அதிசயங்கள் அசந்து போகும் அற்புதமான கட்டமைப்பு.எல்லோரா குகைக்கோவில் கைலாச நாதர் சிவன் கோவில்!
கைலாச நாதர் சிவன் : கலை மனிதனின் இருப்பை ஏதோ ஒருவகையில் இந்த உலகில் நிரந்தரமாக்குகிறது. அதனால் தான் கலைஞர்கள் மனித வாழ்வையும் பண்பாட்டையும் தொடர்ந்து இலக்கியம், ஓவியம் சிற்பம் எனப் பல்வேறு வடிவங்களில் அதைப் பதிவு செய்கிறார்கள். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட கலைவடிவங்கள் நூற்றாண்டுகளைக் கடந்தும், கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் மாபெரும் சாட்சியாக நிலைபெறுகின்றன. நிகழ்கால மனிதன் பழங்கலைகளின் முன்னால் நிற்கும் போது ஒரு பூரணத்துவத்தை அடைகிறான்.
இந்தியாவின் கலைப் படைப்புகள் பழைமையும் பெருமையும் வாய்ந்தவை. இன்றளவும் உலகத்தின் கவனத்தைக் கவர்வனவாகவும், வியப்பூட்டுவனவாகவும் விளங்குகின்றன. அத்தகைய கலைப் பொக்கிஷங்களின் கூடாரமே எல்லோரா.
கி.பி. 642 ஆம் ஆண்டு சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியோடு பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன் போர் தொடுத்தான். வாதாபியைத் தீக்கிரையாக்கி அழித்தான். பல்லவர்களால் ஏற்பட்ட இந்தக் களங்கத்துக்குப் பழி தீர்க்கச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் விக்ரமாதித்யன், பல்லவர்கள் மீது கி.பி 734 ஆம் ஆண்டு போர் தொடுத்து அதில் பெரும் வெற்றி பெறுவான். வாதாபியை நரசிம்ம வர்மன் அழித்ததுபோலவே காஞ்சியை அழித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்ற வெறியுடன் நுழைந்தவனது கண்ணில் முதலில் பட்டது ‘ராஜ சிம்ம பல்லவேஸ்வரம்’ எனும் காஞ்சி கயிலாசநாதர் கோயில்.
அற்புதக் கலைப்படைப்பான கயிலாசநாதர் கோயிலைப் பார்த்துப் பிரமித்தவன் ‘ மனித முயற்சியினால் இப்படி ஓர் அற்புதத்தை உருவாக்க முடியுமா?’ என்று வியந்து காஞ்சியை அழிக்கும் எண்ணத்தைக் கைவிட்டான். காஞ்சியில் தான் கைப்பற்றிய செல்வங்களை எல்லாம் கோயிலுக்கு கொடை அளித்துவிட்டுச் சென்றான். அதோடு நில்லாமல் காஞ்சி கயிலாச நாதர் கோயில் போன்றே பட்டடக்கல்லில் ‘விருபாட்சர் கோயிலை’ எழுப்பினான். விருபாட்சர் ஆலயம்தான் எல்லோராவின் கயிலாயநாதர் ஆலயத்துக்கு முன்மாதிரி.
எல்லோராவில் மொத்தம் 34 குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. முதல் பன்னிரண்டு குடைவரைக் கோயில்கள் பௌத்தக் கோயில்கள். அடுத்தடுத்த பதினேழு குடைவரைக் கோயில்கள் இந்துக் கோயில்கள். மீதமிருக்கும் ஐந்து கோயில்கள் சமணர்களுக்கானது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இவை அனைத்தும் ஒரே காலகட்டத்தில் வழிபாட்டில் இருந்தன என்கின்றனர். இவற்றை உருவாக்கியவர்கள் மூன்று மதங்களுக்கும் சமமான ஆதரவை அளித்து மூன்று மதத்தினரும் ஒரே இடத்தில் வழிபாடு செய்து தங்களின் மதக்கல்வியையும் நடத்த அனுமதித்திருக்கிறார்கள். இந்த 34 கோயில்களில் நடுநாயகமாக நிற்பது கயிலாசநாதர் கோயில்.
கயிலாயமலையை சிற்ப வடிவாக்கிய பெரும் சாதனையை நிகழ்த்திய இந்தக் கோயில், உலக அதிசயங்களுள் ஒன்று. பிரமாண்டமான ஒரே கல். அதைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில். தொழில்நுட்ப வரைகலையில் ஆர்த்தோகிராபிக் புரொஜெக்சன் என்று ஒரு வரைகலை உண்டு. அதில் கட்டடத்தின் முன்பக்கத் தோற்றம், பக்கவாட்டுத் தோற்றம் மற்றும் மேல் தோற்றம் ஆகியன வரைவர். இதன் மூலம் கட்டடத்தின் அமைப்பைத் தீர்மானிப்பர். சுமார் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கயிலாசநாதர் ஆலயம் மேலிருந்து கீழ் நோக்கி செதுக்கப்பட்டுக் கட்டி முடிக்கப்பட்டது. அதாவது டாப் வியூவிலேயே கற்பனையின் மூலம் ஒதுக்கப்பட வேண்டியவை குறித்துத் தீர்மானித்து தேவையற்ற பாறைகளை வெட்டி அகற்றி முழுக்கோயிலையும் உச்சியில் இருந்து அடிக்கட்டுமானம் வரை செதுக்கியிருக்கிறார்கள். நம்புங்கள் 148 அடி நீளமும், 62 அடி அகலமும், 100 அடி உயரமும் கொண்ட பிரமிப்பூட்டும் இந்தக் கோயிலுக்கு வெளியில் இருந்து ஒரு சிறுகல் கூடக் கொண்டு வந்து சேர்க்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆலயமும் 85,000 கன மீட்டர் அளவுள்ள ஒரே தாய்ப்பாறையில் வடிக்கப்பட்டது.
ராஷ்ட்ரகூட மன்னன் முதலாம் கிருஷ்ணன் ( கி.பி 756 – 773) காலத்தில் இந்தக் கோயில் வெட்டத் தொடங்கப்பட்டது என்றும், மன்னன் தண்டிதுர்கா (கி.பி 725 – 755) காலத்தில் வெட்டத் தொடங்கப்பட்டது என்றும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இந்தப் பணி எப்போது நிறைவுற்றது என்கிற தகவலும் இல்லை. குறிப்பாக நூறு ஆண்டுகள் வரைகூட இந்தப் பணி நடைபெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மலையைக் குடைந்து, பாறைகளை வெட்டி எடுத்து, அவற்றைத் தனித் தனியாகப் பிரித்துச் சந்நிதிகள், யானைகள், கருவறை, விமானம் மற்றும் பிரமாண்ட தூண்கள் ஆகியனவற்றை உருவாக்கியிருக்கிறார்கள். அதாவது வேண்டாத பாறைகளை வெட்டி எடுத்து நீக்கிவிட்டு, கோயிலை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படித் தேவையில்லாமல் வெட்டி எறியப்பட்ட பாறைகள் மட்டும் சுமார் நான்கு லட்சம் டன் எடைகள் என்கின்றனர்.
நந்தி மண்டபம், விமானம், இரண்டு கோபுரங்கள், இரண்டு அழகிய கல் தூண்கள் என்னும் அமைப்பில் இந்தக் கோயில் செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் கருவறையில் கயிலாசநாதர் மேற்கு பார்த்தபடி அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் அடிபீடத்தில் எழில்கொஞ்சும் கம்பீரமான யானைகள் வடிக்கப்பட்டுள்ளன. அந்த யானைகள் தங்களது தோளில் ஒட்டுமொத்த ஆலயத்தையும் தாங்குவதைப் போன்று வடிக்கப்பட்டுள்ளன.
கயிலாயம் என்றதும் இறைவன் நினைவுக்கு வருவதுபோலவே கயிலையைப் பெயர்க்க முயன்ற ராவணனும் நினைவுக்கு வருவான். இந்த ஆலயத்தில் ராவணனின் கம்பீரமான சிற்பங்கள் அமைந்துள்ளன. ராவணன் கயிலையைப் பெயர்க்க முயலும் காட்சிகள் மிக நுட்பமாக வடிக்கப்பட்டுள்ளன. பரமசிவன் பார்வதியோடும் நந்தியோடும் இன்னும் பிற பூதகணங்களோடு இருக்கும் கயிலாயத்தை அவன் பெயர்க்கும் காட்சி தத்ரூபமாக வடிக்கப்பட்டிருக்கிறது. ராவணன் தனது 10 தலைகளில் 9 தலைகளை ஈசனுக்குக் காணிக்கையாகத் தர அந்த 9 தலைகளையும் ஈசன் மாலையாகக் கோர்த்து அணிந்திருக்கும் சிற்பமும் சிறப்புப் பெற்றது.
இவை மட்டுமின்றி சிவன் பார்வதி திருக்கல்யாணம், திரிபுரம் எரித்த திரிபுராந்தகர், ராமாயணக் காட்சிகள், ஆமைகளின் மீது நின்றபடி அருள் புரியும் புனித நதி தேவதைகளின் உருவங்கள் என்று பல்வேறு சிற்பக்கூட்டங்கள் எழில் கூட்டுகின்றன.
கருத்தைக் கவரும் எல்லோரா சிற்பங்களுள் ஈசனின் எழிலுறு ஆடற் சிற்பமும் ஒன்று. சுமார் 16 அடி உயரத்தில் பிரமாண்டமாக இருக்கும் இந்தச் சிவபெருமான் எட்டுக் கரங்களோடு காட்சி கொடுக்கிறார். வழக்கமாக முயலகன் மீது காலூன்றி ஆடும் கோலத்தில் இல்லாமல், இறைவன் தரையில் கால் ஊன்றி ஆடுகிறார். கைகளில் ஆகாய வரத முத்திரை, அரவு, உடுக்கை, போன்றவற்றை ஏந்தி ஒரு காலை உயர்த்தி ஆடுகிறார். முருகன் கைபற்றி உமையம்மை அருகிருந்து அந்த எழில் நடனக் கோலத்தை ரசிக்கிறார். சிவகணங்கள் சூழ்ந்து இசைக் கருவிகளை இசைக்கின்றன. பிருங்கி முனிவர் எலும்புருகொண்டு இறைவனின் ஆடல் கோலத்தைக் கண்டு களிக்கிறார். வானிலிருந்து பிரம்மாவும் விஷ்ணுவும் கண்டு மகிழ்கின்றனர். விண்ணில் ஆட்டின் முதுகில் அமர்ந்த வண்ணம் அக்னி தேவனும் வேழத்தின் மேல் அமர்ந்த வண்ணம் இந்திரனும் வலம் வர, திருமாலும் நான்முகனும் கவனித்த வண்ணம் இருக்கின்றனர்.
நூற்றாண்டுகளைக் கடந்தும் கம்பீரமாகக் காட்சி தரும் எல்லோரா குடைவரைக் கோயிலில், பல்வேறு சிலைகளின் மூக்குகள் மட்டும் உடைபட்டுக் காணப்படுகின்றன. இஸ்லாமிய சுல்தான்களின் ஆட்சியில் ஔரங்கசீப் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நியமித்து, கோயிலை இடித்துத் தரைமட்டமாக்க முயற்சிகள் மேற்கொண்டான். பாவம், 3 ஆண்டுகளாக முயற்சி செய்தும் அவர்களால் உடைக்க முடிந்தது சிலைகளின் மூக்கை மட்டும்தான் என்கின்றனர்.
உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் இந்தக் கலைக்கோயில்களை யுனெஸ்கோ அமைப்பு, ‘பாரம்பரியக் களமா’கக் குறிப்பிட்டுள்ளது. காணும் எவரையும் கவரும் சிற்பக்கூட்டம் நிறைந்த இந்தக் குடைவரைக் கோயில்கள் வரலாற்று ஆர்வலர்களுக்குப் பெருவிருந்து.
எல்லோரா செல்பவர்களுக்கு :
மகாராஷ்டிரா மாநிலம், ஔரங்காபாத்திலிருந்து 28 கி.மீ தொலைவில் இருக்கிறது எல்லோரா.