தனுசு -வெற்றி
(மூலம் ,பூராடம் ,உத்திராடம் -1 )
குரு பகவானின் அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே!!! ஏறக்குறைய எட்டரை ஆண்டுகளாக உங்களை ஆட்டிப்படைத்த சனி பகவான் இப்போது உங்களை விட்டு விலகி உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமர்வதால் தொட்டது துலங்கும். மனதளவில் விலகி இருந்த கணவன் மனைவி கூட இனி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வீர்கள். சிலர் குடும்பத்துடன் வடமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். நடிப்பு, நாடகம் ,கலை, நாட்டியம், ஜோதிடம்,புரோகிதம், ஆன்மீகத்தில் இருப்பவர்கள் மற்றும் மீடியாவில் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கும் இது அற்புதமான சனிப்பெயர்ச்சி ஆகும்.
பணம், பேர், புகழ் அனைத்தும் உங்கள் சுய முயற்சியால் அடைவீர்கள். தாழ்வு மனப்பான்மை நீங்க தன்னம்பிக்கை பிறக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். யோகம், தியானம், பக்தி, ஞானம் என்று மனதை இறை சக்தியால் பக்குவப்படுத்திக் கொள்வீர்கள்.
இதுவரை தடைப்பட்ட சுப காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். அடமானம் வைத்த தங்க நகைகளை மீட்பீர்கள். சமுதாயத்தில் மேலான நிலையை அடைவீர்கள். பழைய வீட்டை அகற்றிவிட்டு புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். எல்லோரும் ஆச்சரியப்படும்படி வாழ்வீர்கள்.
தொழிலில் நல்ல லாபம் வரும். சிலருக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படும். புது செல்போன் மற்றும் வீட்டுக்கு தேவையானவற்றையெல்லாம் வாங்குவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இது உங்களுக்கு அற்புதமான காலகட்டம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். புது தொழில் தொடங்குவீர்கள். நல்ல லாபம் வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
உங்களை எதிரிகளாக நினைத்த பலரும் இனி நட்பு பாராட்டுவார்கள். ஷேர் மூலம் லாபம் வரும். பெரிய பதவிகள் தேடி வரும். இல்லத்தரசிகளுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவரின் வியாபாரத்தை முன்னின்று நடத்துவீர்கள். தங்க நகைகள், வெள்ளி ஆகியவை வாங்குவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களைப் பொறுத்தவரை உங்களின் திறமையை குறைவாக எடை போட்டவர்கள் வியக்கும் படி கடினமான பணிகளை செய்து முடிப்பீர்கள். கன்னிப் பெண்களை பொறுத்தவரை தடைபட்ட கல்வியை தொடர்வீர்கள். பெற்றோருடன் இருந்த மன கசப்பு நீங்கும். வெளிநாட்டில் வேலை உயர் கல்வி அமையும்.
தொழில் செய்பவர்கள் கடையை நவீனமயம் ஆக்குவீர்கள். பொறுப்பில்லாத வேலை ஆட்களை மாற்றி அனுபவம் மிகுந்த புது வேலையாட்களை சேர்ப்பீர்கள். சினிமா, பதிப்பு துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மரத் தொழில், விவசாயம், ஆசாரி, ஆசிரியர், மருந்து விற்பனையாளர்கள் மற்றும் எழுத்துப் பணி ,வாயால் பேசி தொழில் செய்வோர் அதாவது பட்டிமன்ற பேச்சாளர்கள், வக்கீல், ஜோதிடர், ஆன்மீக குருமார்கள், சேல்ஸ்மேன், அர்ச்சகர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் அனைவருக்கும் நல்ல லாபமான சனி பெயர்ச்சி இது.
இதையும் கொஞ்சம் படிங்க : ஏழரைச் சனி என்றால் என்ன? அதில் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக் கூடாது?
அலுவலகத்தில் பணி செய்வோரை பொறுத்தவரை பிரச்சினை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். தடைபட்ட பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உறுதியாகும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். எதிர்ப்புகள் நீங்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கணினி துறையில் இருப்பவருக்கு வேலைபளு அதிகமானாலும் அதற்கு தகுந்த சம்பள உயர்வு கிடைக்கும்.
சனி பகவான் பார்வை பலன்கள்
சனிபகவான் உங்கள் ராசிக்கு 5, 9, 12-ம் இடங்களை பார்வை செய்வதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சனிபகவான் ராசிக்கு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பூர்வீக சொத்தை மாற்றி அமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர் படிப்பு மற்றும் பிள்ளைகளின் திருமணத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தை பார்ப்பதால் தந்தை உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டை பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கமில்லாது தூங்கி தூங்காது போல இருக்கும். ஆன்மீக முன்னேற்றம் உண்டாகும்.
பலன் தரும் பரிகாரம்
குரு அருளால் திருவருள் சித்தியாகும். தெய்வம் பொருந்தியவராக மகான்கள் சித்தர்களின் தொடர்பு கிடைக்கும். பௌர்ணமி முழு நிலவு நாளில் மலை அருகே இருக்கும் சிவஸ்தலங்களுக்கு சென்று சித்தர்கள் ஜீவசமாதியில் விளக்கேற்றி வழிபடவும் உங்கள் வாழ்வில் அனைத்தும் நன்மையாக அமையும்.