ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : கன்னி
ராகு கேது பெயர்ச்சி நாள் -2025
வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
அழகும், நளினமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! உங்களது கழுத்து, கை பின்புறத்தில் மச்சம் அல்லது மரு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். தெய்வபக்தி, அறிவு, தியானம் போன்றவை உங்களது நல்ல குணங்களாகும். வெடுக்கென்று பேசும் சுபாவமுண்டு, நல்ல சுகாதாரமான உணவை விரும்புவீர்கள். அதுபோல நாகரிகமான ஆடை, ஆபரணங்களை அணிய பிரியப்படுவீர்கள். இளவயதில் பிரைமரி காம்ப்ளக்ஸ் போன்ற சளித் தொந்தரவினால் கஷ்டப்படுவீர்கள். பிறருக்கு அறிவுரை சொல்வதாய் இருந்தாலும் தான் அதன்படி நடந்தால் தான் அறிவுரை சொல்வீர்கள். உங்களிடமுள்ள கெட்ட குணமென்னவென்றால் எல்லோரும் நீங்கள் விரும்புவது போல் நடக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். மற்றபடி நீங்கள் மிகவும் நல்லவராக இருப்பீர்கள்.
உங்களுக்குக் கடந்த ஒன்றரை வருட காலமாக இராகுபகவான் உங்கள் இராசிக்கு ஏழாமிடத்திலும் கேதுபகவான் உங்கள் ஜென்மராசியிலும் இருந்து உங்களைக் கஷ்டப்படுத்தினார்கள். நோய், நொடி ஏற்பட்டது. மனைவிக்கு அறுவை சிகிச்சை போன்ற மருத்துவச்செலவு ஏற்பட்டது.
குடும்பத்தில் பகை, வம்பு, வழக்கு, தொழில் நஷ்டம், பிரிவினை, மன அமைதி இல்லாமை, மூலம், உடல் அரிப்பு, வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள் ஏற்பட்டது. உங்களுக்குமே ஒரு சிலருக்கு விபத்து அல்லது ஆபரேசன் நடந்தது. பெற்றோர் உடல்நிலை பாதித்தது, பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
தற்சமயம்18.05.2025 அன்று இராகுபகவான் உங்கள் இராசிக்கு ஆறாமிடமாகிய கும்ப ராசிக்கும் கேது பகவான் உங்கள் இராசிக்குப் பன்னிரண்டாமிடமாகிய சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார்கள். பன்னிரண்டாமிடத்துக் கேது என்பது கெடுதி தான். வீண் அலைச்சல் நேரத்துக்குச் சாப்பாடு, தூக்கமில்லாமை, கெட்ட பெயர், பணப் பற்றாக்குறை போன்றவை ஏற்படும். உறவினரால் தொல்லைகளும் அவர்கள் வழியில் பண விரயமும் ஏற்படும்.
ஆனால் இராகு ஆறாமிடத்துக்கு வருவதென்பது இராஜயோகமாகும். தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும். தொட்ட காரியங்கள் துலங்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். மகிழ்ச்சியும் குதூகலமும் உண்டாகும். வெளியூர் பிரயாணங்கள் நன்மை தரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். பன்னிரண்டாமிடமாகிய கேதுவும், புண்ணிய ஸ்தலங்களுக்கு அனுப்பி வைப்பார். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும் எதிரிகள் ஓடி விடுவார்கள்.
மிக நல்ல காலமாக உங்களுக்கு இராகு பகவான் பலன் செய்வார். நீண்ட நாள் நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். கடன்கள் தீரும் வருமானம் அதிகரிக்கும். அடுத்து வரும் குருவும். சனியும் பெயர்ச்சிக்கு பிறகு கெடுபலன்களையே செய்வார்கள். கவனம் தேவை.
வியாபாரிகள்:
வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் கிடைக்கும். இதுநாள் வரை பட்டகஷ்டங்களை ஆறாமிடத்து இராகு ஓரளவு தணிப்பார். புதிய தொழில் முயற்சிகள் சிறிது தடங்கலுக்குப் பின்பு கூடி வரும். இலாபம் நிறைய கிடைக்கும். திடீர் செலவுகள், திடீர் பிரயாணங்கள் உங்களை அலைக்கழிக்கும். இருந்தாலும் அதனால் நன்மைகள் விளையும். வருமானம் பெருகும். செல்வச் செழிப்பு ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள்:
திடீரென்று இடமாற்றம் உத்தரவு வரலாம். அது உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் கூட நீங்கள் ஏற்றுத் தான் தீர வேண்டியிருக்கும். மேலதிகாரிகள் நல்ல முறையில் மதித்தாலும் ஏதோ ஒரு குறை இருப்பது போலவே உணர்வு ஏற்படும். உங்கள் யோசனைகளைப் பிறரிடம் சொன்னால், அவர்கள் அந்த யோசனைகளைத் தமது யோசனைகள் போலச் சொல்லிப் பேர் வாங்கிக் கொள்வார்கள். எதிர்பாராத பதவி உயர்வு, சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்கள் :
கணவன், மனைவி உறவு நல்ல விதமாக இருக்கும். சகோதரர்கள் வகையில் பகையிருந்தாலும் பட்டும் படாத உறவு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். கண் வலி, தலைவலி, தொந்தரவு தரும், மற்றப்படி ஓரளவுக்குக் குடும்பத்தில் பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
மாணவர்கள்
மிக உயர்ந்த கல்வி அமையும். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலருக்கு வேலை கிடைக்கும்.
கலைஞர்கள்:
வெளியூர் வாய்ப்புகள் நிறைய வரும். அலைச்சல் அதிகமிருக்கும். வரவுக்குத் தகுந்தபடி செலவுமிருக்கும். பேரும். புகழும், வருமானமும் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் :
அடிக்கடி கோர்ட், கேஸ் என அலைய வேண்டி வரும். ஆனால் வெற்றி உங்களுக்கே! கட்சிப் போராட்டங்களில் கலந்து கொள்வீர்கள். மிக நல்ல காலமாகும். எதிரிகள் பணிந்து போவார்கள். புதிய பதவிகள் தேடி வரும். அனைவராலும் மதிக்கப் படுவீர்கள். வருமானமும், புகழும் பெருகும்.
விவசாயிகள்:
நிறைய நன்மைகள் விளையும். ஒரு சில விரயங்களும் இருக்கலாம். இருந்தாலும் சுப விரயங்களே அதிகமிருக்கும். கால்நடை, வாகனம் செழிக்கும்.
பரிகாரம் :
திங்கட்கிழமை தோறும் சண்டிகேஸ்வரரை வழிபட்டால் நல்லது.
தினசரி விநாயகரை வணங்கிவிட்டுக் காரியமாற்ற வேண்டும்.
சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாதந்தோறும் அனுசரிக்க வேண்டும்.
ஒருமுறை கீழப்பெரும்பள்ளம் என்ற ஊருக்குச் சென்று கேதுபகவானை வழிபட்டு வந்தால் உத்தமம்.