சுக்கிர தசா- சுக்கிர புத்தி பலன்கள்
சுக்கிர தசாவில்(Sukra Dasa ) சுக்கிர புத்தி 3 வருடம் 4 மாதங்கள் நடைபெறும்.
சுக்கிரன் லக்னத்திற்கு கேந்திர கோணங்களிலும் 2,11-ஆம் இடங்களிலும், ஆட்சி, உச்சம் பெற்று, சுபகிரக சேர்க்கை, பார்வையுடன் அமைந்திருந்தால், வண்டி, வாகனங்கள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சொந்த வீடு கட்டி குடியேறும் அமைப்பு, ஆடம்பர பொருள் சேர்க்கை, குடும்பத்தில் லட்சுமி கடாட்சம், திருமண சுப காரியங்கள் நடைபெறும் அமைப்பு, அழகான புத்திர பாக்கியம் உண்டாகும். மனைவி மற்றும் பெண்களால் அனுகூலம், அசையா சொத்து சேர்க்கை, சந்தோஷம், பகைவரை வெற்றிகொள்ளும் அமைப்பு, வியாபாரம், தொழிலில் உயர்வு, கலை உலகில் சாதனை செய்யும் ஆற்றல், இசையில் நாட்டம் போன்ற சிறப்பான பலன்கள் உண்டாகும்.
சுக்கிரன் 6,8,12-ல் அமையப் பெற்றாலும், வக்கிரம், பகை, நீசம், அஸ்தங்கம் பெற்று இருந்தாலும், பாவிகள் சேர்க்கை, பார்வை பெற்று புத்தி நடைபெற்றாலும், நெருக்கமான உற்றார்-உறவினர்களுடன் பகை, வாழ்வில் நிம்மதி குறைவு, மனைவிவழியில் கஷ்டம், சச்சரவு, பெண்களால் அவமானம், தவறான பெண் சேர்க்கை, வண்டி வாகனங்களால் வீண் விரயம், வீடு மனை மற்றும் ஆடம்பரப் பொருள்களை இழக்கக்கூடிய நிலை, குடும்பத்தில் வறுமை, பணக்கஷ்டம், இடம் விட்டு இடம் செல்லும் அமைப்பு உண்டாகும்.
சுக்கிர தசா- சூரிய புத்தி பலன்கள்
சுக்கிர தசையில்(Sukra Dasa ) சூரிய புக்தியானது 1 வருடம் நடைபெறும்.
சூரியன் பலம் பெற்றிருந்தால் பகைவரை வெல்லும் வலிமை, அரசு வழியில் அனுகூலங்கள், வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் யோகம், ஆடை ஆபரண சேர்க்கை, தாராள தன வரவு, தந்தை மற்றும் தந்தைவழி உறவுகளால் அனுகூலம், சமுதாயத்தில் பெயர் புகழ் உயரும் யோகம், அரசியலில் ஈடுபாடு, வீடு மனை சேரும் யோகம் போன்றவை உண்டாகும்.
சூரியன் பலமிழந்திருந்தால் அரசு வழியில் தொல்லை, வேலையாட்களால் பிரச்சனை, இடம் விட்டு இடம் போகும் நிலை, தந்தைக்கு தோஷம், பூர்வீக வழியில் அனுகூலமற்ற நிலை, பங்காளிகளுடன் வம்பு, வழக்கு, சமுதாயத்தில் கௌரவ குறைவு, கண்களில் பாதிப்பு போன்ற சாதகமற்ற பலன் ஏற்படும்.
சுக்கிர தசை சந்திர புத்தி பலன்கள்
சுக்கிர திசையில்(Sukra Dasa ) சந்திர புத்தி 1வருடம் 8 மாதம் நடைபெறும்.
சந்திரன் பலம் பெற்றிருந்தால் பெண்களால் யோகம், ஜல தொடர்புடையவற்றால் அனுகூலம், வெளியூர் வெளிநாட்டு பயணங்களால் லாபம், தாய் வழியில் மேன்மை, ஆடை, ஆபரணம், வண்டி வாகன சேர்க்கை, பெண் குழந்தை பிறக்கும் யோகம், கணவன்-மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். நினைத்தது நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும்.
சந்திரன் பலமிழந்திருந்தால் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் நிலை, ஜல தொடர்புடைய உடல்நிலை பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, தாய்க்கு கண்டம், தாய் வழி உறவுகளிடையே பகை, ஜீரணமின்மை, வயிற்றுக் கோளாறு, பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு, கண்களில் பாதிப்பு, வண்டி வாகனங்களால் வீண் விரயம், தேவையற்ற மனக்குழப்பங்கள், எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தாமத நிலை போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
குறிப்பு : சுக்கிர திசைக்கு அடுத்த தசா -சூரியன் திசை
சுக்கிர தசா- செவ்வாய் புத்தி பலன்கள்
சுக்கிர தசாவில்(Sukra Dasa ) செவ்வாய் புத்தியானது 1 வருடம் 2 மாதங்கள் நடைபெறும்.
செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி மனை அனுகூலம் உண்டாகும்.இழந்த சொத்துக்கள் யாவும் திரும்ப கைக்கு கிடைக்கும். குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். பகைவர்களை வெல்லும் தைரியம், துணிவு, வீரம், விவேகம் யாவும் ஏற்படும். அரசு வழியில் அனுகூலம், சிறந்த நிர்வாகத் திறனும் உண்டாகும்.
செவ்வாய் பலமிழந்திருந்தால் பூமி மனை மூலம் வீண் செலவு, உஷ்ண சம்பந்தப்பட்ட உடல் நிலை பாதிப்பு, நெருப்பால் கண்டம், ஆயுதத்தால் காயம் படும் நிலை, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை, பணக்கஷ்டம், சகோதரர் மற்றும் பங்காளிகளால் மனக்கவலை, தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்கும் சூழ்நிலை, கலகம், அரசு வழியில் தொல்லை உண்டாகும்.
சுக்கிர தசா- ராகு புத்தி பலன்கள்
சுக்ர தசாவில் ராகு புத்தி 3 வருடங்கள் நடைபெறும்.
ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் சுகபோக வாழ்க்கை, பகைவரை வெல்லும் ஆற்றல், குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும் அமைப்பு, அரசு வழியில் அனுகூலம், எதிர்பாராத தனவரவுகள், வெளியூர் பயணங்களால் சம்பாதிக்கும் யோகம், போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் உடல் நிலையில் பாதிப்பு, அலர்ஜியால் கண்டம், உணவே விஷமாக கூடிய நிலை,வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள், புத்திர பாக்கியம் உண்டாக தடை, எதிர்பாராத விபத்துக்களால் கண்டம், வம்பு வழக்குகளில் தோல்வி, இடமாற்றங்களால் அலைச்சல், தேவையற்ற பெண் சேர்க்கை, தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை ஏற்படும்.
சுக்கிர தசா- குரு புத்தி பலன்கள்
சுக்கிர தசையில் குரு புத்தியானது 2 வருடம் 8 மாதங்கள் நடைபெறும்.
குரு பகவான் பலம் பெற்று இருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், மகிழ்ச்சி, திருமண சுப காரியங்கள், நடைபெறும் அமைப்பு, எடுக்கும் காரியங்களில் வெற்றி, அரசு வழியில் ஆதரவுகள், மற்றவர்களுக்கு உபதேசிக்கும் அமைப்பு, பகைவரை வெல்லும் ஆற்றல், ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படும்.
குரு பலமிழந்திருந்தால் அரசு வழியில் பிரச்சனை, உடல் நிலையில் பாதிப்பு, சமுதாயத்தினரால் அவமதிப்பு, பிராமணர்களால் சாபம், எதிர்பாராத விபத்துக்களால் கண்டம், பணக்கஷ்டம், கணவன்-மனைவியிடையே ஒற்றுமை குறைவு, சுபகாரியங்களில் தடை, சமுதாயத்தில் கௌரவ குறைவுகள் உண்டாகக் கூடிய நிலை ஏற்படும்.
சுக்கிர தசா- சனி புக்தி பலன்கள்
சுக்கிர தசையில் சனி புக்தியானது 3 வருடம் 2 மாதம் நடைபெறும்.
சனி பலமாக இருந்தால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் மேன்மை, அரசு வழியில் அனுகூலம், வண்டி வாகனம் அசையா சொத்துக்கள் சேரும் யோகம், நிறைய வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் அமைப்பு போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
சனி பலவீனமாக இருந்தால் எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், எதிர்பாராத விபத்துக்களால் கண்டம், மற்றவர்களிடம் அடிமையாக தொழில் செய்யும் அமைப்பு, வண்டி வாகனங்கள் மூலம் வீண் செலவு, எதிரிகளால் தொல்லை உண்டாகும்.
சுக்கிர தசா- புதன் புத்தி பலன்கள்
சுக்கிர தசையில் புதன் புக்தியானது 2வருடம் 10 மாதம் நடைபெறும்.
புதன் பலமாக இருந்தால் கணக்கு, கம்ப்யூட்டர் துறையில் ஈடுபாடு உண்டாகும். தொழில்-வியாபார நிலையில் முன்னேற்றம், ஆடை ஆபரணம், வண்டி வாகன சேர்க்கை, பலருக்கு ஆலோசனை கூறும் அமைப்பு, அறிவாற்றல், பேச்சாற்றல், ஞாபக சக்தி, தான தரும காரியங்கள் செய்யக்கூடிய வாய்ப்பு அமையும். நினைத்தது நிறைவேறும். பகைவர்களை வெல்லும் ஆற்றல், தாய் மாமன் வழியில் முன்னேற்றம் உண்டாகும்.
புதன் பலவீனமாக இருந்தால் தேவையற்ற அவமானங்களை சந்திக்கும் அமைப்பு, மனக்கவலைகள், உறவினர்களுடன் பகை, கலகம், புத்திரர்கள் மற்றும் நண்பர்களால் மனக்கவலை, தொழில்-வியாபார நிலையில் நலிவு, நஷ்டம், பணவிரயம், திருமண நடைபெற தடை, தாமதம், நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்பு, ஞாபக சக்தி குறைவு, கல்வி, கணிதம் கம்ப்யூட்டரில் ஈடுபாடு இல்லாத நிலை உண்டாகும்.
சுக்கிர தசா-கேது புத்தி பலன்கள்
சுக்கிர தசாவில் கேது புக்தியானது 1 வருடம் 2 மாதங்கள் நடைபெறும்.
கேது நின்ற வீட்டதிபதி பலமாக இருந்தால் தீர்த்த யாத்திரைக்குச் செல்லும் வாய்ப்பு, ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, ஆடை ஆபரண சேர்க்கை, ஆலய தரிசனங்கள், பகைவரை வெல்லும் ஆற்றல் உண்டாகும். தாராள பணவரவு கிட்டும்.
கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மனக்குழப்பம், உடல்நிலை பாதிப்பு, வயிறு கோளாறு, கல்வியில் மந்தநிலை, விபத்துக்களால் கண்டம், பணவிரயம், பெண்களால் வீண் பிரச்சனைகள், இடம் விட்டு இடம் சுற்றித்திரியும் சூழ்நிலை உண்டாகும்.
சுக்கிர தசாவுக்குரிய பரிகாரங்கள்:
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வெள்ளை நிற தாமரைப் பூவால் அர்ச்சனை செய்வது வைரக்கல் மோதிரம் அணிவது, மொச்சை பயிறு, தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வது உத்தமம்.