விளக்கொளிப் பெருமாள்
படைப்பது எளிது படைத்த பின் அதை காப்பது தான் கஷ்டம். இந்த கஷ்டமான காரியத்தை ‘எம்பெருமான்’ அன்று முதல் இன்று வரை ஆனந்தமாக செய்து வருகிறார். பிரார்த்தனை செய்தவுடன் பகவான் காப்பாற்ற வரவில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். பிரார்த்தனை செய்வதுதான் நமது கடமை. மற்றவற்றை எம்பெருமான் கவனமாக பார்த்துக் கொள்வார். இதை உறுதி செய்வதற்காக எழுப்பப்பட்ட கோயில் தான் காஞ்சிபுரத்தில் அஷ்ட புயகரத்திற்கு அருகே உள்ள “திருத்தண்கா” கோயிலாகும்.
தூப்புல், திருத்தண்கா, “விளக்கொளிப் பெருமாள்” என்று வெவ்வேறு பெயர்களுடன் விளங்கிவரும் இந்த கோவில் சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்களை கொண்டது.
- மூலவர் -“விளக்கொளிப் பெருமாள்” இறைவனுக்கு தீபப்பிரகாசர், திவ்யப்பிரகாசர் என வேறு பெயர்களும் உண்டு.
- தாயார்-மரகதவல்லி தாயார்.
- தீர்த்தம்- சரஸ்வதி தீர்த்தம்.
- விமான ஸ்ரீஹர விமானம்.
இது அஷ்டபுயகர ஸ்தல வரலாற்றை பெரிதும் கொண்டிருக்கிறது. ஆனாலும் சிறு மாற்றம் உண்டு. ‘சரஸ்வதி தேவி’ துணை இல்லாமல் தன்னால் யாகம் நடத்தி திருமாலை நேரடியாக தெய்வ தரிசனம் காண முடியும் என்ற வேகத்தில் ‘பிரம்மதேவன்’ தன்னிச்சையாக நின்று யாகம் செய்ய ஆரம்பித்தார். பிரம்ம தேவனுக்கு தான் யார் என்பதை காட்ட சரஸ்வதி தேவி “மாயநலன்” என்னும் கொடிய அசுரனை ஏவி யாகத்தை தடை செய்ய சொன்னார். சரஸ்வதி தேவிக்காக அந்த “மாயநலன்” இந்த உலகம் முழுவதையும் இருட்டாக்கி விட்டான்.
பிரம்மதேவர் இந்த கொடுமையை சொல்லி திருமாலிடம் வேண்ட ‘திருமால்’ ஒரு பேரொளியாக தோன்றியதோடு, தனது கையில் ஒளி விளக்கை ஏற்றி இருட்டை போக்க பிரம்மாவுக்கு உதவினார். அதனால்தான் இந்த தளத்திற்கு “விளக்கொளிப் பெருமாள்”கோயில் என்று பெயர் வந்தது. ஸ்ரீ வேதாந்த தேசிகர் இத்தலத்தில் அவதரித்ததனால் இத்தலத்திற்கு பெருமை. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
பரிகாரம்
வாழ்க்கையே இருண்டு போய் விடுமோ! என்று தினமும் பயந்து கொண்டிருப்பவர்கள் ஒவ்வொரு நாளும் கெட்ட சொப்பனத்தாலும், ஏவல், பில்லி, சூனியம் போன்ற துர்தேவதைகளால் மனதளவில் பாதிக்கப்படுகிறவர்களும், சுப காரியங்கள் தடைபட்டுக் கொண்டிருக்கிறதே என்று வருந்துகிறவர்களும், எந்தெந்த உருவத்தில் கெடுதல் வருமோ என்று பயத்தால் நொந்து கொண்டிருப்பவர்களும் இந்த “விளக்கொளிப் பெருமாள்”கோயிலில் வந்து மூன்று வேளைகளிலும் பிரார்த்தனை செய்தால். பகவான் ஒளி ரூபமாக வந்து அத்தனை கஷ்டங்களையும் தீர்ப்பார் என்பது காலம் காலமாக நிலவிவரும் ஐதீகம்.
கோவில் இருப்பிடம்