திவ்ய தேசம் 53: திரு கார்வனம்
இந்தப் புண்ணிய திருப்பதி ஷேத்திரம் கூட உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் தான் இருக்கிறது என்பதால் பெருமாளின் திருக்கல்யாண குணங்களை நிதானமாக, அதே சமயம் ஆனந்தமாக நாம் அனுபவிக்கலாம். காஞ்சிபுரம் சென்று உலகளந்த பெருமாளை சேவிக்கும் பொழுது, பகவான் தனது கோயில் வளாகத்துக்குள்ளேயே வேறுவிதமான பெயர்களோடு ஆனந்த தரிசனம் கொடுக்கிறார் என்பது பெருமகிழ்ச்சி தான்.
தனியாக மிகப்பெரிய சன்னதி என்று சொல்ல முடியாது. ஆனால் பகவானை திவ்யமாக தரிசித்து உய்யலாம். பிரகாரத்தின் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்
மூலவர்: கள்வர்,திருமகள் பூமிதேவியுடன் நின்ற திருக்கோளத்தில் கருணை குலுங்க காட்சி தருகிறார். |
தாயார்: கமலவல்லி நாச்சியார் |
தீர்த்தம்: கௌரி தடாகம் |
விமானம்: புஷ்கல விமானம்,திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடிய ஸ்தலம் |
திருமாலின் பல்வேறு அவதார மகிமையை கேள்விப்பட்ட பார்வதி தேவிக்கு ஒரு சின்ன ஆசை. எல்லா அவதாரங்களிலும் வித்தியாசமாக இருக்கும் பெருமாளை ‘கள்வன்’ வேடத்தில் காண வேண்டும் என்று ஆசை. இதை சிவபெருமானிடம் சொன்னபோது ‘இது உன் பாடு உன் அண்ணன் பாடு’ என்று சொல்லி ஒதுங்கி விட்டார். பார்வதி தேவி திருமாலை நோக்கி பிரார்த்தனை செய்து தனது ஆசையே அவரிடம் சொன்னாள்.
பெருமாளும் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் சன்னதிக்கு வடக்கே வந்தால் பார்வதி தேவி விரும்பிய வண்ணம் தாம் அந்த ‘கள்வர்’ காட்சியை காட்டுகிறோம் என்று சொல்ல பார்வதி தேவி இங்கு வந்தாள் பகவானும் அவள் விரும்பிய படியே கள்வனாக காட்சி தந்தார் என்று செவி வழியாக சொல்லப்படுகிறது.
பரிகாரம்
மற்ற தெய்வங்களை பிரார்த்தனை செய்து வேண்டுகோளை வைப்பதற்கும், திருமாலைப் பிரார்த்தனை செய்து வேண்டுகோள் வைப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. எம்பெருமான் இதுவரை பக்தர்களின் வேண்டுகோளை ஒருபோதும் புறக்கணித்ததே இல்லை. அதேசமயம் காலம் தாழ்த்தியும் செய்ததில்லை. எனவே தங்கள் அனைத்து மனக்குறைகளையும், பணக்கஷ்டம், நண்பர்களால் ஏமாற்றப்பட்ட கஷ்டம், திருமண வாழ்க்கையில் ஏற்படுகின்ற கஷ்டம், குழந்தைகளால் ஏற்படும் மனச்சோர்வு, உறவினர்களால் அகவுரவப்படுத்தப்படுகின்ற கஷ்டங்கள், இன்னும் சொல்லவொண்ணாக் கஷ்டங்கள் இருந்தால் அத்தனையும் இந்த திருகார்வண்ண பெருமாள் முன் வைத்து கண்ணீர் விட்டு கதறினால், அத்தனை கஷ்டமும் விலகும். பெருமாளின் அனுக்கிரகம் கடைசி வரை தொடர்ந்து கிடைக்கும்.
கோவில் இருப்பிடம்