பு கிடைத்து, அதனால் நிறைய நன்மைகள் அடைவீர்கள்.
அரசியல்வாதிகள்:
தலைவர்கள் உங்களைப் புறக்கணித்தாலும், அடிமட்டத் தொண்டர்கள் உங்கள் மீது மதிப்புக் கொடுத்து நடந்து கொள்வார்கள். கௌரவத்துக்காகப் பிடிக்காத பதவியில் ஓட்டிக் கொண்டிருப்பீர்கள். ஆனால் அதன் மூலம் நல்ல பெயரும், வருமானமும் கிடைக்குமென்பதால் நீங்கள் கவலையில்லாமல் இருப்பீர்கள்.
விவசாயிகள்:
நன்மையும், தீமையுமான சராசரி பலன்கள் நடைபெறும். ஒரு புறம் விளைச்சல் நன்றாயிருக்கும்,மறுபுறம் செலவுகள் அதிகரிக்கும். எனவே இலாபம் குறைவாயிருக்கும்.
பரிகாரம்:
சனிக்கிழமை தோறும் சனிபகவானையும், ஆஞ்சநேயரையும் வழிபடுங்கள்.
ஒருமுறை கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் சென்று இராகுபகவானை வழிபட உத்தமம்.
செவ்வாய்க்கிழமை தோறும் இராகுகாலத்தில் துர்க்கைக்கு தீபம் ஏற்ற உத்தமம்.