அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:சிம்மம்
சூரிய பகவான் அருள் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே !! தற்போது குருபகவான் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஆகவே, பல்வேறு அனுகூலங்களைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். பல்வேறு விதமான நற்பலன்களை உங்களுக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார். மரியாதையையும் செல்வாக்கையும் தந்த வண்ணம் உள்ளார்.
அப்படிப்பட்ட குருபகவான் அக்டோபர் மாதம் 18-ம் தேதி முதல் டிசம்பர் 5 வரையிலும் விரய ஸ்தானமான கடகத்தில் வந்து அமர்ந்து பலன் தர இருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் செலவுகள் அதிகரிக்கும். எனவே செலவுகளை சுபச்செலவுகளாக்கிக் கொள்ளுங்கள்.
ராசியிலேயே கேது இருப்பதால் ஆன்மிகச் சிந்தனை தலைதூக்கும். எனவே விரும்பிய புனிதத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வாருங்கள்.
குரு பார்வை பலன்கள்
குருபகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வியாபாரம் ஓரளவு நன்றாக நடக்கும். தொழிலில் இருந்து வந்த சிரமங்கள் குறையும். மனதுக்குத் திருப்தி தரும்படியான போக்கு தென்படும். எனினும் தக்க திட்டமிடல் இல்லாமல் அகலக்கால் வைக்கவேண்டாம்.
குருபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடன்களை அடைக்கும் அளவுக்குப் பணவரவு உண்டு எனலாம். ஒருசிலர், கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அதேவேளையில் மிகவும் நெருக்கமாகப் பழகியவர்கள் விலகிப் போகவும் வாய்ப்பு உண்டு. ஆகவே, சொல்லிலும் செயலிலும் கனிவு தேவை. உங்களின் ஆரோக்கியம் தொடர்பான கவலைகள் விலகும்.
குருபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் திடீர்ப் பயணங்களும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். பங்குச் சந்தையில் நீண்ட கால முதலீடுகள் செய்திருப் பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா எதிர்பார்த்துக் காத்திருந்த அன்பர்களுக்கு, நல்ல செய்திகள் வந்து சேரும்.
பரிகாரம்: சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச்சென்று வழிபடுங்கள். வியாழக்கிழமைகளில் காலை வேளையில் சிவாலயம் சென்று வழிபடுங்கள்.