அற்புதங்கள் பல நிகழ்த்தும் பரங்கிப்பேட்டை விசாலாட்சி சமேத கைலாசநாதர் கோயில்:
விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயம் எப்போது யாரால் கட்டப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்றாலும் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என அனுமானிக்கப்படுகிறது.
திப்பு சுல்தான் படையெடுப்பு நடந்த போது இவ்வூரில் பாப்பான் கோடி தெருவிலிருந்த கைலாசநாதர் ஆலயத்தில் மீது அவன் பார்வை பட கோயிலை அகற்ற தன் சிப்பந்திகளுக்கு உத்தரவிட்டான்.
விஷயம் அறிந்த ஊர் மக்கள் திப்பு சுல்தான் சிப்பந்திகள் இடம் மகேசனுக்காக நாங்கள் மாண்டுகூட போவோம் ஆனால் கோயிலில் ஒரு செங்கல்லை கூட இடிக்க விடமாட்டோம் என்று வீர முழக்கம் இட்டனர். அதோடு இனி ஆலயம் இங்கு இருப்பது அதில் உள்ள சிலைகளுக்கு பாதுகாப்பானது அல்ல என முடிவு செய்து இவ்வூரில் வண்ணார பாளையம் என்ற இடத்தில் கீற்றுக் கொட்டகை அமைத்து அதில் இறைவன், இறைவியை திருமேனிகளை இருத்தி வழிபடத் தொடங்கினர்.
தனக்கு பயந்து கோயிலை இடம் மாற்றி விட்டார்கள் என அறியாமையால் ஆனந்தத்தில் திப்புசுல்தானின் இனி கோவிலை எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும் என்று ஆணவத்தோடு கூறினான்.
கீற்றுக் கொட்டகையில் இருந்த ஆலயம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கருங்கல் ஆலயமாக மாற்றப்பட்டது.
மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், அஷ்டபுஜ துர்க்கை, பைரவர், சனீஸ்வரர், நவகிரகம், நடராஜர், பஞ்சமூர்த்தி என அனைத்து தெய்வங்களுக்கும் இங்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளது சிறப்பு.
இவ்வாலயத்தில் சிவாலயத்திற்கு உரிய அனைத்து உற்சவங்களும் அனுசரிக்கப்படுகின்றன. மாசிமகத்தன்று உற்சவர் சந்திரசேகரர் புதுப்பேட்டை கடற்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். கோயிலில் இருந்து கடற்கரை சென்றடையும் வரை ஏராளமான பக்தர்கள் கூடி நின்று சுவாமிக்கு வரவேற்பு அளிப்பார்கள். இத்தலத்தில் தீர்த்தவாரி உற்சவம் கண்டால் மனக்குறை நீங்கும் என நம்பப்படுகிறது.
பங்குனி உத்திரத்தன்று சுப்பிரமணியருக்கு பால்குடம், காவடிகள், திருவீதி உலாவுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
திருமணம் தடை பெற்றவர்கள் 21 வெள்ளிக் கிழமைகள் விரதமிருந்து காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
அதேபோல குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் காசி விஸ்வநாதருக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, பிரார்த்தனை செய்து கொண்டு பலன் பெறுகிறார்கள். பின்னர் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து, அரளிப்பூ மாலை அணிவித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.
உரிய வேலை கிடைக்காமல் உள்ளம் வருந்துவோர் சுப்பிரமணியருக்கு மாத சஷ்டி அன்று விரதமிருந்து வேண்டிக்கொண்டால் விரும்பிய வேலை கிட்டுகிறது. பின் தங்கள் முதல் மாத சம்பளத்தில் முருகனுக்கு மனம் குளிர அபிஷேகம் செய்து நன்றிக்கடனை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு மறைய, குடும்ப பிரச்சனைகள் தீர, இத்தல மகேஸ்வரனை மனதார வேண்டினால் போதும் இனிமையான இல்லற வாழ்க்கைக்கு அருள்புரிவான் இறைவன்.
உண்மையான செல்வம் ஆரோக்கியம் தான். அதில் குறைபாடு ஏற்பட்டால் எதையும் அனுபவிக்க முடியாது. நோயால் பாதிக்கப்பட்டு துன்பப்படுவோர் இங்குள்ள சிவ தீர்த்தம் என்ற கிணற்று நீரில் நீராடி விட்டு மூலவரை மனம் குளிர வேண்டிக் கொண்டால், நோய் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து விரைவில் நலமான வளமான வாழ்வு பெறலாம்..
வழித்தடம்:
கடலூர்-சிதம்பரம் இரு மார்க்கத்தில் இருந்தும் பரங்கிப்பேட்டைக்கு பேருந்துகள் வசதி உள்ளது. பரங்கிப்பேட்டை வண்ணாரபாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோயிலை அடையலாம்.