ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 :கடகம்
ராகு கேது பெயர்ச்சி நாள் -2025
வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
ஊருக்கு உழைக்கப் பிறந்த கடகராசி அன்பர்களே! நீங்கள் நல்ல தோற்றமும், வலுவான உடலும், பற்களும் உடையவர். அதிகாரப் பதவியை அடைந்தே தீருவீர்கள். பிறர் பாராட்டுக்கும், புகழுக்கும் மயங்கி விடுவீர்கள். பெண்கள் விஷயத்தில் நீங்கள் வீக். நல்ல மனைவி, பிள்ளைகள் இருந்தும், அவர்களைப் பகைப்பீர்கள். என்றைக்குமே சுயமுயற்சியிலேயே முன்னுக்கு வருவீர்கள். விரைவாக நடக்கும் பழக்கம் உண்டு. தெய்வ பக்தி அதிகமுண்டு, ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.
கடந்த ஒன்றரை வருட காலமாக உங்களது இராசிக்கு ஒன்பதாமிடத்தில் இராகுவும். மூன்றாமிடத்தில் கேதுவும் அமர்ந்து ஓரளவுக்கு நல்ல பலன்களையே செய்தார்கள். தொழில் அபிவிருத்தி உத்தியோக உயர்வு, புதிய ஆடை, ஆபரண யோகம் குடும்பத்தில் சுபகாரியம் போன்ற நன்மைகளை அடைந்தீர்கள். இருப்பினும் கடன்படவே நேர்ந்தது. சனியும் கெடுதல்களையே செய்தார். குருபகவான் ஓரளவு உங்களைக் காப்பாற்றி வந்தார்.
தற்சமயம் 18.05.2025 அன்று இராகு பகவான், உங்கள் இராசிக்கு எட்டாமிடமாகிய கும்ப ராசிக்கும், கேது பகவான் உங்கள் இராசிக்கு இரண்டாமிடாகிய சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார்கள்.
இக்கால கட்டத்தில் இராகு கேதுவால் ஏற்படக்கூடிய நன்மைகள் அதிகமிராது. இராகுவினால் பணவிரயம், வீட்டிற்குள் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அல்லது விஷக்கடி, நண்பர்களே எதிரியாகுதல், எதிரிகள் சூழ்ச்சிகளும், தொழில் போட்டி, பொறாமை, வீண் அலைச்சல், கெட்ட சகவாசம், பெண்களால் அவச்சொல் போன்ற கெட்ட பலன்கள் ஏற்படலாம். தொழில் முடக்கம் உடல் உபாதை விபத்து வைத்தியச்செலவு, இரணசிகிச்சை, உத்தியோகத்தில் பிரச்சனைகள் போன்றவை ஏற்படும்.
கேதுவினால் பணத்தட்டுப்பாடும், குடும்பத்துக்குள் குழப்பமும் ஏற்படும். வாக்கு, நாணயம்தவறும் நீங்கள் நல்லதுக்காக சொன்னது கூட கெடுதியாக மாறி உங்களைப் பாதிக்கும். புதிய நண்பர்கள் உங்களுக்குத் துரோகம் செய்வார்கள். உறவினர் அனைவருமே பகையாவர்.ஒரு சிலருக்கு இடமாற்றம், தொழில் மாற்றம் ஏற்டும். மாணவர்கள் கல்வியில் தடங்கல் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் தள்ளிப்போகும்.
தோல்வியாதிகள், கண்வலி, பல் உபாதைகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவி உறவு நல்ல முறையில் அமையாது. தெய்வ வழிபாடு ஒன்றே அதிகம் கஷ்டம் இல்லாமல் பாதுகாக்கும். உங்கள் ஜாதகத்தில் நல்ல திசாபுத்திகள் நடைபெற்றால் மட்டும் கெடுபலன்கள் அதிகமிருக்காது. குருப்பெயர்ச்சியும், சனிப்பெயர்ச்சியும் கூட சுமாராகவே இருக்கும்.
வியாபாரிகள்:
திடீரென்று தொழிலில் தேக்கநிலை ஏற்படும். சரக்குகள் தேங்கும். பழைய சரக்குகளை குறைந்த லாபத்துக்கு அல்லது அசலுக்கோ விற்பனை செய்ய வேண்டி வரும். கூட்டுத் தொழில் புரிபவராயிருந்தால், தொழிலில் பிரச்சனைகள் ஏற்படும். கடன்பட வேண்டி வரும். தொழிலில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல் போகும். எல்லோரையும் அனுசரித்தே போக வேண்டும்.
உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகத்தில் திருப்தியிராது. ஆபீஸிற்குப் போகவே பிடிக்காது. யாருமே உங்களை மதிக்காதது போல உணருவீர்கள். உங்களை விட ஜீனியர்களெல்லாம் உங்களை ஓரங்கப்பட்டப்பார்ப்பார்கள். அடிக்கடி லீவு போடுவீர்கள். தேவையில்லாத இடமாற்றம் மற்றும் பிரயாணங்களால் உடல்நிலை பாதிப்பு ஏற்படக்கூடும்.
பெண்கள் :
கணவர் உங்கள் மீது பாசமாக இருந்தாலும் மாமியார், நாத்தனார் உறவு நல்லவிதமாக அமையாது. எந்நேரமும் வீட்டுக்குள் குழப்பம் நீடிக்கும். மனதில் நிம்மதியென்பது துளியுமிராது. அக்கம், பக்கமெல்லாம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்த வேண்டி வரும். கணவர் கொண்டு வரும் சம்பளம் 15 நாட்களுக்குக் கடந்த தாங்காது. போதாக் குறைக்குக் கண்வலி, வயிற்றுவலி, அபார்சன் போன்றவற்றாலும் உடல்நிலையிலும் கவனம் தேவைப்படும்.
மாணவர்கள்:
கல்வியில் ஊக்கம் அதிகம் தேவைப்படும் தேவையில்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து படிப்பைக் கெடுத்துக் கொள்ளாமல் தானுண்டு, கல்வியுண்டு என்றிருக்க வேண்டும். குடும்ப பிரச்சனைகளால் படிப்பைத் தொட முடியாமல் ஒரு சிலருக்கு நேரிடலாம். கெட்ட நண்பர்கள், போதை வஸ்துக்கள் பழக்கம் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும்.
கலைஞர்கள்:
வாய்ப்பே கிடைக்கவில்லை என்று வருந்துவீர்கள். பின்பு ஒன்றிரண்டு வாய்ப்பு கிடைக்கும் போது முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் போகும். கடன் வாங்கித் தொழில் நடத்த வேண்டி வரும். உடல்நலத்தில் கவனம் தேவை.
அரசியல்வாதிகள்:
உங்களுக்கு நியாயமாக வர வேண்டிய பதவி அடுத்தவருக்குச் சென்று விடும். வீண் அவச்சொல், பழிவாங்குவீர்கள். யாரை நம்புவது என்று தெரியாத அளவுக்கு எல்லோருமே உங்களுக்கு துரோகியாக மாறுவார்கள். உள்ளதை வெளியில் சொல்லாமல் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
விவசாயிகள்:
பூச்சிகளால் தொல்லை ஏற்படும். அதிக சேதம் உண்டாகும். விவசாயிகளுக்கு முன்னேற்றம் இருக்காது. கால்நடை வாகனம் அதிக விருத்தியிராது.
பரிகாரம்:
கண்டிப்பாக காளஹஸ்தி சென்று வர வேண்டும். அது போல செவ்வாய்க் கிழமை இராகு காலத்தில், துர்க்கையை வழிபட வேண்டும்.
மாதந்தோறும் பௌர்ணமி கழித்து 4வது நாளில் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து, மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோவிலில் தீபமேற்றி விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட உத்தமம்.
காஞ்சிபுரத்திலுள்ள சித்ரகுப்தர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் கேதுவின் பாதிப்புகள் குறையும். அல்லது சீர்காழி அருகிலுள்ள கேதுவின் ஸ்தலமாகிய கீழப்பெரும்பள்ளம் என்ற ஊருக்கும், கும்பகோணம் அருகிலுள்ள இராகு ஸ்தலமாகிய திருநாகேஸ்வரம் என்ற ஊருக்கும் சென்று இராகு கேதுவை வழிபட்டால் நல்லது.
குருப்பெயர்ச்சியன்று, குருபகவானுக்கு, சனிப்பெயர்ச்சியன்று சனிபகவானுக்கும் அர்ச்சனை செய்யுங்கள்.
சங்கரன்கோவில் சென்று கோமதி அம்மனை வழிபட்டால் மிகவும் நல்லது.