செவ்வாய் தோஷ பரிகாரம்
செவ்வாய் தோஷம் பற்றி புலிப்பாணி சித்தர்
சொல்லப்பா ஆறெட்டு பன்னிரண்டும்
சுகசப்த கேந்திரமும் பாக்கியம் ரெண்டில்
அல்லப்பா அத்தலத்தில் ஆரல்நிற்க
அப்பனே அகம் பொருளும் நிலமும் நஷ்டம்
குள்ளப்பா குடும்பமது சிதறிப்போகும்
கொற்றவனே குருவுக்கு தோஷமுண்டாம்
வல்லப்பா போகருட கடாக்ஷத்தாலே
வளமாகப் புலிப்பாணி வசனித்தேனே.
பாடல் விளக்கம்:
இன்னுமொன்றும் சொல்லுகிறேன் கேட்பாயாக. இச் செவ்வாய், சேய், பவுமன் என்றும் உரைக்கப்படுபவன். இவன் 6,8,12,3,7,10,9-இல் நிற்க நிலமும் பொருளும் மனையும் சேதமாகும்; குடும்பமானது சிதறிப்போகும் இதனைச் செவ்வாய் [குரு] தோடம் என்றும் கூறுவார்கள் வல்லவராகிய என் சற்குரு போக மாமுனிவரின் கருணையாலே வன்மையுடன் புலிப்பாணி முனிவராகிய நான் கூறினேன்.
சென்னையில் உள்ள நவகிரஹ பரிகார ஸ்தலங்கள்
செவ்வாய் தலம் – பூவிருந்தவல்லி
ஜாதகத்தில் செவ்வாயின் பங்கு
நவகிரகங்களுக்குள் செவ்வாயை பூமிகாரகன் என்று அழைப்பர். வீடு, மனை, நிலம், சகோதரர் நிலை, நிர்வாகம், பூர்வீகச் சொத்து, ரத்தம், எலும்பு, காவல்-ராணுவத்தில் வேலை, குழந்தைப்பேறு, சொந்தத்தில் திருமணம் என்று பலவிஷயங்களை செவ்வாய்தான் தீர்மானிக்கிறார். ஒருவருடைய சொந்த ஜாதகத்தில் செவ்வாய் நிலை சரியாக அமையாவிடின் மேற்கண்ட விஷயங்களில் பிரச்னைகள் ஏற்படும். அந்த பிரச்னைகள் தீர்வடைய பூந்தமல்லி வைத்தியநாதரையும், செவ்வாய் எனும் அங்காரக பகவானையும் தரிசிக்கலாம்.
சென்னை பூவிருந்தவல்லியில் செவ்வாய் பரிகார ஸ்தலம்
சென்னை பூவிருந்தவல்லியில் தையல் நாயகி அம்மை உடனுறை வைத்தியநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. சாபம் பெற்ற இந்திரனுடைய சருமநோயை தீர்த்து மோட்சமே அருளிய தலம் இது. அங்காரகன் தனக்கு ஏற்பட்ட தோஷத்தால் அதாவது பலம் குறைந்ததால் இத்தல ஈசனை தரிசித்தான். மேலும், அங்காரகன் வாயு ரூபமாக, தாளிப்பனையின் கீழிருந்தவாறு சிவனை வழிபட்டான். இத்தலத்திலுள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி முழு வலிமை பெற்றான். நாற்புறமும் அழகிய திருமதில்கள் கோயிலை அணி செய்கின்றன.
செவ்வாயும் இந்திரனும் வழி பட்ட ஸ்தலம்:
செவ்வாயும், தேவர்களின் அதிபதியான இந்திரனும் இத்தலத்தில் உள்ள வைத்தீஸ்வர சுவாமியை வணங்கி, தங்களது சிரமங்கள் நீங்க பெற்றிருக்கின்றனர். 1,300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சோழர் களால் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இக்கோவிலின் மூலவர் பெயர் வைத்தியநாத சுவாமி. அம்பிகையின் பெயர் தையல் நாயகி அம்மன்.
ஸ்ரீ வைத்தியநாதர் ஸ்ரீ தையல் நாயகி சன்னதி
கிழக்கு வாயிலில் சிறிய அளவில் ஒரு ராஜகோபுரமும் அதன் எதிரிலேயே அருமையும், பெருமையும் மிக்க மங்கள தீர்த்தமும் அமைந்துள்ளன. உள்ளே நுழைந்தவுடன் கொடிமரமும், இன்னும் உள்ளே சென்றால் விழாக்காலங்களில் சுவாமி எழுந்தருள அழகிய மேடை ஒன்றும் இங்கே அமையப் பெற்றுள்ளன. இந்த மேடையில்தான் சனி பகவான் எழுந்தருளியிருக்கிறார். அவருக்கு நேரே கருவறைக்குள் வைத்தியநாதர் தண்ணிலவாக தரிசனமளிக்கிறார். தையல்நாயகி அம்மை சந்நதியில் அருள் வெள்ளம் பெருக்கெடுத்துப் பொங்குகிறது. கருவறையின் வலதுபுறத்தில் மோதகம் தாங்கிய விநாயகப் பெருமானும், இடதுபுறம் அங்காரகனின் சந்நதியும் அமைந்துள்ளன.
செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை நீங்க:
தாளிப்பானையின் கீழே அங்காரகன் அருவமாக பூஜிக்கும் விதமாக சிவலிங்கமும், திருவடிகளும் உள்ளன. செவ்வாய்க் கிழமைகளில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை கண்டவர்கள் இங்கு வந்து பிரார்த்தித்துக்கொண்டு, வெகுவிரைவிலேயே மணமாலையோடு நன்றி சொல்ல திரும்பவும் கோயிலுக்கு வருகின்றனர். ஆண்டுதோறும் மாசி திங்கள் 21, 22, 23, 24, 25 தேதிகளில் கிழக்கு கோபுரம் வழியே சூரியனின் செம்பொற்சோதியானது இறைவனின் திருமேனியின் மீது பொழிவது கண்கொள்ளாக் காட்சி. சென்னை பூவிருந்தவல்லி நகரத்தின் மையத்திலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளது.
பூந்தமல்லி கர்லாக்கட்டை சித்தர்:
இங்கு கர்லா கட்டை சித்தர் ஜீவ சமாதி ஆகி உள்ளார். வைத்தீஸ்வரன் கோவிலில் சிவன் சந்நதிக்குவலப்புறம் தூணில் உள்ளார்.இவரை தரிசித்தால் மருத்துவரால் குணப்படுத்த முடியாத நோய்கள் தீரும் . இங்கு வந்து நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வந்து தரிசனம் செய்து நோயிலிருந்து விடுபட்டு உள்ளார்கள்.
கோவில் இருப்பிடம் : https://g.co/kgs/XoXg2Wg