குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-விருச்சிகம்
அதிக புத்திக்கூர்மையும், சமூகப்பற்றும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2, 5 அதிபதியான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு முன்னேற்றம் ஏற்படும்.
கடந்த காலங்களில் இருந்த பொருளாதார நெருக்கடிகள், மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருந்து குடும்பத்தேவைகள் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.
7-ல் சஞ்சரிக்கக் கூடிய குருபகவான் தனது சிறப்பு பார்வையாக ஜென்ம ராசி, 3, 11 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் எதிலும் உற்சாகத்துடன் செயல்படக்கூடிய பலம், உங்களுடைய அனைத்து முயற்சிகளும் பரிபூரண வெற்றியை தரக்கூடிய அனுகூலமான நிலை, எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்களது உடல் ஆரோக்கியமானது மிகச்சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தேவையற்ற வீண்செலவுகள் குறைந்து சேமிக்க கூடிய அளவிற்கு ஒரு அனுகூலமான நிலை உண்டாகும்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகி தற்போது ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டு கௌரவமான நிலையினை அடைவீர்கள். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. போட்ட முதலீடுகளை சுலபமாக எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய முடியும். தொழில் நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்தகால அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உங்கள்மீது இருந்த வீண் அவப்பெயர்கள் எல்லாம் தற்போது விலகுவதால் இருக்கக்கூடிய இடத்தில் நல்ல பெயர் எடுத்து ஒரு கௌரவ நிலையினை அடைய முடியும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பணியில் முழு ஈடுபாடுடன் செயல்படமுடியும். நீண்டநாட்களாக புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தற்போது ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களால் முடிக்க முடியாத பணியை கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமண வயது அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் இருக்கிறது.
இந்த தருணத்தில் ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் அமைய பெற்று ‘அர்த்தாஷ்டமச்சனி’ நடப்பதால் ஒரு சில அலைச்சல் இருந்தாலும் குருவின் சாதக சஞ்சாரத்தால் எதையும் சமாளித்து அடைய வேண்டிய அனுகூலத்தை அடைவீர்கள்.
உங்கள் ராசிக்கு 5-ல் ராகு, 11-ல் கேது சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. குறிப்பாக ஒருசிலருக்கு பிள்ளைகள் வழியில் சின்ன சின்ன கவலைகள் ஏற்பட்டாலும் நீங்கள் சற்று நிதானத்தோடு செயல்பட்டால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.
குருபகவான் வக்ரகதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை
குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் கேது 11-ல் சஞ்சரிப்பதால் எதிலும் ஓரளவுக்கு நற்பலன்களை அடைவீர்கள் பண விஷயத்தில் மட்டும் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு முன்னேற்றமாக இருக்கும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள்.
குருபகவான் பார்வை
குரு பார்வை : 1ம் இடம் (ஜென்மம்),3ம் இடம் (தைரியம்) ,11ம் இடம் (லாபம்) |
சனி 4-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும் பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக அமைந்து குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றிகளைப் பெற முடியும் என்றாலும் சுப காரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளையும் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் பெறமுடியும் எதிலும் நீங்கள் சற்றுமுனைப்புடன் செயல்பட்டால் பொருட் தேக்கங்கள் ஏற்படாமல் வளர்ச்சி அடைவதற்கான யோகம் உண்டு உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் எதையும் சமாளித்து நற்பெயர் எடுக்க முடியும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள்.
பரிகாரம்
விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச்சனி நடப்பதால் சனிக்கிழமைதோறும் சனிபகவானின் ஆலயத்திற்கு சென்று நீலச்சங்கு மலர்களால் சனியை அலங்கரித்து வழிபடலாம். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்யலாம்.
சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு செல்வது, முடிந்தால் திருப்பதிசென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்வது நல்லது.
ராகு 5-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும் சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது. கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 1, 2, 3, 9
நிறம் : ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை: செவ்வாய், வியாழன்
கல்: பவளம்.
திசை: தெற்கு
தெய்வம்: முருகன்