திவ்ய தேசம்–திரு அன்பில்
திவ்ய தேசம் 5
பகவான் கருணையே வடிவானவன். பக்தர்களுடைய வேண்டு கோளை பிரார்த்தனையால் நிறைவேற்றுபவன்.தன்னை யார் சரண் அடைகிறார்களோ – அவர்களை கடைசி வரை ரக்க்ஷித்துக் காப்பாற்றக் காத்திருப்பவன்.
பெருமாளுக்கு ஜாதி-பேதம் என்பது கிடையாது.ஆத்மாதான் முக்கியம். இப்படிப்பட்ட பெருமாள் அன்பின் திருவுருவமாக வடிவழகிய நம்பியாகி திருக்கோலம்பூண்டு நம்மையெல்லாம் காத்து வருகிறார்.
இந்த திருக்கோயில் திருச்சி- கல்லனை கும்பகோணம் பஸ் மார்க்கத்தில் இருக்கிறது. லால்குடிக்கு கிழக்கே எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் நடராஜபுரம் வழியாகவும் சென்று பெருமாளை தரிசிக்கலாம்.
திருமாலயன்துறை – மண்டுகபுரி , பிரம்மபுரி என்று இந்த கோயிலுக்கு வேறு பெயர்களும் உண்டு.கொள்ளிட நதியின் வடக்குப்பக்கம் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்தக் கோயில் மூன்று நிலை இராஜ கோபுரம் உடையது. எல்லாமே கிழக்குப் பக்கம்தான்.இந்த பிரகாரத்தின் கருவறையில் மூலவர் திருவடிவழகிய நம்பி பெருமான் புஜங்க சயனத்தில் பள்ளி கொண்டு அருள் பாலிக்கிறார்.
- உற்சவர் ஸ்ரீ சுந்தரராஜன் ;
- தாயார் அழகியவல்லி நாட்சியார் என்ற திருப்பெயர் கொண்டவர்.
- இந்தக் கோயிலின் தீர்த்தம் மண்டுக புஷ்கரணியாகும்.
- விமானம் கொள்ளிடக் கரைக்கேயுரிய விசேஷ தாரக விமானம்.
பிரபல மண்டூக முனிவர் – ஒருசமயம் தண்ணீர்க்குள் மூழ்கி நீண்ட கால தவம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரைத் தேடி துர்வாச முனிவர் வந்தார். தலத்தில் மூழ்கியிருந்த மண்டூக முனிவர் , துர்வாச முனிவர் வந்ததைக் கவனிக்கவில்லை. வெகு நேரம் காத்திருந்தும் மண்டுக முனிவர் தன்னைக் காணவில்லை என்ற கோபத்தால் துர்வாசர் , மண்டூக முனிவரை தவளையாக மாறும்படி சாபமிட்டு விட்டார். இதற்குப் பிறகு மண்டுக முனிவர் , தன் தவற்றை உணர்ந்து துர்வாச முனிவரிடம் சாப விமோசனம் கேட்க துர்வாச முனிவர் ” இந்த திருத்தலத்திலுள்ள பெருமாளை நோக்கி பிரார்த்தனை செய்தால் – சாப விமோசனம் கிடைக்கும். மறுபடியும் மனிதனாக மாறலாம் என்று வழிகாட்டினார். அதன்படியே மண்டுக முனிவர் அன்பிலுள்ள திரு வடிவழகிய நம்பி பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக வரலாறு.
அன்பில் நாட்டை ஆண்ட சுந்தர சோழ மன்னனுக்கு போரில் பல வெற்றிகளைத் தந்ததால் இந்தக் கோயிலுக்கு அரசன் ஏராளமான மானியத்தை வழங்கியிருக்கிறான்.
பிரம்மாவுக்கும் வால்மீகிக்கும் பகவான் நேரிடையாக தரிசனம் தந்த ஸ்தலம். இந்த கோயிலில் திருமங்கை யாழ்வார்,பூதத்தாழ்வார், நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.
பரிகாரம் :
முற்பிறவியில் செய்த பாவங்களைப் போக்க வேண்டுமானால் அன்பில் கோயிலுக்கு வந்து – மண்டூக புஷ்கரணியில் நீராடி பெருமாளைநோக்கிப் பிரார்த்தனை செய்தால் போதும். எதிரிகளை வெற்றி பெறவும் போட்டிகளில் வியாபாரத்தில் வெற்றி பெறவும் பொது வாழ்வில் முன்னுக்கு வரவும் ; இந்த அழகிய வடிவாகிய நம்பி பெருமாளுக்கு பால் அபிஷேகம் செய்து வந்தால் போதும். அத்துணைச் சிறப்பு இந்த அன்பில் பெருமாளுக்கு உண்டு.
DIVYA DESAM Arulmigu Vadivazhagiya Nambi Perumal Temple-MAP