ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : கும்பம்
ராகு கேது பெயர்ச்சி நாள் -2025
வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
சுறுசுறுப்பும், கெட்டிக்காரத்தனமுடைய கும்ப ராசி அன்பர்களே! நீங்கள் கரிய தேகமும், சிறிய குட்டையான உருவமும் உடையவர்கள், காம இச்சை அதிகமுண்டு, தகாத உறவுகளும் உண்டு. மலர்கள் ஆடம்பரமான வாசனைத் திரவியங்கள் உங்களுக்குப் பிடிக்கும். பிரயாணங்களில் விருப்பமுண்டு. நண்பர்கள் அதிகமுண்டு. ஆனால் பணமில்லாவிட்டால் எத்தனை நட்பாக இருந்தாலும் உதறிவிடுவீர்கள். பிறரை ஏமாற்றும் குணம் ஒரு சிலருக்கு உண்டு. ஜோதிடம், மாந்தீரிகம் இவற்றை நம்புவீர்கள். அடிக்கடி சர்க்கரை வியாதியிலும் மர்ம உறுப்புகளில் ஏதாவது நோயாலும் அவதிப்படுவீர்கள்.
கடந்த ஒன்றரை வருட காலமாக இராகுபகவான் உங்கள் இராசிக்கு இரண்டாமிடத்திலும் கேது பகவான் எட்டாமிடத்திலும் அமர்ந்து உங்களுக்கு மோசமான பலன்களைக் கொடுத்தார்கள். தொழில் முடக்கம் பொருளாதாரத்தில் பற்றாக்குறை, வாக்கு, நாணயம் தவறுதல், கணவன், மனைவி உறவில் பகை, கடன் தொல்லைகள், பிணி, பீடை, வேலை இழப்பு, விபத்துகள், ஆஸ்பத்திரி விலாசம், ஆபரேசன் போன்றவையும் அடிக்கடி வைத்தியச் செலவு, சிலருக்கு கோர்ட், கேஸ், பிரச்சனைகள் அவமானம் போன்றவற்றை அளித்து உங்களை மிகவும் நோகடித்து, விட்டார்கள். தாய், தகப்பனார் வழியில் கருமஞ் செய்தல் போன்றவை ஏற்பட்டது. மேலும் சனியாலும், குருவாலும் பாதிப்பு ஏற்பட்டது. தற்சமயம் ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் பெயர்ச்சியாகின்றார்கள்.
இனிமேல் உங்களுக்கு ஓரளவுக்கு அசுப பலன்கள் குறைய ஆரம்பிக்கும், இதுவரை தொழிலில் இருந்த மந்தநிலை நீங்கி, வியாபாரம் புதிய பொலிவுடன் நடக்க ஆரம்பிக்கும், இலாபம் தடையில்லாமல் கிடைக்கும் போட்டி, எதிர்ப்புகள் கட்டுக்கடங்கி நிற்கும். உத்தியோகமில்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் அமையும். உத்தியோகத்தில் பிடித்தமில்லாமல் இருந்தவர்களுக்கு, வேலையில் ஒரு திருப்புமுனை ஏற்படும். சகலரும் உங்களை மதித்து நடப்பார்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும், கணவன் மனைவி பிரிந்தவர்கள் சேர்ந்து வாழவாய்ப்பு உண்டாகும். கோர்ட், கேஸ் பிரச்சனைகள் ஏதாவது ஒரு வகையில் சமாதானமாகி விடும். பிற மதத்தினர் அல்லது பிற இனத்தினரால் இலாபம் உண்டாகும். வெளிவட்டாரப் பழக்கம் நன்மை தரும். ஒரு சிலருக்கு உடல்நிலை சிறிது பாதிப்பு ஏற்படலாம். ஜாதகத்தில் நல்ல திசாபுத்திகள் சரியாக அமைந்திராவிட்டால் விவாகரத்து போன்றவையும் ஏற்பட்டு மறுதாரம் அமைய வாய்ப்புகள் ஏற்படலாம்.
கூட்டுத் தொழில் பிரச்சனைகள் இருந்து கொண்டேதான் இருக்கும். நண்பர்கள் உள்ளொன்றும், புறமொன்றும் பேசுவதாகவே இருப்பார்கள். யாருக்கும் ஜாமீன் போடாமல் ஒதுங்கியிருப்பது உத்தமம். மொத்தத்தில் இந்த இராகு, கேது பெயர்ச்சியானது அதிக நன்மைகளும் ஒரு சில கெடுதியும் தரக்கூடியதாக அமையும். ஜாதகத்தில் நல்ல திசாபுத்திகள் நடைபெற்றால் கேதுவின் பாதிப்புகள் குறையும். குருப்பெயர்ச்சியும் சேர்ந்து மிகுந்த நன்மைகள் ஏற்படும்.
வியாபாரிகள்:
தொழில் செய்வோர், மிகுந்த கவனத்துடன் அடியெடுத்து வைப்பீர்கள். கடந்த காலத்தில் பட்ட துயரங்களை நினைத்து நிதானமாகத் தொழில் செய்யுங்கள். கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். மற்றபடி தொழில் முன்னேற்றமடையவும். வியாபாரத்தில் உள்ள தடங்கல் நீங்க, முன்பை விட நல்ல முறையில் தொழில் நடைபெறும். இலாபத்துக்கு குறை வராது. புதிய லோன் முயற்சிகள் வெற்றி பெறும். கடன்கள் கட்டுக்கடங்கி இருக்கும். தொழிலாளி – முதலாளி உறவு சரியிராது. செலவுகள் அதிகம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள்:
வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வேலையில் இருந்த சிக்கல்கள், போட்டி, பொறாமை நீங்கி உங்களை ஆபிஸில் மரியாதையுடன் நடத்துவார்கள். நீங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சிலர் மட்டும் உத்தியோக நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று வாழ நேரிடலாம். அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். அதனால் நன்மையே விளையும். ஆபீஸில் லோன் போட்டு குடும்பத் தேவைகளை நல்ல முறையில் நிறைவேற்றுவீர்கள்.
பெண்கள்:
உங்களது நீண்டநாள் ஆசைகள் நிறைவேறப் போகிறது. கணவன் உங்கள் மீது அன்பைப் பொழிவார். வீட்டிற்க்குத் தேவையான ஆடை, ஆபரணம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அக்கம், பக்கத்திலுள்ளவர்கள் உங்களைப் பற்றிப் புறம் பேசுவார்கள். உடல் உபாதைகள் நீங்கினாலும், சிறு சிறு நோய்கள் தோல் வியாதிகள் ஏற்பட்ட வண்ணமாகவே இருக்கும். ஆனால் பெரிதும் பாதிக்காது. கணவர் உடல்நிலையிலும் அடிக்கடி கவனம் தேவைப்படும்.
மாணவர்கள்:
கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். உயர்கல்வி யோகம் உண்டாகும். பெற்றோருக்கும். ஆசிரியர்களுக்கும் நல்ல பெயர் வாங்கிக் கொடுப்பீர்கள். ஒரு சிலர் மட்டும் கெட்ட நண்பர்களின் சகவாசத்தால், படிப்பிழந்து கெட நேரிடலாம். எனவே, அதிகமான நண்பர்களை நாடாமல் ஒதுங்கியிருப்பது நல்லது.
கலைஞர்கள் :
அதிகமான வாய்ப்புகள் ஏற்படப் போகின்றன. நல்ல முறையில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வீர்கள். பணமும், புகழும் உங்கள் கண்ணை மறைக்கும். அதனால்தவறான உறவுகள் லாகிரி வாஸ்துக்களை உபயோகித்தல் போன்றவற்றை உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
அரசியல்வாதிகள்:
உங்கள் காட்டில் இனி மழை தான். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கப் போகின்றது. பேரும், புகழும், செல்வாக்கும் ஏற்படப் போகின்றது. உங்களுக்குப் பெரிய பதவி கிடைக்கப் பெறுவீர்கள். அடிக்கடி பிரயாணங்களும், வெளியூரில் தங்கவும் நேரிடும். அதனால் உங்களுக்கு நன்மையே தவிர தீமை ஏற்படாது. முக்கியமான ஓரிருவரைத் தவிர அதி நண்பர்களை வைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய சம்பாதிப்பீர்கள். நிறைய செலவும் செய்வீர்கள்.
விவசாயிகள்:
விவசாயம் நன்மை தரும். வருமானம் பெருகும். புதிய நிலபுலன் வாங்க முடியும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும்.
பரிகாரம்:
ஒருமுறை திருப்பதி அருகேயுள்ள காளஹஸ்தி என்னும் ஊருக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. தினசரி விநாயகரை வழிபடுங்கள்.
கும்பகோணம் அருகிலுள்ள கீழப்பெரும்பள்ளம் சென்று கேதுவை வழிபடவும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று இராகு காலத்தில் துர்க்கைக்கு தீபமேற்றி வழிபட சிறந்தது.
காஞ்சிபுரத்தில், சித்ரகுப்தர் கோயிலில், சித்ரகுப்தரை வழிபட்டால் நல்லது. ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகரை வழிபட உத்தமம். குரு ஸ்தலமாகிய திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டால் மிகவும் நல்லது