சனி செவ்வாய் சேர்க்கை
சனிபகவானும் செவ்வாய் பகவானும் ஒரே வீட்டில் சஞ்சரிப்பது, சனிபகவானை செவ்வாய் (அல்லது) செவ்வாய் பகவானை சனி பார்ப்பது, சனிபகவானின் ராசிகளான மகரத்திலோ, கும்பத்திலோ அல்லது சனிபகவானின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதியின் சாரத்திலோ செவ்வாய் சஞ்சரிப்பது, செவ்வாய் பகவானின் ராசிகளான மேஷத்திலோ,விருச்சகத்திலோ அல்லது செவ்வாய் பகவானின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களின் சாரத்தில் சனிபகவான் சஞ்சரிப்பது சனி செவ்வாய் சேர்க்கையாகும்.
லக்னத்தில் சனி செவ்வாய் இருந்தால்
லக்னத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை உண்டாகும் போது, உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். மனதில் குழப்பமும், சங்கடமும் இருந்து கொண்டே இருக்கும். கௌரவத்திற்கு பங்கம் உண்டாகும்.
2ல் சனி செவ்வாய் இருந்தால்
குடும்பம், வாக்கு, தனஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உண்டாகும் போது, குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் மோதல் ஏற்படும். பணவரவில் தடை உண்டாகும். தேவையில்லாத சங்கடங்கள் தோன்றும். கண்ணில் பாதிப்பு உண்டாகும்.
3ல் சனி செவ்வாய் இருந்தால்
தைரிய, வீரிய, சகோதர, பராக்கிரம ஸ்தானமான மூன்றாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உண்டாகும் போது, சகோதரருக்கு பிரச்சனைகள் உருவாகும். ஒற்றுமை குலையும். உடல் நலனில் தொண்டை பகுதியில் பாதிப்பு ஏற்படும். அந்தஸ்து, புகழ், கௌரவத்திற்கு குந்தகம் உண்டாகும்.
4ல் சனி செவ்வாய் இருந்தால்
சுகஸ்தானம், மாதூர் ஸ்தானம், வாகன ஸ்தானம், வித்யா ஸ்தானம் என்னும் நான்காம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உண்டாகும் போது, கல்வியில் தடை உண்டாகும். தாயாரின் உடல்நலையில் பாதிப்பு ஏற்படும். வாகனம் அடிக்கடி பழுதாகும். பயணத்தில் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
5ல் சனி செவ்வாய் இருந்தால்
பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானம் என்னும் ஐந்தாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உண்டாகும் போது, பிள்ளைகளின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். மேல் கல்வியில் தடைகள் தோன்றும். பூர்வீக சொத்து விஷயத்தில் வம்பு, வழக்கு என்று ஏற்படும். இதயத்தில் பாதிப்பு உண்டாகும்.
6ல் சனி செவ்வாய் இருந்தால்
ருண ,ரோக, சத்ரு ஸ்தானம் என்னும் ஆறாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உண்டாகும் போது, கடன் அதிகரிக்கும். அதனால் வீண் சங்கடங்கள் அவமானங்கள் உண்டாகும். எதிரிகளின் கை மேலோங்கும்.
7ல் சனி செவ்வாய் இருந்தால்
களத்திர,நட்பு ஸ்தானம் என்னும் ஏழாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உண்டாகும் போது திருமணத்தில் தடை ஏற்படும். அதையும் மீறி திருமணம் நடைபெற்றாலும் தம்பதிகளுக்குள் ஒற்றுமை என்பது இல்லாமல் போகும். கூட்டுத்தொழில் சங்கடங்கள் ஏற்படும். கணவன் அல்லது மனைவிக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்.
8ல் சனி செவ்வாய் இருந்தால்
ஆயுள் மற்றும் அஷ்டம ஸ்தானம் என்னும் எட்டாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உண்டாகும் போது, அரசாங்க ரீதியாக சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுத்து அதற்காக வழக்கில் சிக்க வேண்டிய நிலை ஏற்படும். வாழ்க்கையில் விரக்தி அதிகரிக்கும். தேவையில்லாத முன்கோபம் ஏற்பட்டு அதன் காரணமாக பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
9ல் சனி செவ்வாய் இருந்தால்
பாக்கியஸ்தானம் என்னும் ஒன்பதாம் வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை உண்டாகும் போது, சொத்து விஷயத்தில் சங்கடங்கள் ஏற்படும். புதியதாக வாங்கும் சொத்திலும்வில்லங்கம் இருக்கும். வெளிநாட்டிற்கு சென்றால் அங்கும் சங்கடத்தை சந்திக்க வேண்டி வரும். தந்தைக்கும் பிள்ளைக்குமான உறவில் விரிசல் ஏற்படும். தெய்வ நம்பிக்கை இல்லாமல் போகும். தெய்வ அருளும் கிட்டாமல் போகும்.
10ல் சனி செவ்வாய் இருந்தால்
தொழில் மற்றும் ஜீவனஸ்தானமான பத்தாமிடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உண்டாகும் போது, செய்து வரும் தொழிலில் தடைகள் உண்டாகும். போட்டிகள் அதிகரிக்கும். எந்த ஒரு தொழிலில் ஈடுபட்டாலும் அதில் நிலையற்ற தன்மை உண்டாகும். பார்த்து வரும் உத்தியோகத்தில் ஏதேனும் சங்கடங்கள் இருந்து கொண்டே இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு தடைபடும். மேலதிகாரிகளின் ஆதரவு ஏற்படாமல் போகும்.
11ல் சனி செவ்வாய் இருந்தால்
லாபம் மற்றும் மூத்த சகோதரம் ,இளைய தார ஸ்தானம் என்னும் பதினொன்றாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உண்டாகும் போது, மூத்த சகோதரர்களால் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். அயல்நாட்டு விவகாரங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். இளைய தாரத்தால் மனதில் சங்கடங்கள் தோன்றும். உடல் நிலையில் எப்போதும் ஒரு சங்கடம் இருந்து கொண்டே இருக்கும்.
12ல் சனி செவ்வாய் இருந்தால்
அயன, சயன, மோட்ச ஸ்தானம் என்னும் பன்னிரண்டாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உண்டாகும் போது, வாழ்க்கையில் வம்பு வழக்குகள் இருந்து கொண்டே இருக்கும். நிம்மதியான தூக்கம் என்பது இல்லாமல் போகும். எதற்கு இந்த வாழ்க்கை இன்று மனதில் விரக்தி ஏற்படும். ஒரு படி ஏறினால் நான்கு படி இறங்க வேண்டிய நிலை உண்டாகும். லாபத்தை விட விரயம் அதிகரிக்கும்.
இவையெல்லாம் சனி செவ்வாய் சேர்க்கையால் உண்டாகும் பாதிப்புகள் என்றாலும் குரு பகவானின் பார்வை இவர்களுக்கு உண்டானால் மேலே கூறிய சங்கடங்கள் யாவும் இல்லாமல் போகும்.
குரு பகவானின் பார்வை இவர்களுக்கு இல்லையெனில் சனி செவ்வாய் பாதிப்பிலிருந்து விடுபட எளிய பரிகாரமும் உண்டு. அந்த பரிகாரம் என்பது இறைவழிபாடு மட்டும்தான் செவ்வாய் பகவானுக்கு அதிபதியான முருகப்பெருமானின் சந்நிதிகளுக்கும் ஸ்ரீமன் நாராயணன் அல்லது நரசிம்மர் ஆலயங்களுக்கு சென்று மனம் உருகி வணங்கி வழிபடுவதும் அனுமன் மற்றும் விநாயகப் பெருமானை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வருவதாலும் செவ்வாய் சனி சேர்க்கையால் உண்டாகக் கூடிய பாதிப்புகள் குறையும். வாழ்க்கை வளமாகும்.