ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025- மிதுன ராசி
சமயோகித அறிவும் சாமர்த்தியமும் உடைய மிதுன ராசி அன்பர்களே உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வரும் 2025 ஆம் வருடம் உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்..
2025 ஆம் வருடம் தொடங்கும்போதே சகல விதத்திலும் சாதகங்கள் ஏற்பட தொடங்கிவிடும். அதே சமயம் பொறுமையும், விட்டுக் கொடுத்தாலும் இருந்தால் மட்டுமே நல்லவை நிலைத்திருக்கும்.
வேலை
வேலை பார்க்கும் இடத்தில் எண்ணம் போல் ஏற்றவும், மாற்றமும் வரத் தொடங்கும். இந்த சமயத்தில் வீண் சலிப்பும் வேண்டாத ரோஷமும் இருக்கவே கூடாது. அதிகரிக்கும் பொறுப்புகள் உங்கள் திறமையை அடையாளம் காணத்தான் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பணிகள் எதையும் திட்டமிட்டும், நேரம் தவறாமலும் செய்து முடிப்பது அவசியம். எதிர்பாராத இடமாற்றம் வந்தால் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். தலைகணத்தை தவிர்த்து தன்னம்பிக்கையே வளர்த்துக் கொள்ளுங்கள்.
குடும்பம்
குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். அது நிலைக்க வார்த்தைகளில் நிதானம் முக்கியம். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் வேண்டாம். வரவுக்கு ஏற்ப செலவுகளும் சேர்ந்து வரும். திட்டமிட்டு செலவுகள் செய்தால் சேமிப்பு நிலைக்கும். வீடு, வாகனம் வாங்க ,புதுப்பிக்க யோகம் உண்டு. வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகளால் பெருமை சேரும்.
தொழில்
செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் வரத் தொடங்கும். பலகால முயற்சிகள் பலன் தர தொடங்கும். புதிய தொழிலமைப்பு எதிலும் இறங்கும் முன் அதில் சட்டப் புறம்பான விஷயங்கள் ஏதேனும் உள்ளதா என அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டு செயல்படுவது சிறப்பு. எதிர்பார்த்த வங்கி கடன், அரசு அனுமதி நிச்சயம் கிடைக்கும்.
அரசு, அரசியல் துறையினருக்கு சூழ்நிலை சாதகமாக இருக்கிறது. அதேசமயம் பொது இடங்களில் மேலிடத்தின் அனுமதியில்லாத எந்த விஷயத்தையும் பேசவோ, செய்யவோ வேண்டாம். துறை சார்ந்த கோப்புகளில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்கவும்.
உங்கள் பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில் பிரத்தியேக பலன்களைப் பெற இங்கே சொடுக்கவும்
கலை, படைப்பு துறையினருக்கு திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். பழைய அனுபவ பாடத்தை பாடமாக வைத்துக் கொண்டால் பொறுப்பு உணர்வுடன் செயல்பட்டால் பெருமையும் பாராட்டும் பெறலாம்.
மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்துவது அவசியம். எளிமையான பாடமாக இருந்தாலும் எல்லாம் தெரியும் என்கின்ற நினைப்பை தவிர்த்தாலே எல்லா விதத்திலும் வெற்றி பெறலாம்..
அறிவுரை
போதுமான ஓய்வு இல்லாமல் இரவு நேரத்தில் பயணிக்க வேண்டாம். விஷ ஜந்துக்கள், வளர்ப்பு பிராணிகளிடமிருந்து விலகியே இருங்க. உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். ரத்த நாள உபாதை, நரம்பு, கொழுப்பு அதிகரிப்பு, ரத்த அழுத்த மாறுபாடு, முதுகு தண்டுவடம், அடிவயிறு உபாதைகளில் அலட்சியம் காட்டுவது கூடாது.
ஆலய வழிபாடு
இந்த ஆண்டு ஒரு முறை திருவாலங்காடு திருத்தலம் சென்று சுவாமியையும், அம்பாளையும், ஆலங்காட்டு காளியையும் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். மாதம் ஒருமுறை அருகில் இருக்கும் துர்க்கை சன்னதியில் குங்கும அர்ச்சனை செய்து வழிபடுங்கள். உங்கள் வாழ்க்கை மேலும் செழிப்பாக இருக்கும்.
மொத்தத்தில் இந்த புத்தாண்டு உங்களுக்கு 60% நற்பலன்களை நல்கும் புத்தாண்டாக அமையும்..