பணதட்டுப்பாடு நீக்கும் மாசிலாமணீஸ்வரர் கோவில்-திருவாடுதுறை
காவிரி தென்கரையில் உள்ள 127 பாடல் பெற்ற சிவத்தலங்களில் வரிசையில் 36ஆவது தலமாக உள்ள தலம் திருவாடுதுறை. திருஞான சம்பந்தர் இத்தல இறைவனை வேண்டி எடுக்க எடுக்க குறையாத பொற்கிழி பெற்ற தலம்.
இறைவன் பெயர்: மாசிலாமணீஸ்வரர், கோமுக்தீஸ்வரர்
இறைவி பெயர்: அதுலகுசநாயகி, ஒப்பிலாமுலையம்மை
சிவனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டி அதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி மகாவிஷ்ணுவுக்கு சாதகமாக பதில் கூறியதால் பார்வதியை பூமியில் பசுவாக பிறக்கும்படி சாபம் இடுகிறார். இப்படி பசுவாக பிறந்த பார்வதி பூவுலகில் பல இடங்களில் இறைவனை பூஜித்தாள். திருவாடுதுறை தலத்தில் தம்மை வழிபட்டு வர சாபம் நீங்கப் பெறும் என்றார் சிவன். அதன்படி பசுவின் வடிவில் பார்வதி இங்கு வந்து சிவனை வேண்டி தவமிருந்தாள். சிவன் அவளுக்கு காட்சி தந்து தன்னுடன் அணைத்து விமோசனம் கொடுத்தார். “கோ” என்றால் பசு பசுவுக்கு விமோசனம் தந்தவர் என்பதால் இறைவர் கோமுக்தீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
முசுகுந்த சக்கரவர்த்திக்கு மகப்பேறு அருளி, இத்தலத்தை திருவாரூராகவும் தம்மை தியாகேசராகவும் காட்டிய சிறப்பு உடையது இத்தலம். புத்திரபாக்கியம் இல்லாமல் தவித்த முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடம் பெற்ற தியாகேசரை தொடர்ந்து வழிபட்டு வந்தான். ஒரு சமயம் சிவன் அவரது கனவில் தோன்றி இத்தலத்தில் தன்னை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி இங்கு வந்து சிவனை வணங்கி புத்திர பேறு பெற்றார் முசுகுந்தன்.
எனவே புத்திர பேறு இல்லாதவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயிலுக்கு எதிரில் கோமுகி தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலின் இருபுறமும் பசுவான உமைக்குத் துணையாக வந்த விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. கோபுர வாயிலைக் கடந்தால் நீண்ட நடைபாதை அதன் முடிவில் உள்ள மண்டபத்தில் பெரிய நந்தி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் உள்ள பெரிய நந்திகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த நந்திக்குப் பின்னால் உள்ள பலிபீடமே ஞானசம்பந்தருக்கு பொற்கிழி வைத்து அருளிய இடமாகும். பலிபீடத்தின் நான்குபுறமும் பூதகணங்கள் தாங்கி நிற்கின்றன. திருஞானசம்பந்தர் இப்பீடத்தின் அருகில் தமிழ் மணம் கமழ்வதை அறிந்து பீடத்தின் கற்களை பெயர்க்க அதன் அடியில் இருந்து திருமூலர் பாடிய திருமந்திரம் வெளிப்பட்டது.
பெரிய நந்திக்கு முன்புறம் மற்றொரு சிறிய நந்தியும் இருக்கிறது. பிரதோஷ வேளையில் இவருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. திருவிடைமருதூர் தலத்திற்கான பரிவாரத் தலங்களில் இத்தலம் நந்தி தலமாக இருப்பதால் இங்கு நந்தியிடம் வேண்டிக் கொள்வது விசேஷம்.
சிவன் இத்தலத்தில் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கும் அஸ்டமா சித்திகளை உபதேசித்ததாக ஐதீகம். இறைவனை தருமதேவதை வழிபட்டு அவருக்கு வாகனமாகும் பேறு பெற்றதும் இத்தலத்தில்தான்.
திருமூலர், திருமாளிகைத்தேவர் இருவரின் சமாதிகள் இருப்பதும் இத்தலத்தில்தான். இவ்வளவு சிறப்பு பெற்ற திருவாடுதுறை தலத்தை அவசியம் சென்று தரிசியுங்கள்.
வழித்தடம் :
மயிலாடுதுறையில்இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் மயிலாடுதுறை-கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கம்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் இருக்கிறது.
மயிலாடுதுறை கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஒரு கிளைப் பாதையில் ஒரு கிலோ மீட்டர் சென்றால் இத்தலத்தை அடையலாம்.
Google Map :