செவ்வாய் தசா பலன்கள்
நவகிரகங்களில் சிறப்பு வாய்ந்த கிரகம் செவ்வாய். செவ்வாய் தசாவானது சுமார் 7 வருடங்கள் நடைபெறும். செவ்வாய் இருவீட்டு ஆதிபத்தியம் கொண்டது. செவ்வாயின் ஆட்சி வீடுகள் மேஷம், விருச்சிகம். உச்ச வீடு-மகரம், நீச வீடு-கடகம். செவ்வாய் ஒரு பாவ கிரகம் என்பதால் 3,6,10,11 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் ஏற்றமிகு பலன்கள் ஏற்படும். உடல் வலிமை, ரத்த ஓட்டம், நிர்வாகத்திறன், அதிகாரப் பதவி, உடன்பிறப்பு போன்றவற்றிற்கு காரகன் செவ்வாய்.
செவ்வாய் பலமாக இருந்து தசா நடைபெற்றால் மிக உயர்ந்த பதவிகளை அடையும் வாய்ப்பினை கொடுக்கும். போலீஸ், ராணுவம் போன்றவற்றில் உயர்பதவி, இல்வாழ்வில் இனிமை, அழகான புத்திர பாக்கியம், பூமி, மனை சேர்க்கை போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
செவ்வாய் பகை ,நீசம், வக்ரம் மற்றும் பாவிகளின் சேர்க்கை பெற்று காணப்பட்டாலும், பாதக ஸ்தானத்திலோ 8,12-ல் அமைந்திருந்தாலும் அதன் தசா காலங்களில் ரத்த சம்பந்தமான பாதிப்புகள், மனக்கவலைகள், குடும்பத்தில் பிரச்சனை, எதிர்பாராத விபத்துகளால் உடல் உறுப்புகளை இழக்க கூடிய நிலை, ரத்த காயம், வெட்டுக்காயம்படுதல், நெருப்பினால் கண்டம், சகோதரர்களிடையே பகைமை, கோபத்தினால் புத்தி தடுமாற்றம், கை கால் வலிப்பு நோய், மூளை மற்றும் இருதய சம்பந்தப் பட்ட நோய்கள், வீடு மனை, வண்டி வாகனங்கள் இழக்கக்கூடிய நிலை, அரசு வழியில் பிரச்சனை, உத்தியோகத்தில் வீண் பழிச்சொற்கள் போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.
செவ்வாய்-ராகு சனி சேர்க்கை பெற்று லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ 8-ல் அமைந்திருந்தாலும், காலபுருஷபடி 8-ம் வீடான விருச்சிகத்தில் அமர்ந்து தசா நடைபெற்றால் எதிர்பாராத விபத்துக்களை சந்திக்க நேரிடும்.
செவ்வாய் பெண்களுக்கு களத்திரகாரகன் மற்றும் ரத்தகாரகன் என்பதால் செவ்வாய் பலமிழந்திருந்தால் இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாத நிலை, மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குழந்தை பாக்கியம் உண்டாக தடை ஏற்படும்.
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் செவ்வாய்க்குரியதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தசா முதல் தசாவாக வரும்.
செவ்வாய் பலம் பெற்று குழந்தை பருவத்தில் தசா நடைபெற்றால் நல்ல உடலமைப்பு, சிறப்பான ஆரோக்கியம், எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும்.
இளமை பருவத்தில் தசா பெற்றால் கல்வியில் மேன்மை, விளையாட்டுத்துறையில் சாதனை செய்யும் அமைப்பு, எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும்.
மத்திம வயதில் நடைபெற்றால் உயர் பதவிகளை வகிக்கும் யோகம், நல்ல நிர்வாகத் திறன் ஏற்படும்.
முதுமையில் நடைபெற்றால் பயமற்ற நிலை, பூமி மனையால் அனுகூலம், நல்ல உடலமைப்பு, சமுதாயத்தில் கௌரவமான பதவிகள் கிட்டும் யோகம் உண்டாகும்.
செவ்வாய் பலவீனமாக இருந்து குழந்தை பருவத்தில் தசா நடைபெற்றால் உடல் பாதிப்பு ,வெட்டு காயங்கள், நெருப்பால் கண்டம் உண்டாகும்.
இளம் வயதில் நடைபெற்றால் விபத்துக்களை எதிர்கொள்ளும் நிலை, வீண் வம்பு பிரச்சனைகள் ஏற்படக் கூடிய நிலை உண்டாகும்.
மத்திம வயதில் நடைபெற்றால் நெருங்கிய நண்பர்களை இழக்கும் நிலை, உடல் நிலை பாதிப்பு, எதிலும் வீண் வாக்குவாதம், முன் கோபம், சண்டை சச்சரவு உண்டாகும்.
முதுமையில் ஏற்பட்டால் ரத்த அழுத்தம், ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்பு, உடல் பாதிப்பு, பிரச்சனை ஏற்படும். இருதய கோளாறு உண்டாகும்.
செவ்வாய் 12 பாவங்களில் அமைந்து தசா நடைபெற்றால் கிடைக்கும் பலன்கள்
- செவ்வாய் லக்னத்தில் இருந்து தசா நடைபெற்றால் உடல் நலத்தில் அடிக்கடி பாதிப்பு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகமாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். உடன்பிறப்புகளுக்கு பாதிப்பு, உடன்பிறப்புகளால் மனக்கவலை, பூமி வீடு, வண்டி வாகனங்களால் தேவையற்ற செலவுகள் உண்டாகும்.
- செவ்வாய் 2-ல் இருந்து தசா நடைபெற்றால் உடல்நலம் சிறப்பாக அமையும். நல்ல பண வரவுகள், பூமி ,வீடு, வண்டி வாகனங்களால் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும்.
- செவ்வாய் 3-ல் இருந்து தசா நடைபெற்றால் துணிவு, மனதைரியம், எதிரிகளை வெல்லும் திறமை உண்டாகும். பூமி வீடு சேர்க்கை, நல்ல தன லாபம் கூடும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
- செவ்வாய் 4-ல் இருந்து தசா நடைபெற்றால் உற்றார் உறவினர்கள், நண்பர்களுடன் நல்ல ஒற்றுமை, மகிழ்ச்சி உண்டாகும். அதிகாரமிக்க பதவிகளை வகிக்கும் யோகம் ஏற்படும். புகழ் பெருமை கூடும்.
- செவ்வாய் 5-ல் இருந்து தசா நடைபெற்றால் புத்திர தோஷம், புத்திர வகையில் பிரச்சனை, பூமி வீடு, வண்டி வாகனத்தில் பிரச்சனை, வீண் செலவுகள், அரசாங்க தண்டனை பெறும் சூழ்நிலை இருக்கும். இடத்தை விட்டு மாறும் நிலை, வெளியூர் வெளிநாடு சென்று பிழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
- செவ்வாய் 6-ல் இருந்து தசா நடைபெற்றால் கொடுத்த வாக்கினை காப்பாற்றும் ஆற்றல், எதிரிகளை வெல்லும் அமைப்பு, உடல்நலத்தில் சிறப்பு உண்டாகும். மனைவி புத்திரர் மற்றும் சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். பூமி மனை, வண்டி வாகன சேர்க்கைகள், தாராள தன சேர்க்கைகள் சிறப்புடன் அமையும். வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும்.
- செவ்வாய் 7-ல் இருந்து தசா நடைபெற்றால் மனைவிக்கு நோய், கருச்சிதைவு உண்டாகும். பூமி மனை, வண்டி வாகனங்களால் வீண் செலவுகள், கடன்கள் ஏற்படும். ரத்தம் சம்மந்தப் பாதிப்பு, காய்ச்சல் இவற்றால் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும். கூட்டாளிகளுடன் வீண் பிரச்சனைகள், எதிரிகளால் தொல்லை ஏற்படும்.
- செவ்வாய் 8-ல் இருந்து தசா நடைபெற்றால் எதிர்பாராத கண்டங்கள் ஏற்படும். செவ்வாய்-சனி ராகு சேர்க்கையோ பார்வையோ பெற்றிருந்தால் விபத்துக்களை சந்திக்கும் நிலை, உடல் உறுப்புகளை இழக்கும் நிலை, தீயால் கண்டம், பகைவர்களால் பாதிப்புகள், ரத்தக்காயம், ரண காயம், வயிற்றுவலி, வயிற்றில் புண், காய்ச்சல், உஷ்ணம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். காசநோய், அவப்பெயர் ஏற்படும் சூழ்நிலை உண்டாகும்.
- செவ்வாய் 9-ல் இருந்து தசா நடைபெற்றால் தருமங்களையும் புண்ணிய காரியங்களையும் அதிகம் செய்யும் வாய்ப்பு, அதன் மூலம் சம்பாதிக்கும் யோகம், பணவரவில் முன்னேற்றம், உற்றார் உறவினர்களுடன் நல்ல ஒற்றுமை, உதவிகளைப் பெறும் வாய்ப்பு, சகோதரருக்கு திருமணம் செய்வது, தந்தைக்கு உதவிகள் செய்வது போன்ற நற்பலன்கள் உண்டாகும். சிலருக்கு தந்தைக்கு கருமம் செய்யும் நிலையும் ஏற்படும்.
- செவ்வாய் 10-ல் இருந்து தசா நடைபெற்றால் நினைத்த காரியம் வெற்றி பெறும், அரசாங்கத்தில் அதிகாரமிக்க பதவிகளை அடையும் யோகம், கல்வியால் மேன்மை, மக்கள் விரும்பும் தலைவராக கூடிய வாய்ப்பு, ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு, மனைவி புத்திரர்களுடன் சுகமான வாழ்வு போன்றவற்றை பெற முடியும்.
- செவ்வாய் 11-ல் இருந்து தசா நடைபெற்றால் அரசாங்க வழியில் அனுகூலம், சிறப்பான ஆடை ஆபரண சேர்க்கை, தாராள தன வரவுவினால் மென்மை, பூமி வீடு, வண்டி வாகன யோகம், உடன்பிறந்தவர்களால் பெருமை, புகழ் யாவும் அமையும். தொழில் வியாபாரத்தில் அற்புதமான லாபம் கிடைக்கும். வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும்.
- செவ்வாய் 12-ல் இருந்து தசா நடைபெற்றால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத கண்டம், உறவினர்களுடன் விரோதம், சகோதரருக்கு தோஷம். குடியிருக்கும் வீட்டை மாற்றும் நிலை, மனைவி பிள்ளைகளிடம் விரோதம், மனதிற்கு நிம்மதியற்ற நிலை உண்டாகும். தூக்கமின்மை, கட்டில் சுக வாழ்வில் பாதிப்பு போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …