ராகு தசா பலன்கள்
ராகு தசா மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். ராகுவிற்கு சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் ராகு நின்ற வீட்டதிபதி நிலையைக் கொண்டே ராகு அதன் பலனை தரும். 3,6 ,10 ,11 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்று, சுப கிரகங்களின் சேர்க்கையுடன் இருந்தால் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றல், நல்ல மன தைரியம் உண்டாகும்.
ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று அமைந்து விட்டால் அதிகம் சம்பாதிக்கும் யோகம், வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் ஒரு உயர்ந்த நிலைக்கு செல்ல கூடிய அமைப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவு, ஆடை ஆபரண சேர்க்கைகள் யாவும் சிறப்பாக அமையும். புதுமையான கட்டடங்கள் கட்டுவது, புதுமையான விஷயங்களில் ஆர்வம் காட்டுவது போன்றவற்றில் ஈடுபாடு கொடுக்கும்.
ராகு அசுப பலம் பெற்று, ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்து ராகு தசா நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, அஜீரணக்கோளாறு, எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் சூழ்நிலை, உடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை, மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள கூடிய அமைப்பு கொடுக்கும். அதிக முன்கோபம், தன்னிலை மறந்து செயல்படும் நிலை, கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், ரகசிய உறவுகள், பிள்ளைகளுக்கு தோஷம், அரசு வழியில் தண்டனை பெறக்கூடிய நிலை, அபராதம் கட்ட வேண்டிய நிலை போன்ற பலவிதமான துக்க பலன்கள் உண்டாகும்.
உடல் நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், உண்ணும் உணவே விஷமாக மாறக்கூடிய நிலை ஏற்படும்.
திருவாதிரை, சதயம், சுவாதி போன்ற நட்சத்திரங்கள் ராகுவுக்குரியதாகும். ராகு தசா ஒருவருக்கு 3-வது திசையாக வந்தால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும்.
ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3-வது தசாவாக ராகு தசை வரும். இக்காலங்களில் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு ராகு 2,7-லிருந்து திருமணத்திற்கு பிறகு ராகு தசை, ராகு புக்தி நடைபெற்றால், திருமண வாழ்வில் பிரச்சனை, கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படுகிறது.
திருமண வயது காலத்தில் ராகு தசா அல்லது ராகு புத்தி நடைபெற்றால் திருமணம் கைகூட இடையூறுகள் உண்டாகிறது.
ராகு பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் தசா நடைபெற்றால் நல்ல உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும்.
இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை, நல்ல அறிவாற்றல், புத்தி கூர்மை உண்டாகும்.
மத்திம பருவத்தில் நடைபெற்றால் ஸ்பெகுலேஷன் மூலம் எதிர்பாராத தன சேர்க்கை, புதிய வாய்ப்புகள் தேடிவரும் அமைப்பு, எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும்.
முதுமை பருவத்தில் நடைபெற்றால் நல்ல வசதி வாய்ப்புகள், எதிர்பாராத தன சேர்க்கை, செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
ராகு பலவீனமாக இருந்து குழந்தை பருவத்தில் தசா நடைபெற்றால் ஆரோக்கிய பாதிப்பும், பெற்றோருக்கு பிரச்சனைகளும் ஏற்படும்.
இளமை பருவத்தில் தசா நடைபெற்றால் கல்வியில் தடை, தேவையற்ற நட்புகள், தீய பழக்கவழக்கங்கள், பெற்றோர்களிடம் அவப்பெயர் உண்டாகும்.
மத்திம வயதில் தசா நடைபெற்றால் மணவாழ்வில் பிரச்சனை கொடுக்கும். முயற்சிகளில் தடை, முரட்டுத்தனமான செயல்பாடுகளால் அவப்பெயர் ஏற்படும்.
முதுமை பருவத்தில் நடைபெற்றால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், உண்ணும் உணவே விஷமாகக் கூடிய நிலை உண்டாகும்.
ராகு 12 வீடுகளில் அமர்ந்து தசா நடைபெற்றால் ஏற்படக்கூடிய பலன்கள்:
- ராகு லக்னத்தில் இருந்து தசா நடைபெற்றால் உஷ்ணம் சம்பந்தமான பாதிப்புகள், கணவன்-மனைவி உறவில் பிரச்சினை, இடம் விட்டு இடம் மாற வேண்டிய சூழ்நிலை, உறவினர்களிடையே பகை, விரோதம் உண்டாகும்.
- ராகு 2-ல் இருந்து தசா நடைபெற்றால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, பிரிந்து வாழும் நிலை, வீண்விரயம், பணவரவில் தடை, தானியங்கள் மூலம் நஷ்டம், மனதில் தேவையற்ற பயம், மனைவி மற்றும் புத்திரர்களால் கஷ்டம், பேச்சில் தடுமாற்றம், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலை, அரசாங்க வழியில் பிரச்சனை, மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடும் நிலை உண்டாகும்.
- ராகு 3-ல் இருந்து தசா நடைபெற்றால் ஆடை ஆபரண சேர்க்கை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, உறவினர்களால் அனுகூலம், அரசாங்கம் மூலம் ஆதாயம், உயர்வுகள் உண்டாகும்.
- ராகு 4-ல் இருந்து தசா நடைபெற்றால் உறவினர்களால் தொல்லை, பிரச்சனைகள், தாய்க்கு கண்டத்திற்கு ஒப்பான பாதிப்புகள், பூமி, வீடு, வண்டி வாகனம் மூலம் வீண் விரயங்கள், அரசாங்க வழியில் வீண் பிரச்சனைகள் போன்ற சாதகமற்ற பலன்கள் உண்டாகும்.
- ராகு 5-ல் இருந்து தசா நடைபெற்றால் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு பாதிப்பு, கருச்சிதைவு, வீண் பிரச்சனைகள் உண்டாகும் நிலை, நினைத்த காரியத்தை செயல்படுத்துவதில் தடை, பூர்வீக சொத்து ரீதியான பிரச்சனை, பங்காளிகளுடன் கருத்து வேறுபாடு, உயர் கல்வி பயில்வதில் இடையூறுகள் போன்ற பலன்கள் உண்டாகும்.
- ராகு 6-ல் இருந்து தசா நடைபெற்றால் எதிரிகளை வென்றிடும் ஆற்றல், இடமாற்றம், நல்ல உடல் வலிமை, அரசாங்கத்தில் உயர் பதவிகளை பெறும் வாய்ப்பு, ஆடை ஆபரணம் சேரும் யோகம் போன்றவை உண்டாகும்.
- ராகு 7-ல் இருந்து தசா நடைபெற்றால் அரசாங்கத்தின் மூலம் சோதனைகள், தேவையற்ற மனக் கஷ்டங்கள், திருமணம் தடைபடும் அமைப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு, பிரிவு, மனதில் பயம், இடம் விட்டு இடம் போக வேண்டிய சூழ்நிலை, மனைவிக்கு தோஷம், கெடுதி, கீழ் ஜாதியினரால் அவமானம், நெருக்கமானவர்களே பகையாளியாக மாறும் பாதகமான பலன்கள் உண்டாகும்.
- ராகு 8-ல் இருந்து தசா நடைபெற்றால் உடல் நிலை பாதிப்படையும், வயிறு கோளாறு, தலைவலி, எதிர்பாராத விபத்துக்களில் சிக்கும் நிலை, தீயால் பாதிப்பு போன்றவற்றால் மருத்துவ செலவுகள் ஏற்படும். பகைவர்களால் தொல்லை, உற்றார் உறவினர்களிடையே பகை, கடன் தொல்லை, விஷத்தால் பயம், அச்ச உணர்வு ஏற்படும்.
- ராகு 9-ல் இருந்து தசா நடைபெற்றால் தன தானிய அபிவிருத்தி, நல்ல தனலாபம் கிட்டும். தானதர்மம் அதிகம் செய்யும் வாய்ப்பு ,உற்றார் உறவினர்களுக்கு உதவி செய்யும் மனம், வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். அரசு சார்ந்த துறைகளில் பதவி, உயர்வு ஊதிய உயர்வு கிட்டும். பல தலங்களுக்கு யாத்திரை செல்லும் வாய்ப்பு அமையும். தந்தையிடம் கருத்து வேறுபாடு, தந்தைக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
- ராகு 10-ல் இருந்து தசா நடைபெற்றால் நல்ல சுகமான நிலைகளும், பாக்கியங்களும் உண்டாகும். தெய்வபக்தி அதிகமாகும். யாகங்களை செய்ய நேரிடும் .தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். ஆடை ஆபரணங்கள் சேரும்.
- ராகு 11-ல் இருந்து தசா நடைபெற்றால் நினைத்தது நினைத்தபடியே நடைபெறும், அரசு அரசாங்க வழியில் அனுகூலமான வாய்ப்புகள் கிட்டும். ஆடை ஆபரணங்கள் சேரும். செய்கின்ற தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடியும்.
- ராகு 12-ல் இருந்து தசா நடைபெற்றால் பூமி வீடு வண்டி வாகனம் போன்றவற்றால் வீண் செலவு, பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும், வெளியூர் அல்லது கடல் கடந்து அயல் நாடுகளுக்கு சென்றால் வாழ வாழ்வில் வளமான நிலை எதிர்பாராத முன்னேற்றங்களை சந்திக்கும் யோகம் உண்டாகும்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …