குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 -ரிஷபம்
சாந்தமான குணம் இருந்தாலும் கோபம் வந்தால் கட்டுப்படுத்த முடியாத இயல்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு இதுநாள்வரை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தான மான 12-ல் சஞ்சரித்த குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதன் மூலம் தனது சிறப்பு பார்வையாக S, 7, 9 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பார்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 11-ஆம் வீட்டில் நிழல் கிரகமான ராகு பகவான் சஞ்சாரம் செய்வதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த வீண்செலவுகள் தற்போது குறையும். பணவரவுகள் ஏற்ற- இறக்கமாக இருந்தாலும் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள்.
பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை மிகமிக சிறப்பாக இருக்கும். பெற்றோர்களுடைய ஆசிர்வாதம் சிறப்பாக கிடைப்பதால் குடும்பத்தில் மனநிம்மதி ஏற்படும். மனைவி, பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கித் தரக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு.
குருபகவான் பார்வை
குரு பார்வை : 5ம் இடம் (பூர்வ புண்ணியம் ),7ம் இடம் (களத்திரம் ),9ம் இடம் (பாக்கியம் ,தந்தை ,வெளிநாடு ) |
உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்து வகையில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள் என்றாலும் பங்காளியிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டில் தர்மகர்மாதிபதியான சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையோடு செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும்.
தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை நீங்கள் சரிவர பயன்படுத்திக் கொண்டால் போட்ட முதலீடுகளை எளிதில் எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் உங்களின் தனித்திறமையால் எதிலும் சிறப்பாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்.
தொழில்ரீதியாக சில நெருக்கடிகள் இருந்தாலும் கூட்டாளிகள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும் என்பதால் தொழிலுக்கு ஒரு சிலரின் நல்ல ஆதரவு கிடைத்து அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை தற்சமயத்துக்கு சரிவர பராமரித்து வந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த அலைச்சல்கள் எல்லாம் தற்போது குறைந்து பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சக ஊழியர்களிடம் பேச்சை குறைத்து விட்டு உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது மிக மிக நல்லது.
அதிகாரிகள் ஆதரவு சாதகமாக இருப்பதால் கடினமான பணிகளை கூட சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஒரு சிலருக்கு வேலைப்பளு காரணமாக ஓய்வு நேரம் குறையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குரு பார்வை 7ம் வீட்டுக்கு இருப்பதால் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. திருமணமான புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கிய யோகமானது விரைவில் கிடைக்கும். கடந்தகாலங்களில் இருந்து வந்த கடன் தொல்லைகள் ஓரளவுக்கு குறைந்து மனமகிழ்ச்சி ஏற்படும்.
குரு பகவான் வக்ரகதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை
குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்கள் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக செயல்பட்டால் ஓரளவு மேன்மைகளை அடையலாம். உடல் நிலையில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்புடன் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
உற்றார்- உறவினர்களின் வருகையால் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி வெற்றிகிட்டும் நீண்டகால வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். நண்பர்களும் தக்க சமயத்தில் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்-வாங்கல் மிக சிறப்பாக இருக்கும். புத்திரவழியில் தேவையற்ற கவலை ஏற்படும்.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். உடன் பிறப்புகளால் ஓரளவுக்குச் சாதகமான பலனைப் பெறுவீர்கள். கடன்கள் சற்று குறையும்.
உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத இடமாற்றங்களால் பொருளாதார ஆதாயங்களை அடைவீர்கள். மாணவர்களின் கல்வி திறன் சிறப்பாகவே இருக்கும்.
பரிகாரம்
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருவுக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சன்நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
உங்களுக்கு சனி 10-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு செல்வது நவகிரகங்களில் உள்ள சனிபகவானுக்கு அர்ச்சனை செய்வது ,கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது நல்லது. கருப்புநிற ஆடை கைக்குட்டை பயன்படுத்துவது நல்லது. சனிப்ரீதியாக அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்யலாம்.
ஜென்ம ராசிக்கு 5-ல் கேது சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. சதூர்த்தி விரதங்கள் இருப்பது. முடிந்த உதவிகளை எழை எளியவர்களுக்கு செய்வது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 5, 6, 8
நிறம்: வெண்மை நீலம்
கிழமை: வெள்ளி, சனி
கல்: வைரம்
திசை: தென்கிழக்கு
தெய்வம்: விஷ்ணு லக்ஷ்மி