பங்குனி மாத ராசி பலன்கள் -2024
மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
சுக்கிரன், சனிபகவான், செவ்வாய்,கேது ஆகிய நால்வரும் உங்களுக்கு மிகவும் அனுகூலமான நிலைகளில் சஞ்சரிக்கின்றனர்.பணத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்வார், சுக்கிரன். கேதுவின் நிலையினால், எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது.முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.ராசிக்கு விரய ஸ்தானத்தில் சூரியனும், ராகுவும் உள்ளதால், உடல் நலனில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம்.
ஜென்ம ராசியில் குரு அமர்ந்திருப்பதால், தேவையற்ற
அலைச்சல்களும், அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய
அவசியமும் ஏற்படும். மருத்துவச் செலவுகள் தவிர்க்க இயலாதவை.
திருமண முயற்சிகளில் வரன் அமைவது கடினமான முயற்சியாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள், சொத்து சம்பந்தமான பிரச்னைகள் நீடிக்கும். குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் பற்றிய கவலைகள் மனதை வருத்தும்.
பரிகாரம்:
சுந்தரகாண்டத்திற்கு “சர்வதோஷநிவாரணி” -என்ற பெருமையுண்டு. தினமும் காலையில் நீராடிய பின்பு, ஒரு சர்க்கமாவது
படித்து வந்தால் போதும்.
நன்மை தரும் தினங்கள்:
பங்குனி: 1, 2, 5 -7, 11 – 14, 19 – 21, 25 – 28.
சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 16 பிற்பகல் முதல், 18 இரவு வரை.
ரிஷபம்
(கிருத்திகை 2ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
பண வசதிதிருப்திகரமாக இருக்கும்.குரு பகவான், விரய ஸ்தானமாகிய மேஷத்தில் நிலை கொண்டிருப்பதால், குடும்பத்தில் சுபச்செலவுகளும், அநாவசியமான செலவினங்களும் சற்று அதிகமாகவே இருக்கும். ஆரோக்கியம் நல்லபடியே நீடிக்கிறது. திருமண முயற்சிகள் தாமதமாகும். அலுவலகப் பொறுப்புகள், குடும்பப் பிரச்னைகள் சம்பந்தமாக அலைச்சலும் பணவிரயமும் ஏற்படும்.
ராகு, லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், எதிர்பாராத பண வரவிற்கும்
சாத்தியக்கூறு உள்ளது. வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் பலருக்கு உருவாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், தீர்த்த -தலயாத்திரையும், துறவிகள், பெரியோர் தரிசனமும் ஆசிகளும் கிட்டும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், அனுகூலமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்:
ஆலங்குடி குரு பகவான், சக்திவாய்ந்த பரிகாரமாகும்.
வியாழக் கிழமைதோறும், பிரதோஷ காலமாகிய மாலை 5.30 முதல் 7.30
மணிக்குள்ளாக, ஆலயங்களிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ ஐந்து மண் அகல்களில் நெய் தீபங்கள் ஏற்றிவந்தால்
போதும். அற்புதப் பலன்கள் கிட்டும்.
நன்மை தரும் தினங்கள்:
பங்குனி: 3 – 7, 11 – 15, 21- 23, 28 – 30.
சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 18 இரவு முதல், 20 பின்னிரவு வரை
மிதுனம்
(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)
குரு, சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் மாதம் முழுவதும் உங்களுக்கு
அனுகூலமான நிலைகளில் சஞ்சரிக்கின்றனர். பங்குனி 18-ம் தேதி வரையில் சூரியன் உதவிகரமாக நிலைகொண்டுள்ளார். அதன் பிறகு, அவரால் அதிக நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. மாதம் முழுவதும் பண வசதி திருப்திகரமாகவே இருக்கும். கும்ப ராசியில் அமர்ந்துள்ள செவ்வாயினால், முயற்சிகளில் பின்னடைவு ஏற்படும். லாப ஸ்தானத்தில் குரு சிறந்த சுப பலம் பெற்றுத் திகழ்வதால், எதிர்பாராத
பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. குடும்பத்தில் ஏற்பட்டுவந்த வீண் செலவுகளும் குறையும்.
பங்குனி 19-ம் தேதி சுக்கிரனின் நிலை மாறுவதால், நெருங்கிய உறவினர்களுடன் கருத்து வேறுபாடும், பகையுணர்ச்சியும் மேலிடும். விவாக வயதிலுள்ள பெண் அல்லது பிள்ளை இருப்பின் நல்ல வரன் அமையும். மாதத்தின் மூன்றாம் வாரத்தில், உடல் நலனில் சிறிது பின்னடைவு ஏற்படக்கூடும். வெளிநாட்டில் வேலைபார்த்துவரும் பிள்ளை அல்லது பெண் சிறிய விடுப்பில் வர வாய்ப்புள்ளது. இந்த வரவு, குடும்பச் சூழ்நிலையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் மட்டும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மாலையில், நெய் தீபம் ஒன்று ஏற்றிவந்தால், ராகுவினால் ஏற்படும் தோஷம் அடியோடு விலகும். 12 கிழமைகள் ஏற்றினால் போதும். வியக்கத்தக்க பலன் கிட்டும்.
அனுகூல தினங்கள்:
பங்குனி: 1,4-8, 12 – 14, 18, 19, 23 – 25, 29, 30.
சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 20 பின்னிரவு முதல், 22 பின்னிரவு வரை.
கடகம்
(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
சுக்கிரன், கேது ஆகிய இரு கிரகங்கள் மட்டுமே உங்களுக்கு ஆதரவாக
நிலைகொண்டுள்ளனர், இம்மாதம் முழுவதும்! மற்ற கிரகங்களால் அதிக நன்மைகளை எதிர்பார்ப்பதில் பயனில்லை. குறிப்பாக, உங்கள் உடல் நலனில், இம்மாதத்தில் நீங்கள் அதிக கவனமாக இருத்தல் வேண்டும். சுக்கிரன், சனி பகவான், செவ்வாய் அஷ்டம ராசியில் ஒன்றிணைந்துள்ளனர். சிறு உடல் உபாதை, வலியானாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியம் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.
வாகனம் ஓட்டும்போது, நிதானமாகவும், அதிஜாக்கிரதையாகவும் இருத்தல் வேண்டும். மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க இயலாது. எதிரிகளின் தொல்லை அச்சத்தையும், ஏற்படுத்தும். நிரந்தர சிகிச்சை பெற்று வரும் வயோதிகர்கள், குளியல் அறையில் கால் பதிக்கும்போது நிதானமாகவும், கவனத்துடனும் அடிமேல் அடி வைத்து நடப்பதும் அவசியம். ஏனெனில், கிரக நிலைகளின்படி, கீழே விழுந்து அடிபடுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது.
“ஜோதிடம்” எனும் வானியல் வாழ்க்கைக் கலை எப்பொழுதெல்லாம், எந்தெந்த விஷயங்களில் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை
முன்கூட்டியே நமக்கு அறிவித்து, நம்மை விபத்துகளிலிருந்து காப்பாற்றுகிறது. திருமண முயற்சிகள் கைகூடுவது கடினம். வரவும், செலவும் சரிசமமாகவே இருக்கும்.
பரிகாரம்:
தினமும் ஒரு தசகம் “மந் நாராயணீயம்” படித்துவந்தால், போதும். குருவாயூரப்பன் துணையிருந்து, காத்தருள்வதை கண்கூடாக, அனுபவத்தில் காணலாம்.
அனுகூல தினங்கள்:
பங்குனி: 3 – 7, 11 – 14, 18 – 21, 25 – 27, 31.
சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 22 பின்னிரவு முதல், 24 வரை.
சிம்மம்
(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் வரை)
குரு பகவான், பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இம்மாதத்தில், அவரது சுபப் பார்வையும் உங்கள் ராசிக்குக் கிடைப்பது பல நன்மைகளை உங்களுக்கு அளிக்கவுள்ளது. பங்குனி 19-ம் தேதியிலிருந்து, சுக்கிரனும் அனுகூலமாக மாறுகிறார். வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால், பணப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். செலவுகள் அதிகமாக இருப்பினும், சமாளிப்பதில் எவ்விதப் பிரச்னையும் இராது. களத்திர ஸ்தானத்தில் சனி – செவ்வாய் சேர்க்கை உள்ளதால், மனைவியின் உடல் நலன் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது.
அஷ்டம (8-ம் இடம்) ஸ்தானத்தில் சூரியன்- ராகு சேர்ந்திருப்பதால்,
உஷ்ண சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். சரும உபாதைகளும் (skin afflictions) கவலையளிக்கும். வாக்கு ஸ்தானத்தில் கேது இருப்பதால், பேச்சில் நிதானம் அவசியம். குரு பகவான் சிறந்த சுப பலம் பெற்றுத் திகழ்வதால், திருமண முயற்சிகளுக்கு மிக, மிக அனுகூலமான மாதம் இந்தப் பங்குனி! விவாக வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், மிக நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலைப் பேறு கிட்டும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின் வெற்றி கிட்டும்.
பரிகாரம்:
பூவரசன்குப்பம், பரிக்கல், அபிஷேகபாக்கம் லட்சுமி நரசிம்மர் கோயில்கள் தரிசித்துவிட்டுவந்தால் போதும். தோஷங்கள் அறவே நீங்கும் அல்லது, தினமும் காலையிலும், மாலையிலும் 108 அல்லது 48 தடவைகள் “லக்ஷ்மி நரசிம்மன் சரணம் பிரபத்தயே” என்ற அதியற்புத மந்திரத்தைச் சொல்லி வந்தால், ஒரு தீங்கும் உங்களை அணுகாது.
அனுகூல தினங்கள்:
பங்குனி: 3 – 7, 11 – 14, 18 – 21, 25 – 27, 31.
சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 25 முதல், 27 காலை வரை.
கன்னி
(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)
சனி பகவான் மற்றும் செவ்வாய் ஆகிய இருவர் மட்டுமே உங்களுக்கு
ஆதரவாக உள்ளனர், இம்மாதம் முழுவதும்! மற்ற கிரகங்களினால் எவ்வித நன்மையையும் எதிர்பார்ப்பதில் பயனில்லை. வருமானமும், செலவும் சமமாகவே இருக்கும். நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர அன்பும், பாசமும் குறையும். மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, சிகிச்சையினால் குணமாகும். குடும்பப் பிரச்னைகள் மனத்தை அரிக்கும்.
திருமண முயற்சிகளில் பின்னடைவு ஏற்படும். வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் நெருங்கிய உறவினர் ஒருவர் பணியை இழக்க நேரிடும். வரவிற்கு மேல் செலவுகள் அதிகரிக்கும். குழந்தைகள் கல்வி முன்னேற்றம் தடைபடும். சிறு விஷயத்திற்கும் அதிக அலைச்சலும், உழைப்பும் தேவைப்படும். மாதத்தின் கடைசி வாரத்தில் உடல் ஆரோக்கியக் குறைவு ஏற்படும்.
பரிகாரம்:
காளஹஸ்தி, திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு திருத்தல தரிசனம்
சக்திவாய்ந்த பரிகாரத் திருத்தலங்களாகும். கோயிலுக்குச் செல்லும்போது, முடிந்தால், பசு நெய் அல்லது நல்லெண்ணெய் எடுத்துச் சென்று, கோயினுள் – கர்ப்பஸ்தானத்தில் எரியும் தூண்டா விளக்கில் சேர்க்கவும். அல்லது மண் அகல் விளக்கில் ஏற்றியும் வைக்கலாம்.
தினமும் காலையில் அபிராமி அந்தாதியும், மாலையில் கந்தர் சஷ்டியும் சொல்லி வந்தாலும் போதும்.
சனிக்கிழமைகளில் ஓர் ஏழைக்கு உணவளித்தால் மகத்தான பலன்களைப் பெறுவீர்கள்.
அனுகூல தினங்கள்:
பங்குனி: 2 – 4, 9 – 11, 15 – 18, 22 – 25, 30, 31.
சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 1. மீண்டும் 27 காலை முதல், 29 பிற்பகல் வரை.
துலாம்
சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)
உங்கள் ராசிக்கு, நாதனாகிய சுக்கிரன், பங்குனி 18-ம் தேதி வரை
உங்களுக்குச் சாதகமாக உள்ளார். சூரியன், ராகு ஆகிய இருவரும்கூட, மாதம் முடியும் வரை உங்களுக்கு மிகவும் ஆதரவாகவே சஞ்சரிக்கின்றனர். குருவினாலும், நன்மையே. சஞ்சார பலத்துடன் குருவின் பார்வை பலனும் உங்கள் பக்கம்தான்! அவரது 7-ம் சுபப் பார்வை உங்கள் ராசிக்குக் கிடைப்பது, மேலும் பல நன்மைகளை உங்களுக்கு சற்று தாராளமாகவே அளிக்கவுள்ளனர், பிரதான கிரகங்கள்
அனைத்தும் !! குடும்பத்தில் ஒற்றுமையும் பரஸ்பர பாசமும், அன்பும் நிலவும். போதிய அளவிற்கு வருமானம் கிட்டும். வீண் செலவுகள் குறையும். அனைத்தையும் விட, உங்கள் ஆரோக்கியம் மீண்டும் “normal” எனக் கூறும் அளவிற்கு, முன்னேற்றமடையும்.
உங்களின் ராசிக்கு களத்திர, காம, சயன ஸ்தானமாகிய
மேஷத்தில் குரு அமைர்ந்திருப்பது, கணவர் – மனைவியரிடையே பரஸ்பரம் அந்நியோன்யம் நிலவுவதை எடுத்துக்காட்டுகிறது. திருமணமான பெண்கள், கருத்தரித்த இம்மாத கிரகநிலைகள், சுப பலம் பெற்றுள்ளன. இம்மாதம் கருத்தரிக்கும் பெண்களுக்கு, பெரும்பாலும் இருக்கும் (ஆதாரம்: “ஸிம்மவலோக்கணம்” -எனும் மிகப் பழமையான மருத்துவ ஜோதிட நூல்.
அதாவது குரு பலமாக சஞ்சரிக்கும்போது, கருவில் உண்டாகும் குழந்தைகள் பெரும்பாலும் ஆண் குழந்தைகளாகவே இருப்பார்கள். சுக்கிரன் வலுப்பெற்றிருக்கும்போது, கருத்தரித்தால், பெண் குழந்தைகளாக இருக்கும் என்று அந்த நூல் தெரிவிக்கிறது.) இந்த அடிப்படையில்தான் வேத காலத்திலும் (Vedic age) கிருதயுகத்திலும், திரேதாயுகத்தின் முற்பகுதியிலும் நம் முன்னோர்கள் கணவர் – மனைவி உடல் சேர்க்கையின் நாளைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். அந்த அளவிற்கு ஜோதிடம் சென்ற காலங்களில்நம் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்துள்ளது.திருமணத்திற்கு ஏற்ற மாதம் பங்குனி !
பரிகாரம்:
சனிக்கிழமைகள் தோறும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று தீபத்தில் சிறிது எள் எண்ணெய் செலுத்திவிட்டு, தரிசனம் செய்துவிட்டு வரவும்.
அனுகூல தினங்கள்:
பங்குனி: 1, 5 – 8, 12 – 14, 18 – 21, 25 – 28.
சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 2 முதல், 4 காலை வரை. மீண்டும் 29 பிற்பகல் முதல், 31 மாலை வரை.
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம்,கேட்டை வரை)
எப்போதுமே சுறு, சுறுப்பாகவே இருந்து பழக்கப்பட்ட விருச்சிக ராசியினருக்கு, இந்தப் பங்குனிமாதத்தில் சுக்கிரன், ஓரளவே அனுகூலமாக சஞ்சரிக்கின்றார். மற்ற கிரகங்களினால், நன்மை ஏதும் கிடைக்காது. போதிய அளவிற்கு வருமானம் இல்லாததால், குடும்ப நிர்வாகம் சற்று கஷ்டமாகவே இருக்கும். அர்த்தாஷ்டக ராசியில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருப்பதால், ஆரோக்கியத்தில் கவனமாக
இருப்பது அவசியம்.
திட்டமிட்டு செலவு செய்தால், பணப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கை, கால்களில் குடைச்சல், மூட்டுகளில் வலி, கர்ப்பப்பை சம்பந்தமான கோளாறுகள் ஏற்பட சத்தியக்கூறு உள்ளது. சிறு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்பத்தில் பரஸ்பர ஒற்றுமையும், அந்நியோன்யமும் நிலவும். திருமண சம்பந்தமான முயற்சிகளில், வரனை நிச்சயிப்பதில், குழப்பங்கள் உருவாகும். குடும்பத்தில் நெருங்கிய உறவினர், உத்தியோக சம்பந்தமாக வெளி மாநிலம் அல்லது வெளியூர் செல்ல நேரிடும்.
பரிகாரம்:
இத்தகைய கிரக நிலைகளுக்கு, திருப்பதி அல்லது குருவாயூர் திருத்தலங்கள் மிகச் சிறந்த பரிகாரங்களாகும். வாஞ்சியம் திருத்தல தரிசனமும் சக்திவாய்ந்த பரிகாரமாகும்.
அனுகூல தினங்கள்:
பங்குனி: 1-3,7-10,15-17,22-24,29-31.
சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 4 காலை முதல் 6 மாலை வரை.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)
குரு, சுக்கிரன், சனி மற்றும் புதன் ஆகியோரும் உங்களுக்கு ஆதரவாக
சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும் ! மற்ற கிரகங்களால் நன்மை ஏதும் இல்லை. பண வசதி போதிய அளவிற்கு உள்ளது, இம்மாதம்
முழுவதும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், மன நிறைவும் நிறைந்திருக்கும். சுப நிகழ்ச்சிகளுக்குக் குறைவிராது. கருத்தரித்துள்ள பெண்மணிகளுக்கு
சுகப் பிரசவம் உண்டாகும். ஒரு சிலருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் இருப்பதையும் செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியவற்றின் சஞ்சார நிலைகள்
குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
திருமணமான பெண்கள், கருத்தரிப்பதற்கு கிரகநிலைகள் சிறந்த சுப பலம் பெற்றுவிளங்குகின்றன. சுபச் செலவுகள் அதிகளவில் ஏற்பட்டாலும்,
அவற்றைச் சமாளிப்பதில் சிரமம் ஏதுமிராது. நீதிமன்ற வழக்குகள் இருப்பின், சாதகமான போக்கு தென்படும். ஆரோக்கியம் திருப்திகரமாக
இருக்கும். விவாகத்திற்குக் காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். ஆரோக்கியம் திருப்திகரமாகவே உள்ளது. வெளிநாட்டில் வேலை பார்க்கும், பெண் அல்லது பிள்ளைகளின் வருகை மகிழ்ச்சியை
அளிக்கும்.
பரிகாரம்:
சுந்தரகாண்டத்திற்கு, “சர்வதோஷ நிவாரணி” -என்ற பெருமை உண்டு. அதாவது சகல கிரக தோஷத்தையும் போக்குவது என்பதே அதன் பொருள். தினமும் ஒரு சர்க்கம் படித்து வரவும். எவ்வித கிரக தோஷமானாலும் பறந்தோடிவிடும். படிக்க முடியாதவர்கள், சுந்தகாண்டத்தைக் கேளுங்கள். சுந்தரகாண்டத்தை நினைத்தாலே புண்ணிய பலன் உங்களை வந்தடையும்.
லிகித ஜெபமாகப் போற்றிப் புகழப்படும், ராமஜெயம் எனும் திவ்ய நாமத்தை தினமும் புத்தகத்தில் 1008 முறைகள் எழுதி வந்தாலே போதும்.
அனுகூல தினங்கள்:
பங்குனி: 3-5, 9- 11, 15 – 18, 22 – 24, 29 – 31.
சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 6 மாலை முதல், 7, 8 வரை.
மகரம்
(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)
சுக்கிரன், சூரியன், ராகு ஆகியவீரியம் நிறைந்த மூன்று கிரகங்களும், அனுகூலமாக உள்ளனர். மற்ற கிரகங்களினால் நன்மை ஏதும் ஏற்படாது. வருமானம் நல்லபடி இருக்க சூரியன், சுக்கிரன், ராகுவின் நிலைகள் உதவிகரமாக உள்ளன. இருப்பினும், வருமானத்திற்குச் சமமான செலவினங்களும் இருக்கும். தந்தையின் உடல் நலனில் அபிவிருத்தியைக் காணலாம்.
பித்ரு காரரான சூரியன் ஆதரவாக சஞ்சரித்தாலும், சனி மற்றும் செவ்வாயின் நிலையினால், உடல்நிலை பாதிக்கப்படும். மருத்துவ செலவுகளைத் தவிர்க்க இயலாது. குருவின் நிலையினால், குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களும், ஒற்றுமைக் குறைவும் உண்டாகி, கவலையை உண்டாக்கும். விவாக முயற்சிகளில் ஏமாற்றமே மேலிடும். பாக்கிய ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ள கேதுவினால், பணம் விரயமாகும். முயற்சிகள் அனைத்திலும் தோல்வியையே சந்திக்க நேரிடும்.
பரிகாரம்:
தினமும் அபிராமி அந்தாதி, மீனாட்சி பஞ்ச ரத்தினம், மகாலட்சுமி
அஷடோத்திரம் சொல்லி வந்தால், மிக நல்ல பலன் கிடைக்கும்.
காலையில் நீராடிய பிறகு, தன்வந்திரி மற்றும் ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம் சொல்லி வரவும்.
மாலையில் சனீஸ்வர பகவானின் ரக்ஷோபவன ஸ்தோத்திரம் முடிந்தால் படித்தும் அல்லது காதால் கேட்டு வரவும்.
மேல்வெண்பாக்கம் லட்சுமி நாராயணர் தரி சனம் சக்திவாய்ந்த பரிகாரமாகும்.
தினமும் சுந்தரகாண்டம் பாராயணம் செய்து வரவும்.
அனுகூல தினங்கள்
பங்குனி: 1, 2, 5 – 8, 12 – 15, 22 – 24, 29 – 31.
சந்திராஷ்டம தினங்கள்
பங்குனி: 9 முதல் 11 பிற்பகல் வரை.
கும்பம்
(அவிட்டம் 3ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)
சுக்கிரன், புதன் ஆகிய இருவராலும் நன்மைகள் ஏற்படும். ஜென்ம
ராசியில் சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் வேண்டும். ராகுவும், அனுகூலமாக இல்லை. ராகுவிற்கு இரவில்பலம் அதிகம் எனக் கூறுகின்றன, மிகப் புராதனமான ஜோதிடக் கிரந்தங்கள். ஆதலால்தான், இரவு நேரங்களில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன!
வாக்கு, தனம் ஆகிய ஸ்தானங்களில் ராகு வீற்றிருக்கின்றார். நண்பர்கள், உறவினர்கள் எவருக்கும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். உங்கள் சக்திக்கு மீறிய வாக்குறுதிகளை அளிப்பது, பிறர் வாங்கும் கடனுக்குப் பொறுப்பேற்றுக் கையெழுத்திடுவது ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். இல்லாவிடில், எதிர்காலத்தில் வருந்த நேரிடும். திரிதீய ராசியான மேஷத்தில், தனாதிபதியான குரு அமர்ந்திருப்பதும், பண விஷயங்களில் சற்று முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. இம்மாதத்தில் திருமண முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பணம் மற்றும் ஆபரணங்களை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்.
பரிகாரம்:
பழனி முருகன் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.
கும்பகோணத்தையடுத்த உப்பிலியப்பன் தரிசனமும் நல்ல பலனையளிக்கும்.
அனுகூல தினங்கள்:
பங்குனி: 3 – 8, 14 – 16, 19 – 21, 25 – 28.
சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 11 பிற்பகல் முதல் 12, 13 பின்னிரவு வரை.
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)
குரு, சுக்கிரன் ஆகிய இருவரும் உங்களுக்கு ஆதரவாக உள்ளனர், இம்மாதம் முழுவதும். ஏழரைச் சனியின் முதல் பகுதியும் நடைபெறுகிறது, உங்களுக்கு! வருமானத்திற்குக் குறைவிராது. அலைச்சல் அதிகரிக்கும். களத்திர ஸ்தானமாகிய கன்னிராசியில் கேது இருப்பதால், மனைவிக்கு சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்படும். எளிய சிகிச்சையினால் குணம் கிடைக்கும்.
ராசி நாதனாகிய குரு பகவானின் சுபப் பார்வை – ருண, ரோக, சத்ரு, ஆயுள்
ஜீவன ஸதானங்களுக்குக் கிடைப்பதால், பிரச்னைகள் அனைத்தும் அளவோடு நிற்கும். திருமண முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
பரிகாரம்:
ஒன்பது சனிக்கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், மாலையில் ஐந்து எள் எண்ணெய் தீபம் ஏற்றிவந்தால் போதும்.
அனுகூல தினங்கள்
பங்குனி: 1, 2, 5-7, 11-12, 17-21, 25-27, 31.
சந்திராஷ்டம தினங்கள்:
பங்குனி: 13 பின்னிரவு முதல், 14, 15, 16 பிற்பகல் வரை.