அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:விருச்சிகம்
செவ்வாய் பகவான் அருள் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே !!!தற்போது குருபகவான் 8-ம் வீட்டில் அமர்ந்து தீராத தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
எதைத் தொட்டாலும் தள்ளிப்போகும் நிலை, ஆரோக்கியத்திலும் பின்னடைவு, சலிப்பான மனநிலை ஆகியவற்றை அனுபவித்து வரும் விருசிக ராசிக்காரர்கள் இனி ஆசுவாசம் ஆவார்கள். அக்டோபர் 18-ம் தேதி முதல் பாக்கியத்தில் வந்து அமரும் குருபகவான், டிசம்பர் 5-ம் தேதி வரை பலவிதமான நன்மைகளைத் தரப்போகிறார். 9-ல் அமர்ந்து உங்கள் ராசியையும் பார்க்கப்போகிறார். எனவே அதிசார குருவின் 48 நாள்கள் சஞ்சாரம் உங்களுக்கு அற்புதமான பலன்களைக் கொடுக்கவுள்ளது.
தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். இழுபறியாக இருந்த நிலை மாறும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேர்வார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்ட காலமாகக் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்தக் காலகட்டத்தில் மழலைச் செல்வத்தைப் பெறுவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை அமையும். இருக்கும் வேலையில் நினைத்ததைச் சாதிப்பீர்கள். அங்கீகாரங்கள் கிடைக்கும்.
குரு பார்வை பலன்கள்
குருபகவானின் பார்வை உங்கள் ராசியிலேயேவிழுவதால் அழகு, இளமை கூடும். சோர்ந்திருந்த உங்கள் முகம் பொலிவு பெறும். அனைத்திலும் வெற்றி பெறலாம் என்கிற நம்பிக்கை உண்டாகும். முன்னேற்றப் பாதையில் நடைபோட திட்டம் தீட்டுவீர்கள்
குருபகவான் ராசிக்கு மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் உங்கள் முயற்சிகள் பலிதமாகும். தொட்ட காரியங்களை ஜெயித்துக் காட்டுவீர்கள். இளைய சகோதர உறவுகளால் நன்மைகள் அதிகரிக்கும்.
குருபகவான் ராசிக்கு 5-ம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைப் பாக்கியத்தை எதிர்பார்த்திருக்கும் அன்பர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் திருமண விஷயங்களில் பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமைந்து திருமணத்தில் முடியும். மேற்படிப்பு படிக்க விரும்பும் குழந்தைகளுக்கு உரிய வசதிகளைச் செய்துகொடுத்து மகிழ்வீர்கள்.
பரிகாரம் : அம்பாள் வழிபாடு உங்களுக்குஅனைத்துவித நன்மைகளையும் தரும். குறிப்பாக பௌர்ணமி நாள்களில் அம்பிகையை வழிபட்டு வாருங்கள். வியாழக்கிழமைகளில் நவகிரக குருவை வழிபடுங்கள்.