ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : தனுசு
ராகு கேது பெயர்ச்சி நாள் -2025
வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
தர்மசிந்தனை அதிகமுடைய தனுகராசி அன்பர்களே! நீங்கள் நாணயத்தை பெரிதாக மதிப்பீர்கள். புத்திசாலித்தனம் உள்ளவர்கள் ஒழுங்கில்லாத நகங்கள், உள்ளடங்கிய வயிறும். நடுத்தர உயரமும் பெற்றிருப்பீர்கள். நல்ல பேச்சாளர்களாகத் திகழ்வீர்கள். தற்புகழ்ச்சிக்கு மயங்கும் குணமுண்டு, கெட்டச் செயல்களில் நாட்டம் இராது. பலவகையான தொழில்களில் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். ஒரு சிலர் மட்டும் லாகிரி வஸ்துக்களில் விருப்பம் கொண்டிருப்பீர்கள்.
இதுவரை கடந்த ஒன்றரை வருடமாக உங்கள் இராசிக்கு நான்காமிடமென்னும் மீன ராசியில் ராகுபகவானும், பத்தாமிடமாகிய கன்னியில் கேது பகவானும், அமர்ந்திருந்தார்கள். பத்தாமிடத்து கேது பல நன்மைகளைச் செய்தாலும், நான்காமிடத்து இராகு அதிக நன்மைகளை அடையவிடாமல் உங்களைக் கஷ்டப்படுத்தினார். தொழில் முடக்கம், உடல் உபாதை, தாயார், தகப்பனாரின் வகையில் கருமஞ் செய்தல், வாகன வகையில் செலவு, சிறு சிறு விபத்துக்கள், வீட்டில் கோழி, நாய், கால்நடைகளுக்கு ஏதாவது பாதிப்பு இப்படிப் பல தீமைகளை இராகு வழங்கினார். சிலருக்கு கோர்ட், கேஸ் பிரச்சனை ஏற்பட்டது. நண்பர்களால் இடைஞ்சல் மன உளைச்சல் ஏற்பட்டது. சிலருக்கு பெரிய ஆபரேசன் நடைபெற்றது.
தற்சமயம் ராகு, மூன்றாமிடத்துக்கும், கேது ஒன்பதாமிடத்துக்கும் வருகிறார்கள். இராகுபகவான் மூன்றாமிடத்துக்கு வரும் போது பங்காளிக்குள் மற்றும் சகோதரர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பாகப்பிரிவினை ஏற்படலாம் அல்லது சகோதரர்களால் தொந்தரவும் பண விரயமும் நேரிடலாம். எதிரிகள் பணிவர். தகப்பனாரின் உடல்நிலை பாதிப்படையும். அதே சமயம் தொழில் பாதிக்காது. இலாபம் அதிகரிக்கும். வருமானம் பெருகும். மற்றபடி எதிர்பார்த்த நன்மைகளும் பேரும், புகழும் உண்டாகும். கடன் தீரும், நேர்த்திக்கடன் செலுத்துதல், தீர்த்த யாத்திரை செல்லுதல் நடைபெறும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும் – பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். கோர்ட்டு, கேஸ் பிரச்சனைகள் தீரும்.
கேது பகவான், ஒன்பதாமிடத்துக்கு வரும் போது தொழிலில் மிகப்பெரிய நன்மைகள் உண்டாகும். நிறைய பொருள் சேரும். எதிர்பாராத வகையில் திடீர் பண வரவு உண்டாகும். பிரயாணங்கள் நன்மை தரும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மேலதிகாரிகள், ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். ஆனால் ஒரு சிலரின் பெற்றோரின் உடல்நிலை பாதித்து, மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். மொத்தத்தில் இந்த இராகு – கேது பெயர்ச்சியால் ஓரளவுக்கு நல்ல பலன்களையே உங்களுக்கு வழங்க இருக்கின்றார்கள். குருப்பெயர்ச்சியும், நன்றாக இருக்கும். ஜாதகத்தில் நல்ல திசாபுத்திகள் நடைபெற்றால் நன்மைகள் அதிகம் உண்டாகும்.
வியாபாரிகள்:
செய்தொழில் முன்னேற்றம் உண்டாகும். பழைய தொழிலை அபிவிருத்தி செய்யத் தகுந்த உதவிகளும் சமயத்தில் கிடைக்கும். சிலருக்குப் புதிய வாய்ப்புகள் உண்டாகும். சகோதரர்கள் சேர்ந்து தொழில் செய்தால் பிரிவினை ஏற்பட்டு தனித்தனியாக தொழில் செய்ய நேரிடும். தொழிலில் இலாபம் ஏற்பட்டு நல்ல முறையில் பயன்படுத்துவீர்கள். கடன் தீரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
உத்தியோகஸ்தர்கள்:
உத்தியோக உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். நீங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்காவிட்டாலும் கூட ஓரளவு உங்களுக்குப் பிடித்தமான ஆபீஸில் ஒரு சிலர் உங்கள் மீது பொறாமைப் படுவார்கள். வெளிவட்டாரப் பழக்கம் உங்களுக்கு நன்மை தரும்.
பெண்கள் :
கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். கணவரின் உடல்நிலையில் கவனம் தேவைப்படலாம். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவளித்தாலும், சகோதரர்கள் உங்கள் மீது பாசமாக இருக்கமாட்டார்கள். வெறும் நடிப்பைத் தான் காட்டுவார்கள். ஆனால் மாமியார், நாத்தனார் உறவு சீரடையும். தெய்வ வழிபாடு தீர்த்த யாத்திரை செல்லுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல் போன்ற ஆன்மீக காரியங்கள் நல்ல முறையில் நடைபெறும். நூதன ஆடை, ஆபரண யோகமும், பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும்.
மாணவர்கள் :
கல்வியில் நாட்டம் இருந்தாலும் அதிக முயற்சியும் ஊக்கமும் தேவைப்படும். ஆனால் நன்றாகப் படித்துத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து விடுவீர்கள். ஒரு சிலருக்கு மட்டும் குடுமப் பிரச்சனைகளால் படிப்பு தடைப்படும். மற்றபடி அதிக பணம் செலவழித்து மேற்படிப்பைத் தொடர்வீர்கள். ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
கலைஞர்கள்:
நிறைய வாய்ப்புகள் அமையும். நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வது. உங்கள்கையில் தான் உள்ளது. குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் நல்ல மதிப்பு, மரியாதை ஏற்படும். திருஷ்டி ஏற்படும்.
அரசியல்வாதிகள்:
சம்பாத்யம் அதிகமிராவிட்டாலும், பேரும், புகழும் குறைவில்லாமல் இருக்கும். அனைவரிடமும் எளிதாகப் பழகுவீர்கள். அதனால் உங்களைச் சுற்றியே கூட்டமிருக்கும். குடும்பத்திலும் உங்களைப் புரிந்து கொண்டு உங்களுக்கு உதவுவார்கள்.
விவசாயிகள்:
உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். நிலபுலன், கால்நடை, வாகனம் செழிக்கும் விளைச்சல் அதிகரித்து இலாபம் நிறையக் கிடைக்கும்.
பரிகாரம்:
ஒருமுறை கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் சென்று, இராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள்.
பௌர்ணமியன்று அம்மன் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நல்லது.
ஒவ்வொரு மாதமும், சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் நலம்.
வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.
சனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபட உத்தமம்.