சுயம்வர பார்வதி ஹோமம்
கல்யாண தோஷங்களை நீக்கி விரைவில் திருமண பாக்கியம் கைகூட அருளும் வழிபாடுதான் சுயம்வர பார்வதி ஹோமம். திருமணத்தடை நீங்கவும், எவ்வித சிரமமும் இல்லாமல் நல்லபடியாக தகுதியான துணை கிடைக்கவும், சரியான வயதில்-பொருத்தமான முறையில் திருமணம் நடக்கவும் சுயம்வர பார்வதி ஹோமம் செய்வது உகந்தது.
தச்சனின் மகனாக பிறந்த பார்வதி தேவி சிரத்தையோடு தவம் செய்து பரமேஸ்வரனை அடைந்தார். அவரது தவத்தை குலைக்க எத்தனையோ முயற்சிகள் நடந்தன கடைசியில் பரமேஸ்வரன் மாறுவேடத்தில் வந்து தேவியின் மன உறுதியைச் சோதித்து பிறகு அவரை மணந்தார். பார்வதிதேவிக்கு கிடைத்ததை போன்ற இனிய துணையை கிடைக்கச் செய்வதுதான் சுயம்வர பார்வதி ஹோமத்தின் நோக்கம்.
இந்த ஹோமத்துக்கு அரச சமித்து, சர்க்கரை பொங்கல், நெய், குங்குமம் ஆகியவற்றை திரவியங்கள் பயன்படுத்துவார்கள். தாமரை பூவையும் சேர்த்து கொண்டு ஹோமம் செய்தால் மனதுக்கு இனிய வாழ்க்கை துணை அமையும் என்கின்றன சாஸ்திரங்கள்.
சுயம்வர பார்வதி ஹோமம் செய்வதற்கான தியான மந்திரங்களின் ஒன்றின் அர்த்தத்தை சொல்கிறேன்.
பார்வதிதேவி உதயகால சூரியனைப் போல் பிரகாசமாக இருக்கிறாள். அவள் கழுத்தில் இருக்கும் மாலையில் வாசமுள்ள மலர்கள் இருப்பதால்,வண்டுகள் வட்டமிடுகின்றன. எல்லோரும் பிரமிக்கும் அளவுக்கு அவளது தோற்றம் அழகாக இருக்கிறது. பரமேஸ்வரனை மெதுவாக நெருங்கி அவள் மாலையிடுகிறாள் அந்தப் பார்வதி தேவி, எந்த விதமான வேண்டுதலையும் சகித்துக் கொள்ளக் கூடியவள். எனது ஆசைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டு அவளை நமஸ்கரிக்கிறேன்.
இதையே தினமும் மனதில் தியானித்து வீட்டில் திருவிளக்கையே பார்வதியாக பாவித்து வழிபட்டு வந்தால் பெண்களுக்கு விரைவில் மணப்பேறு வாய்க்கும்.