ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026
சிம்மம்
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… இந்த ஆண்டில் உங்களது கஷ்டங்கள் விலகி நன்மைகள் நடைபெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்….
சூரியனை ஆட்சி வீடாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!! வரும் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். ஜூன் மாதத்தில் வரக்கூடிய குரு பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு 12-ஆம் இடத்தில் குரு பகவான் வருகிறார். வருடத்தின் முடிவில் ராகு ஆறாம் இடத்திற்கும், கேது பன்னிரண்டாம் இடத்திற்கும் வருகிறார். இத்தகைய அமைப்புகளால் இந்த ஆண்டு உங்களுக்கு சீரான நன்மைகளை தரக்கூடியது ஆண்டாக இருக்கும். அதே சமயம் உடல் நலத்தில் கவனமும், உழைப்பில் முடங்காமல் இருப்பது அவசியம்.
அலுவலகத்தில் அவஸ்தைகள் படிப்படியாக நீங்கி அனுகூல காற்று வீச தொடங்கும். சாதகமான சூழலை ஆணவத்தாலும் அலட்சியத்தாலும் பாதகமாக மாற்றிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். மேலிடத்தின் ஆதரவும், எதிர்பார்த்த உயர்வுகளும் கிடைக்கும். பிறர் குறையை பெரிது படுத்தாமல் இருந்தால் உங்கள் தவறுகள் ஊரறியாமல் இருக்கும்.
வீட்டில் விசேஷங்கள் படிப்படியாக வரத் தொடங்கும். ரத்த பந்த உறவுகள் பகை மறந்து பாசத்தோட திரும்ப வருவார்கள். உங்கள் வார்த்தைகளில் கடுமை காட்டாமல் இருந்தால் பாசமும், நேசமும் நிலைத்து நிற்கும். வாரிசுகளின் செயல்களால் உங்களுக்கு பெருமை சேரும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தை தவிர்த்து செலவுகளை திட்டமிட்டு செய்யுங்கள்.
அரசு, அரசியல் துறை சார்ந்தவர்கள் சட்டத்தை மீறாமல் இருந்தால் சாதகமான சூழல் உருவாகும். பொது இடங்களில் பேச்சில் கவனம் தேவை. உடனிருந்தே உபத்திரவம் செய்யக்கூடியவர்களை அடையாளம் கண்டு உடனே விலக்கி விடுங்கள். புதிய நபர்களுடன் அவசர ஒப்பந்தம் கூடாது. கூட்டுத்தொழில் சீரான லாபம் கிடைக்கும்.
மாணவர்கள் அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படிக்க வேண்டும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் சிலருக்கு உண்டு. கல்விக் கடன்கள் நிச்சயம் கைகூடும.
கலை மற்றும் படைப்புத் துறையினர் வீண் ரோஷன் தவிர்த்தால் விசேஷ பலன்களை பெறலாம். புதிய வாய்ப்புகளை வார்த்தை எனும் நெருப்பால் நீங்களே விரட்டி விட வேண்டாம்.
பெண்களுக்கு அனுகூலமான ஆண்டு. வருட ஆரம்பத்தில் சுப காரியங்களுக்கு அஸ்திவாரம் இட்டு வைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்து சேரும். மண வாழ்க்கையும், குழந்தை பேறும் குலதெய்வத்தை மனதார கும்பிட்டால் கைகூடும். பணி புரியும் பெண்கள் தேவையற்ற கர்வம் தவிர்த்தால் சர்வமும் ஜெயமாகும்.
பயணத்தில் கவனச்சிதறல் கூடாது. கண், நரம்பு, மூட்டு உபாதைகள், வீண் படபடப்புகள் வரலாம்.
இந்த வருடம் முழுவதும் சிறப்பாக அமைய விநாயகரை வழிபடுங்கள். குறிப்பாக சங்கடகர சதுர்த்தி அன்று அசைவம் தவிர்த்து விநாயகரை வழிபட்டு வாருங்கள் உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை நீக்கி நன்மைகளை தருவார்.










