சனி பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026 சிம்மம் (சமசப்தம சனி )
சூரிய பகவானின் அருள் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே !இதுவரையில் மகரத்தில் ஆறாம் இடத்திலிருந்து சனி தற்போதைய பெயர்ச்சியில் ஏழாம் இடமான கும்பத்திற்கு வந்து அமருகிறார். இது சிம்மத்தின் சப்தம ஸ்தானமாகும். சனி கும்பத்தின் அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பயணித்து தனது பலன்களை வகை பிரித்து வழங்குவார்.
சனி பெயர்ச்சி நாள் -Sani peyarchi Date
இந்த சுபகிருது வருடம், உத்திராயணம் ஹேமந்த ருது. தை மாதம் 3-ஆம் தேதி (17.1.2023) கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) தசமி, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரம், 4-ஆம் பாதம், விருச்சிக ராசி. கண்ட நாம் யோகம், பவ கரணம் கூடிய யோக சுப தினத்தில் கடக லக்னத்தில் விருச்சிக ராசியில், சிம்ம நவாம்சத்தில், கடக நவாம்ச ராசியில் சனி பகவான் மகர ராசியில்இருந்து கும்பராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
சனி ஏழாம் இடத்தில் ஏறி அங்கிருந்து சிம்ம ராசியின் 9-ம் இடம், சிம்ம ராசி, 4-ம் இடத்தை பார்வையிடுகிறார். சிம்ம ராசியின் ஏழாம் இடம் என்பது அதன் களத்திர ஸ்தானமாகும். ஏழாம் இடத்தில் அமர்ந்த சனி கண்டிப்பாக கல்யாணம் நடக்க வைத்து விடுவார். வேலையும் தருவார். உங்கள் தந்தையுடன் சண்டை கொடுப்பார். நீதிமன்றம் நோக்கி நடையை கட்ட செய்வார்.
வியாபாரம் ஆரம்பிக்க செய்வார். சக வியாபாரிகளுடன் சண்டை போட செய்வார். வட்டி தொழில் ஆரம்பிக்க ஆதரவு தருவார். சில தம்பதிகளை பிரிக்க செய்வார். உங்கள் பகுதியில் நீங்கள் வசிக்கும் வீதியில் வியாபாரம் வர்த்தகம் ஆரம்பிக்க வழிவகை செய்வார். அதன் வழியே பக்கத்து வீட்டுக்காரரோடு சண்டையும் மூட்டிவிடுவார். எப்போதும் சண்டையிடும் எண்ணத்திலேயே ஜாதகரை அலைய விடுவார்.
சனி சிம்மத்திற்கு ஏழாம் இடத்தின் அதிபதி மட்டுமல்ல ஆறாம் இடத்தின் அதிபதியும் அவரே ஆவார் என்பதை நினைவில் கொள்க. பங்குதாரிடம் பயங்கர சண்டை வரும். இப்போது எதிர்கொள்ளும் எதிரிகளை சண்டையிட்டு ஓட ஓட விரட்டி விடுவார். மேலும் இவருக்கு சமமான எதிரியை மட்டுமே டீல் செய்வார். காதலில் செம சண்டை ஏற்படும்.எதிர் பாலினத்தவர்களிடம் ஒரு திருட்டுத்தனமான ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அது தொடரவும் செய்வார்.
சிலர் தாய்மாமனோடு வாக்குவாதம் செய்வார். அல்லது தாய்மாமன் மகளை கல்யாணம் செய்வர். வியாபாரத்திற்கு கடன் வாங்க கூடும். அடிக்கடி வயிறு வலி எடுக்கும். யூரினரி இன்பெக்சன் தோன்றும். சில சிம்ம ராசிக்காரர்கள் சண்டையிட வெளியாட்கள் கிடைக்கவில்லை எனில் இவரும் இவரது வாழ்க்கை துணையுமே சண்டை இட்டு பொழுது போக்குவார். மனம் பதற்ற நிலையிலேயே படபடப்பாக இருக்கும். நம்பிக்கையின்மை தோன்றும்.
சனியின் பார்வை பலன்கள்
சனியின் 3ம் பார்வை பலன்கள்
சனி தனது மூன்றாம் பார்வையால் சிம்ம ராசியின் ஒன்பதாம் வீட்டை உற்றுப் பார்க்கிறார். 9-ம் இடம் முதலில் தந்தையை குறிக்கும். இந்த சனிப்பெயர்ச்சி சிம்ம ராசியினரையும் அவரது தந்தையும் வெட்டுப்பழி, குத்துப்பழி எனும் கணக்கில் மட்டமாக சண்டையிட செய்யும்.
கோவில் போகுவது குறையும். தான தர்மம் மட்டுபடும்.ஆசிரியர்களை அவமதிக்க செய்யும். எது சரி எது தவறு என நீங்களே மிக குழம்பி போவீர்கள். பயணத்தடை உண்டு. ஆன்மீக யாத்திரை அல்லாடும் குறித்த நாளில் செல்ல இயலாது. ஆன்மீக சொற்பொழி ஆற்றியவர்கள் இப்போது தடுமாறலாம்.
பொதுவாக ஒன்பதாம் இடத்தை சனி பார்ப்பதால் உங்களின் அதிர்ஷ்டத்தின் வேகம் மட்டுப்படுவதாக உணர்வீர்கள். இதனால் மன சஞ்சலம் ஏற்படும். மன சஞ்சலமானது தினம் படி வேலைகளில் சுணக்கம் ஏற்படுத்தும். சுறுசுறுப்பு குறைந்து சோம்பேறித்தனமாக உணர்வீர்கள்.
இந்த சனிப்பெயர்ச்சி சிம்ம ராசியினரின் வெளிநாட்டு பணவரவை எவ்விதத்திலேனும் சுருக்கும். அது வர்த்தகம், பணப்பரிமாற்றம், சேவை சம்பந்தம் என எதுவாகவும் இருக்கலாம். எனவே இதை எதிர்நோக்கிய மனதில் நிறுத்தி செலவை குறைக்கவும். மேலும் உள்ளூர் வேலை வர்த்தகத்தை ஒரு அவசரத்திற்கு தயாராக வைத்துக் கொள்ளவும்.
சனியின் 7ம் பார்வை பலன்கள்
சனி தனது ஏழாம் பார்வையால் சிம்ம ராசியை நேர்பார்வையாக பார்க்கிறார். யோசியுங்கள் சனிக்கும் சூரியனுக்கும் ஆகவே ஆகாது! இதில் நேர் எதிர் நின்று முறைத்துப் பார்த்தால்? இந்த சிம்ம ராசியினர் என்ன கதிக்கு ஆளாவார்கள் நினைக்கவே பயமாக இருக்கிறது. இந்த சனி பெயர்ச்சியில் கடக ராசியினர் அஷ்டம சனியால் படப்போகும் இன்னலைவிட சிம்ம ராசியினர் அனுபவிக்க போகும் இம்சையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது.
சனி என்ன செய்வார்? என்னதான் செய்ய மாட்டார்! சிம்ம ராசியினரை ஒன்றும் செய்ய விடாமல் ஆகிவிடுவார்.வீடு மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். தொழில் செய்யும் இடம், வணிகக்கடை மாற்றம் உண்டு. தொழிலில் ரொம்ப போட்டிகள் வரும். உங்களின் நிர்வாக திறன் குறையும்.
சிம்ம ராசி அரசியல்வாதிகளை எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் ஒரு பக்கம் மறைவாக இருக்க வைத்து விடும். அரசு அதிகாரிகள் பணிவாக ஒழுங்காக இருந்தால் பிழைத்தீர்கள். அரசு வரி சம்பந்தமான அல்லல் வரும். உங்களின் சில சொத்துக்களை அரசு எடுத்துக் கொள்ளும்.
சனியின் நேர் பார்வை மீது சிம்ம ராசி மீது விழுவதால் சிம்ம ராசியினர் எந்த புது முயற்சி செய்வதோ, புது தொழில் ஆரம்பிக்கவோ கூடாது. மிகப் பணிவாக இருக்கும் இடம் தெரியாமல் தினப்படி வேலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தால் ஏதோ காலம் ஓடும்.
சனியின் 10ம் பார்வை பலன்கள்
சனி தனது பத்தாம் பார்வையால் சிம்ம ராசியின் நான்காம் நான்காம் வீட்டை பார்க்கிறார். நான்காம் இடம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தாயார் ஸ்தானம்தான். எனவே இந்த சனி பெயர்ச்சி சிம்ம ராசியினரின் தாயாருக்கு எங்காவது அடிபடச் செய்யும். சிம்ம ராசியினரின் வீடு விஷயங்கள் சற்று தடுமாறும். வீடு வாங்க போட்ட திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கும்.
வாகனங்கள் அடிக்கடி பழுதாகும். சிலர் இருக்கும் வீட்டை பழுது பார்க்க நேரிடும். சுகஸ்தானமான நான்காம் இடத்தை சனி பார்ப்பதால் உங்களின் சில சுக சவுரியங்கள் குறைபாடடையும். விவசாயிகள் கவனமாக இருத்தல் அவசியம். பரம்பரை சொத்துக்கு பங்கம் ஏற்படும். உங்கள் வீட்டு போர் பம்பில் தண்ணீர் வற்றும். கல்வியை தொழிலாக கொண்டோர் சற்று கவனமாக இருத்தல் அவசியம்.
இவ்விதம் சிம்ம ராசிக்காரர்களின் நான்காம் இடம் சனியால் பார்க்கப்படும் போது உங்களின் தாயாருக்கு சிறு அளவிலேயே பாதிப்பு ஏற்படும் போது நன்கு கவனித்து விடவும். சிம்ம ராசி குழந்தைகளின் கல்வி மேன்மைக்கு அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். வீடு ,வாகன மனை விஷயங்களில் அகலக்கால் வைக்க வேண்டாம்.
பலன் தரும் பரிகாரம்
சிம்ம ராசியினர் தான் சனியால் மிகவும் பாதிக்கப்பட போகிறார்கள் அதனால் சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு எள் முடிச்சு அகல் தீபத்தை ஏற்றி வணங்கவும். சாலையோரம் குடியிருக்கும் மக்களுக்கு அவசரத்திற்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தி சின்ன டார்ச் லைட் வாங்கி கொடுங்கள். மரம் ஏறுபவர்கள் மரம் சம்பந்தமான தொழிலாளர்களுக்கு மருந்து வாங்கி கொடுங்கள். மலைப்பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு அவர்களுக்கு தோதான செருப்பு வாங்கி கொடுங்கள்.
மதுரை அருகே உள்ள திருதாவூர் அல்லது ஸ்ரீவாஞ்சியம் அல்லது பொழிச்சலூர் சென்று சனி பகவானை வணங்கலாம். வயதான நடக்க முடியாத வரியவருக்கு கைத்தடி வாங்கி கொடுங்கள்.