நாடாளும் யோகம்
ஒவ்வொரு ஜாதகமும் பலவித பரிணாமங்களை உள்ளடக்கியதாகவே உள்ளன. தோஷம், யோகம், பாபம், சுபம் என மாறி மாறி கலந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் ஜாதக வலுவுக்கு ஏற்றவாறு மனிதனை பண்படுத்துகின்றன. அந்த வழியில் பண்படுத்தப்பட்ட மனிதர்களின் மனநிலையும் மாறுபட்டுக் கொண்டே வருகிறது. மனமாற்றம் மூலம் உந்துதல் சக்தி தருவது தசா புத்தி காலங்களே ஆகும்.
நேற்று வரை நாத்திகம் பேசியவர்கள் திடீரென்று கோயில் கும்பாபிஷேகத்துக்கு செல்வதன் காரணமும் தசா புத்திகளே! அடிப்படையில் ஜாதகங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1.யோக ஜாதகம்
2.சாதாரண ஜாதகம்
3.தோஷ ஜாதகம்
சாதாரண ஜாதகம்; என்பது சகடயோகம் போன்றது. குறிப்பிட்ட சில வருடங்கள் அபரிவிதமான செல்வாக்கு, புகழ் தரும். மீண்டும் சரிவை நோக்கி செல்லும். கண்ணுக்கு புலனாகாத தோஷங்கள் ஜாதகங்களில் கலந்து இருக்கவே செய்யும்.
தோஷ ஜாதகம்; என்பது தோல்வி அடைந்த நிலையை காட்டும். என்ன பரிகாரம் செய்தாலும் குறைகளை அகற்ற முடியாது (அல்லது) அகற்றுவதற்கு வழி இல்லாமல் தான் இருக்கும். தோஷம் கூடிய ஜாதகங்கள் சாதாரண வேலையாட்கள், அடிமைக்கூலிகள், அன்றாட சாப்பாட்டுக்கே திண்டாடும் ஏழைகள் என பலரை காணலாம்.
யோக ஜாதகம்; என்பது ஒரு மனிதனை சிறப்பான அந்தஸ்தில் வைக்கும். உயரிய யோகங்கள் அமையும் போது அந்த ஜாதகரை கோபுரத்தின் உச்சியில் உயர்த்தும். இதுதான் ‘நாடாளும் யோகம்’ என்பது. பண்டைய காலத்திலும் சரி இன்றைய காலகட்டங்களிலும் சரி அரசியலமைப்பு முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை. மாறாக பதவிகளும், பொறுப்புகளும் மாறி உள்ளன. மன்னராட்சி என்பது மக்களாட்சி என்றும் மாறியுள்ளது.
நாடாளும் வழிமுறைக்கு கிரகங்கள் எந்த வழியில் உந்துதல் சக்தி அளிக்கிறது?அதன் பரிணாமம் எப்படி இருக்கும்? ஜாதக கிரக நிலையில் எந்த விதத்தில் அமைந்தால் நாட்டை ஆளும் தகுதியை பெற முடியும்? என்பதை இனி காணலாம்.
பதவி என்பது பொதுநல சிந்தனையே. பதவிக்கு வருபவர்களுக்கு தன்னலமற்ற சமூக சிந்தனை வேண்டும். சிலருக்கு சுயநலம் என்று இருந்தாலும் பெரும்பாலான விஷயங்களில் பொதுநலனையே பெற்றிருப்பார்கள். பொதுநலம் சார்ந்த எண்ணங்களை தருவது சர லக்னம் எனலாம்.
சர லக்னங்களான மேஷம், கடகம், துலாம், மகரம் போன்ற லக்னங்களில் பிறந்தவர்கள் நாடு ஆள முடியும் என்பதற்கு பலரின் உதாரணங்களைக் கண்டு இருப்போம்.
ஸ்திர,உபய லக்னங்களில் பிறந்த ஜாதகர்கள் நாட்டை ஆளும் தகுதியை பெறுவது சற்று சிரமம்தான். மேற்கண்டது போல்50% ஸ்திர லக்கினங்கள் ஆளும் வைப்பை ஏற்படுத்தினாலும், அது நீடித்த யோகத்தை தருவதில்லை. உதாரணமாக முன்னாள் பாரத பிரதமர் உயர்திரு ராஜீவ் காந்தி அவர்கள் சிம்ம லக்கினம், சிம்ம ராசியில் பிறந்துள்ளார். 12-ஆம் இடம் கடக ராகு அவருக்கு ஆட்சி பீடத்தை வழங்கினார்.
லக்னத்தில் இருக்கும் யோகர்களால் ராஜ யோகமாக்கப்பட்டு நமது இந்திய தேசத்தை ஆண்ட பெருமை அவரைச் சாரும். ஆனாலும் அது நீடித்து நிலைக்கவில்லை.
கேந்திரங்களும் திரிகோணங்களும் மற்றும் அதன் அதிபதிகளும் நல்ல பலன் கொடுக்கும் நிலையில் அமைய வேண்டும். கேந்திராதிபதி கேந்திர பலமும், திரிகோணாதிபதி திரிகோண பலமும் பெறவேண்டும். பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்று, மற்றும் ராஜ யோகம், தர்ம கர்மாதிபதி யோகம், அமலா யோகம், கஜகேசரி யோகம், சந்திர மங்கள யோகம் போன்ற முக்கிய யோகங்கள் அமைய வேண்டும்.
நாடாளும் தகுதி படைத்த ஒருவருக்கு அல்லது அவரின் பேச்சுக்கு வழிகாட்டுதலுக்கு பல கோடி மக்கள் தலையை ஆட்டிட 2ம் இடம் வலுக்க வேண்டும். சனியும் ராகுவும் பத்தாமிடம் மற்றும் அதன் அதிபதியுடன் சம்பந்தப்பட வேண்டும். சனியோ அல்லது ராகுவோ இல்லாமல் அரசியல் என்னம் ஏற்படாது.
3,6,8,10,11 போன்ற இடங்களில் சூரியன் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். 8ம் இடத்தில் சூரியன் புதன் இணைவு நாடாளும் யோகம் என்கிறது மூல நூல்கள். 3க்கு உடையவனும் பலம் பெற்றால் ஆளும் தகுதி தானாக வந்துவிடும்.
பூர்வ புண்ணியம் (5ம் இடம்) வலுக்க வேண்டும். புகழ் ஸ்தானாதிபதி எனப்படும் ஐந்தாம் இடத்து அதிபதி மறைவிடங்களில் நிற்பது அரசியல் யோகத்தை தராது. சரியான யோகமான தசா புத்திகளில் குறிப்பிட்ட காலத்தில் நடக்க வேண்டும்.
குறிப்பு: பாவ கிரகங்கள் ஆட்சி பீடத்தை அலங்கரிக்கும். அதிலும் சனி, ராகு, சூரியன், செவ்வாய் போன்ற தசா புத்தி காலங்களில் ஒருவரை ஆட்சி பீடத்தில் அமர வைக்கும். மற்ற கிரகங்கள் ஒவ்வொரு வகையிலும் ஒரு யோகத்தை தருமேயன்றி ஆட்சி பீடத்தை தராது. ஆக மேற்கூறிய அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள ஜாதகம் ஒரு தேசத்தை ஆளும் என்பது தான் ஜோதிடம் கூறும் உண்மை.