குரு தசா பலன்கள்
குரு தசா(Guru Dasa)16 வருடங்கள் நடைபெறும். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலம் பெற்று சூரியன், சந்திரன், செவ்வாய் போன்ற நட்பு கிரகங்களின் சேர்க்கை, சாரம் பெற்று ஆட்சி, உச்சம் பெற்றால் பூமி, மனை, வீடு போன்றவற்றால் சிறப்பான அனுகூலம் உண்டாகும்.
குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். சமுதாயத்தில் பெயர், புகழ், மதிப்பு, மரியாதை உயரும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் நாணயம் தவறாமல் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் பெரியோர்களின் ஆசியும் கிட்டும். அரசு வழியில் அனுகூலம், வங்கிப் பணிகளில் உயர் பதவி, ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்பு, பலருக்கு உதவி செய்யும் அமைப்பு, சமூக பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
ஆலய நிர்வாகப் பணிகளில் உயர் பதவிகள் கிட்டும். கல்வியில் சாதனை புரியும் அமைப்பு உண்டாகும். ஆன்மீக- தெய்வீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பல நற்பணிகளுக்கு செலவு செய்யும் வாய்ப்பு அமையும்.
குரு பலம் இழந்து பகை, நீசம், வக்ரம், பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வை பெற்றால் குரு தசா காலங்களில் கௌரவ குறைவு, தேவையற்ற அவமானம், கடுமையான நெருக்கடிகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கடன் தொல்லைகள் அதிகரிக்கும். நிலையற்ற விஷயத்தில் முதலீடு செய்யாமல் இருப்பதும் மற்றவர்களுக்கு பணம் கொடுக்காமல் இருப்பதும் நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை, நாணயக் குறைவால் சமுதாயத்தில் மதிப்பு குறையும் நிலையும் உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை போன்றவை உண்டாகும். எதிர்பாராத கண்டங்களும், சோதனைகளும் ஏற்படும். குடும்பத்தில் வறுமை, புத்திரர்கள் இடையே பகை மற்றும் புத்திரபாக்கியமின்மை, சுபகாரியங்களில் தடை, உற்றார் உறவினர்களுடன் விரோதம், செய்யும் தொழில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். பிராமணர்களின் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை, எதிர்பாராத தன விரயங்கள், குடும்பத்தில் நிம்மதி குறைவு, கணவன்-மனைவியிடையே ஒற்றுமையின்மை ஏற்படும்.
ஜாதகத்தில் 2ம் இடமும் தனகாரகன் குருவும் சிறப்பாக இருந்தால் பொருளாதார நிலை மேன்மையாக அமையும். குரு அந்தணன் என்பதால் தனித்து அமைவதை விட மற்ற கிரகங்களின் சேர்க்கையுடன் அமைவதே சிறப்பு. அதிலும் குரு கிரக சேர்க்கையுடன் ஆட்சி, உச்சம் பெற்று அமைந்திருந்தால் குரு தசாவில் உண்டாகக்கூடிய நற்பலன்களை வர்ணிக்கவே முடியாது.
குரு சந்திரனுக்கு கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் கஜகேசரி யோகமும், திரிகோண ஸ்தானங்களில் அமைந்தால் குருச்சந்திர யோகமும், செவ்வாய்க்கு கேந்திரத்தில் குரு அமைந்தால் குரு மங்கள யோகமும், குரு உச்சம் பெற்று கேந்திர திரிகோணங்களில் இருந்தால் அம்ச யோகமும், கேது சேர்க்கை பெற்றால் கோடீஸ்வர யோகமும், ராகு சேர்க்கை பெற்றால் சண்டாள யோகமும் உண்டாகிறது. இந்த கிரக சேர்க்கைகள் பெற்று தசா புத்தி வரும் பொழுது அனுகூலமான நற்பலன்களை அடைய முடியும்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் குருவுக்கு உரியதாகும். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு குரு தசா முதல் திசையாக வரும்.
குரு பலம் பெற்று குரு தசா முதலாக குழந்தை பருவத்தில் நடைபெற்றால் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியம், சுறுசுறுப்பு, பெற்றோருக்கு மேன்மை உண்டாகும்.
இளமை பருவத்தில் குரு தசா(Guru Dasa) நடைபெற்றால் கல்வியில் மேன்மை, நல்ல அறிவாற்றல், தெய்வீக எண்ணம், பரந்த மனப்பான்மை, மற்றவர்களிடம் நல்ல பெயர் எடுக்கும் அமைப்பு உண்டாகும்.
மத்திம பருவத்தில் நடைபெற்றால் தாராள தனவரவுகள், நல்ல பழக்கவழக்கம், பொதுநலப் பணிகளில் ஈடுபடும் அமைப்பு, கௌரவமான நிலை ஏற்படும்.
முதுமை பருவத்தில் குரு தசா(Guru Dasa) நடைபெற்றால் ஆன்மீக-தெய்வீக காரியங்களில் நாட்டம். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் கொள்ளும் வாய்ப்பு, பரந்த மனப்பான்மையாவும் உண்டாகும்.
குரு பலமிழந்து குரு தசா(Guru Dasa) குழந்தை பருவத்தில் தசா நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, வயிற்றுக் கோளாறு உண்டாகும்.
இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் தடை, வீண் செலவுகளை செய்து மற்றவர்களிடம் அவர் பெயர் எடுக்கும் நிலை ஏற்படும்.
மத்திம வயதில் நடைபெற்றால் புத்திர பாக்கியத் தடை, புத்திர வழியில் கவலை, பொருளாதாரத் தடை, குடும்பத்தில் நிம்மதி குறைவு, உறவினர்களிடையே பகை உண்டாகும்.
முதுமை பருவத்தில் குரு தசா(Guru Dasa) நடைபெற்றால் சமுதாயத்தில் அவப்பெயர், தேவையற்ற பழக்க வழக்கங்களால் அவமரியாதை, பிறர் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை, உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்.
குரு 12 பாவங்களில் அமைந்து தசா நடந்தால் ஏற்படக்கூடிய பலன்கள்.
- குரு லக்னத்தில் அமர்ந்து தசா நடைபெற்றால் சிறப்பான உடல் ஆரோக்கியம், அரசாங்கத்தின் மூலம் அனுகூலம், மனைவி புத்திரர்களால் நற்பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் உதவி கிட்டும். எதிர்பாராத தன சேர்க்கையால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெயர் ,புகழ் கூடும்
- குரு 2-ல் இருந்து தசா நடைபெற்றால் குடும்பத்தில் சிறப்பான முன்னேற்றம், திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, கணவன்-மனைவி உறவில் இனிமையும், அழகான புத்திர பாக்கியமும், நல்ல பேச்சாற்றலும், கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாணயமும், உண்மை பேசும் குணமும் உண்டாகும். ஆலயங்களுக்காக செலவு செய்கின்ற அமைப்பு, தாராள தனவரவுகள், ஆடை ,ஆபரண சேர்க்கை போன்ற நற்பலன்கள் கிடைக்கும்
- குரு 3-ல் இருந்து தசா நடைபெற்றால் சகோதர விருத்தி, சகோதரர்களால் மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, தைரியமாக செயல்படும் திறன் உண்டாகும். பல சாதனைகள் செய்ய முடியும். பொருளாதாரமும் சிறப்படையும்.
- குரு 4-ல் இருந்து தசா நடைபெற்றால் நல்ல ஆரோக்கியம், தாய் வழியில் மேன்மை உண்டாகும். வீடு ,மனை வண்டி, வாகன சேர்க்கைகள் ஏற்படும். செல்வம், செல்வாக்கு உயர்வடையும். மனைவி குழந்தைகளுடன் சுகமாக வாழும் யோகம் உண்டாகும்.
- குரு 5-ல் இருந்து தசா நடைபெற்றால் சிறப்பான அறிவாற்றல், உயர்கல்வி யோகம் உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். அழகான புத்திர பாக்கியம் கிட்டும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஆடை, ஆபரணம் சேரும். புண்ணிய காரியங்களுக்காக தானதர்மங்கள் செய்யும் வாய்ப்பு உண்டாகும்.
- குரு 6-ல் இருந்து தசா நடைபெற்றால் எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும் என்றாலும், இடம் விட்டு இடம் மாறும் அமைப்பு, மனைவி பிள்ளை வழியில் வீண் பிரச்சனைகள், உடல் நலக் குறைவுகள், பொருளாதாரத் தடைகள் உண்டாகும்.
- குரு 7-ல் இருந்து தசா நடைபெற்றால் குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும். மனைவிக்கு நல்ல ஆரோக்கியம் உண்டாகும். குழந்தை பாக்கியம் அமையும். பொன்,பொருள் சேரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். தான தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.
- குரு 8-ல் இருந்து தசா நடைபெற்றால் கௌரவக் குறைவு, கொடுக்கல்-வாங்கலில் பிரச்சனை, மனைவி பிள்ளைகளால் மருத்துவ செலவுகள், எதிர்பாராத ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். வீண் விரயங்கள் உண்டாகும்.
- குரு 9-ல் இருந்து தசா நடைபெற்றால் சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். நல்ல அறிவாற்றல் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் பூர்வீக வழியிலும் அற்புதமான நற்பலன்களை அடைய முடியும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆடை,ஆபரணம் சேரும்.
- குரு 10-ல் இருந்து தசா நடைபெற்றால் நல்ல புகழ், பெயர் அந்தஸ்து செல்வம், செல்வாக்கு கூடும். பல பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். மனைவி பிள்ளைகளால் மேன்மை ஏற்படும். வண்டி, வாகனம், ஆடை, ஆபரணம் சேரும். உத்தியோகத்தில் உயர் பதவியும், ஊதிய உயர்வும் தேடி வரும்.
- குரு 11-ல் இருந்து தசா நடைபெற்றால் கைநிறைய சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். ஆடை, ஆபரணம் வீடு மனை வண்டி வாகனங்கள் சேரும். பல பெரிய மனிதர்கள் பாராட்டுதல்களும் ஆதரவும் கிட்டும். தொழில் உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும்.
- குரு 12-ல் இருந்து தசா நடைபெற்றால் பிள்ளைகளாலும், உற்றார் உறவினர்களாலும், நெருக்கமானவர்களாளும் மனக்கஷ்டங்கள் உண்டாகும். வரவை விட செலவு அதிகமாகும் என்றாலும் செய்யும் செலவுகள் சுப செலவுகளாக இருக்கும். தன தானிய லாபமும் ஓரளவு உண்டாகும்.
குரு கிரக சேர்க்கையுடன் அமையப் பெற்றால் அதன் தசா புக்தி காலத்தில் ஏற்றமிகு பலனை வழங்குவார்.