ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026
மீனம்
குரு பகவானை ஆட்சி வீடாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே!! இந்த வருடத்தில் ஜென்ம ராசியிலே சனிபகவான் உள்ளார். அதுக்காக ஜென்ம சனி என்று பயப்பட வேண்டியதில்லை. இந்த வருடத்தில் ஜூன் மாதத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்துக்கு வர இருக்கிறார். அதேசமயம் அவருடைய ஒன்பதாம் பார்வை உங்கள் ராசியில் பதிவது மிகச் சிறப்பான அமைப்பு. வருட இறுதியில் ராகுவும் கேதுவும் உங்கள் ராசிக்கு முறையே 11 மற்றும் ஐந்தாமிடங்களுக்கு வர இருக்கிறார்கள். இத்தகைய கிரக அமைப்பினால் இந்த ஆண்டு உங்களுக்கு உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். சோம்பலை தவிர்த்தால் முன்னேற்றம் தொடரும்.
வேலை செய்யும் இடத்தில் இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள் அத்தனையும் மளமளவென்று விலகும். மேல் அதிகாரிகளும், சக ஊழியர்களும் உங்கள் திறமைகளை உணர்ந்து ஒத்துழைக்கும் சந்தர்ப்பம் வரும். அனுபவம் மிக்கவர்கள் ஆதரவு மகிழ்ச்சி சேர்க்கும். எந்த சமயத்திலும் நேரம் தவறாமையும், திட்டமிடலும் முக்கியம். அதை மறந்து விட வேண்டாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி மலரும். மனக்கசப்பும், சுணக்கமாகவே இருந்த நிலையும் மாறும். இனிய சூழல் இல்லம் முழுக்க பரவும். உறவுகளிடையே ஒற்றுமை நிலவும். மனதில் இருந்த இனம் புரியாத பயம் விலகும். தடைபட்ட சுபகாரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வர ஆரம்பிக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்த மணப்பேறும், மகப்பேறும் மனம்போல நடக்கும். விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்ற சந்தர்ப்பம் அமையும். பிற மொழி பேசும் நபர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள்.
அரசு மற்றும் அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு அமோகமான ஆதரவு பெறக்கூடிய காலகட்டமாக இந்த வருடம் இருக்கும். உடன் இருக்கும் யாருடைய உள்ளமும் வருந்தும்படி வார்த்தைகளை கொட்டாமல் இருங்கள் மேன்மைகள் நிலைக்கும்.
கலை மற்றும் படைப்புத் துறையினர் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகளை பெறலாம். எதிர்பாலரிடம் நெருக்கம் தவிருங்கள்.
பெண்களுக்கு சுபிட்சங்கள் சேரக்கூடிய காலகட்டம். சுபகாரிய தடைகள் நீங்கி சந்தோஷ சூழல் உருவாகும். தாரமாகும் பேரும், தாயாகும் பாக்கியமும் தாமதமானாலும் இந்த ஆண்டு நிச்சயம் கைகூடும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் பொருள் சேரும். பணி புரியும் பெண்களுக்கு தடைபட்ட உயர்வுகள் அணிவகுத்து வர ஆரம்பிக்கும்.
உடல் நலத்தில் கொழுப்புச் சத்து அதிகரிப்பு, ரத்த அழுத்தம் மாற்றம், அடிவயிறு, உணவுக்குழாய் பாத உபாதைகள் வரலாம் கவனம்..
இந்த வருடம் முழுக்க சிறப்பாக அமைய அனுமார் வழிபாட்டை செய்யுங்கள். சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் அனுமார் ஆலயங்களுக்கு சென்று வாருங்கள். இந்த வருடம் முழுவதும் வசந்த காற்று உங்கள் வாழ்வில் வீசும்…













