அடிப்படை ஜோதிடம் – கிரக அஸ்தமனம்
நவகிரகங்கள் அனைத்தும் வான மண்டலத்தில் சூரியனை சுற்றியே வலம் வருகின்றன. அப்படி வரும்போது சில சமயம் சூரியனை நெருங்கும், சில சமயம் சூரியனை விட்டு தூர விலகிச் செல்கின்றன. அப்படி சூரியனை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நெருங்கும் போது சூரிய ஒளியில் அந்த கிரகம் மங்கி விடுகின்றன. இந்த நிலையை அஸ்தமனம் அல்லது அஸ்தங்கம் என்கிறோம்.
இனி எந்தெந்த கிரகங்கள் எவ்வளவு தூரத்தில் வரும்போதே அஸ்தமனம் அடைகின்றன என்பதை பார்ப்போம்!
1. சந்திரன் சூரியனுக்கு 12° வரும்போது அஸ்தமனம் ஆகிறது.
2. செவ்வாய் சூரியனுக்கு 17° வரும்போது அஸ்தமனம் ஆகிறது
3. புதன் (வக்கிரம் இல்லாத போது) சூரியனுக்கு 14° வரும்போது அஸ்தமனம் ஆகிறது
4.குரு சூரியனுக்கு11° வரும்போது அஸ்தமனம் ஆகிறது
5. சுக்கிரன் (வக்கிரம் இல்லாத போது) சூரியனுக்கு 10° வரும்போது அஸ்தமனம் ஆகிறது
6. சனி சூரியனுக்கு 15°வரும்போது அஸ்தமனம் ஆகிறது.
இந்த அஸ்தங்க தோஷத்தால் லக்னத்தைப் பொறுத்து நன்மை தீமைகள் மாறி நடக்கும். அதாவது அஸ்தமனம் அடையும் கிரகம் தான் தர வேண்டிய பலனை சூரியனிடம் ஒப்படைத்து விடுகின்றன. அந்த பலனை சூரியன் வாங்கி அந்த லக்னத்திற்கு தான் பெற்ற ஆதிபத்தியம் பிரகாரம் மாற்றி வழங்குகிறார்.
அஸ்தமன தோஷத்தைப் பற்றி இரண்டு நிலைகள் உண்டு
1.ஜோதிட சம்பந்தமானது
2.வானவியல் சம்பந்தமானது
ஜோதிட சம்பந்தமானது
எந்த கிரகமும் சூரியனை அடைவதற்கு முன்பு 5 பாகைக்குள் இருக்குமானால் அதற்கு முழு அஸ்தமன தோஷம் உண்டு. சூரியனைத் தாண்டி விட்ட பிறகு 5° இருக்குமானால் அஸ்தமன தோஷம் பெயரளவில்தான் இருக்கும். இது ஜோதிட சம்பந்தமானது. இது வனாவியலிருந்து சற்று மாறுபட்ட கணக்காகும்.
வானவியல் சம்பந்தமானது
சுக்கிரனும் புதனும் முறையே சூரியனை நெருங்கி 13° மற்றும் 8°இருக்கும் பொழுது முதல் அவை அஸ்தமனத்தில் இருப்பதாக கருதப்படும். இது வானவியல் முறை.
ஆனால் ஜாதக ரீதியாக சூரியனிலிருந்து 3° முன்பின் இருக்கும் பொழுது மட்டும் தான் புதனும் சுக்கிரனும் அஸ்தமனத்தின் விளைவாக தோஷத்தை செய்யும். அதாவது சிற்சில சமயம் கிழக்கேயும், சிற்சில சமயம் மேற்கேயும் அஸ்தமன,உதயம் ஆவது புதன், சுக்கிரனின் இயல்பாகும்.
ஒரு கிரகம் ஆட்சி பெற்று இருந்தாலும் உச்சம் பெற்று இருந்தாலும் அஸ்த்தமன தோஷத்தை அடையும் பொழுது அது முழுமையாக பலமற்றதாக ஆகிவிடுகிறது. புதன் சுக்கிரன் இருவரும் சூரியனைத் தாண்டி பிறகு அஸ்தமனத்தில் இருந்தால் கூட நன்மை செய்வார்கள். அஸ்தமன தோஷம் பாதிக்காது..