திருவெட்கா
திருமாலுக்கு காஞ்சிபுர ஸ்தலம் மிகவும் பிடித்தமான ஸ்தலம் என்று சொன்னால் அது மிகையில்லை. பக்தர்களின் குறைகளை, பிரார்த்தனை மூலம் அறிந்து உதவும் பரோபகாரியான திருமால். காஞ்சிபுரத்திலுள்ள இன்னொரு திவ்ய தேசமான திருவெட்காவில் அமர்ந்து சில அரிய நற்காரியங்களைச் செய்து எல்லோரையும் வியக்க வைத்திருக்கிறார். இங்கு நடந்த பல சம்பவங்கள், பகவான் பக்தர்மேல் எவ்வளவு கருணை கொண்டு குழந்தையாய் ஓடி வந்திருக்கிறார் என்பதை நினைக்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது.
காஞ்சிபுரம் ரங்கசாமி குளத்திற்கு வடக்கே நான்கு ஏக்கர் நிலப் பரப்பளவில் ஐந்து நிலை ராஜா கோபுரத்துடன் இரண்டு பிரகாரங்களுடன் உள்ள கோவில்தான் திருவெட்கா.
மூலவர் | ஸ்ரீ சொன்ன வண்ணஞ் செய்த பெருமாள் ,புஜங்க சயனத்தில் திருக்கோலம் ,பாதத்தின் அருகில் சரஸ்வதி தேவி |
தாயார் | கோமளவல்லித் தாயார் |
விமானம் | வேதஸார விமானம் |
தீர்த்தம் | பொய்கைப் புஷ்கரணி |
பிரம்மதேவன் செய்யும் யாகத்தை அழிக்க சரஸ்வதிதேவி வேசுவதியாக மாறி படு பயங்கரமாக வரும் பொழுது பிரம்மா திருமாலை வேண்டினார். திருமாலும் உதவி செய்ய ஆசைப்பட்டு வேகவதியின் வெள்ளத்தைத் தடுக்க, வேகவதியாற்றின் குறுக்கே அணை போல் சயனித்தார். இதனால் சரஸ்வதி தேவி தான் செய்த செயலுக்காக வெட்கமுற்று தலை குனிந்தாள் அதனால் இந்த ஸ்தலத்திற்கு ‘திருவெட்கா’ என்று பெயர் வழங்கலாயிற்று.
தன்னுடைய சீடன் கணிகண்ணன் என்பவனுக்காக திருமழிசை ஆழ்வார் இந்த ஊரை விட்டே புறப்பட நேர்ந்தது. அப்பொழுது இந்த தலத்தில் பள்ளி கொண்டிருந்த பெருமாளையும் தன்னுடன் அழைக்க, பெருமாளும் பாம்பணையைச் சுருட்டிக் கொண்டு கிளம்பினார். இதனால் இந்நகரம் பின்னர் பல்வேறு இயற்கைச் சோதனைகளுக்கு உள்ளாயிற்று. யாரும் முன்வந்து காப்பாற்றவில்லை. இதையறிந்த காஞ்சி மன்னன், திருமழிசை ஆழ்வாரையும் கணிக்கண்ணனையும் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் காஞ்சிபுரத்திற்கே வரும்படி வேண்ட மன்னனின் கோரிக்கையை ஏற்று அவர்களும் காஞ்சிபுரத்திற்குத் திரும்பினர்.
பக்தனே மீண்டும் காஞ்சிபுரத்திற்கு திரும்பும் பொழுது பகவான் திருமாலும் அவர்களுடன் மீண்டும் திரும்பினார். சொன்னதை செய்ததால் இந்த ஊர் பெருமாளுக்கு ‘சொன்னவண்ணம் செய்த பெருமாள்’ என்ற பெயரும் உண்டு.
பொய்கை, பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார். திருமங்கையாழ்வார் நம்மாழ்வார் இந்தப் பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.
பரிகாரம்:
பெருமாள் ஒரு குழந்தையைப் போல் பழகும் உள்ளம் கொண்டவர். தனது அடியாட்கள் பக்தியின் பரவசத்தால் என்ன கட்டளை இட்டாலும் அதை மறுவிநாடியே செய்து காட்டுபவர். எனவே பகவானிடம் உரிமையாக நாம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். சண்டை போடலாம். கோபித்துக் கொள்ளலாம். ஆனால் பகவான் ஒருபோதும் பக்தன் மீது கோபித்துக் கொள்ளவே மாட்டார் என்பதால் – நமக்கு வேண்டியவற்றை உரிமையோடு கேட்கின்ற ஸ்தலம் கஷ்டப்படும் பொழுது மனமுருகிக் கூப்பிட்டால் மங்களமாக வந்து அருள் தருவார். வேண்டிய வரன்களை கேட்டு வாங்கக்கூடிய ஒப்பற்ற புனிதத்தலம் இது.
கோவில் இருப்பிடம் :