அதிகை வீரட்டேஸ்வரர் கோவில் திருவதிகை
நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் வரிசையில் 7-வது தலமாக விளங்குவது திருவதிகை. கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு திருவதிகை இறைவனை மனமுருகிப் பாடி திருநாவுக்கரசர் தனது வயிற்றுவலி நீங்கி அருள் பெற்ற தலம்.
இறைவன் பெயர்: அதிகை வீரட்டேஸ்வரர்
இறைவி பெயர்: திரிபுரசுந்தரி
தல வரலாறு :
சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டுத் தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகை தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார்.
வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளை கட்டி வாழ்ந்து வந்தனர்.இந்த கோட்டைகளுக்கு, நினைத்த இடங்களுக்கு செல்ல வசதியாக விமானம் போல் சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு, தேவர்களை அசுரர்கள் மிகவும் துன்புறுத்தி வந்தனர். அசுரர்கள் தொல்லை பொருக்க முடியாமல் சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.
மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியை தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி,மற்ற எல்லா உலக படைப்புகளையும், போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாக்கி புறப்பட்டார்.
இச்சமயம், ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின. இறைவன் இவ்வாறு ஒவ்வொருவரும் கொண்டிருப்பதை கண்டார். தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்து தேவர்களின் செருக்கு அடங்க புன்னகையும்,சிவபூஜை தவறாத திரிபுர அசுரர்கள் உய்யுமாறு தண்ணகையும், சிவபூஜையை தவறிய முப்புர வாசிகள் மடியுமாறு வெந்நகையும் ஆகிய இம்மூன்றையும் இத்தல சிவபெருமான் செய்தார்.
அவர் சிரித்த உடனேயே கோட்டைகள் மூன்றும் படிப்படியாய் பொசுங்கிபோயின இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை.

திருநாவுக்கரசர் வயிற்று வலி நீங்கிய வரலாறு:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள திருவாதவூர் என்ற ஊரில் ஒரு சைவக் குடும்பத்தில் புகழனார்-மாதினியார் தம்பதிகளுக்கு மகளாகத் திலகவதியும், மகனாக மருள்நீக்கியரும் பிறந்தனர். மருள்நீக்கியார் வளர்ந்து தனது இளமைப் பருவத்தில் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்ற பெயரோடு வாழ்ந்து வந்தார்.
தமக்கை திலகவதியார் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார் போரில் இறந்து போக, இனி தனக்கு திருமணம் வேண்டாம் என வெறுத்து சைவ சமயம் சார்ந்து திருவதிகை சிவஸ்தலத்தில் இறை பணி செய்து வாழ்ந்து வந்தார்.
தம்பி சமண மதத்திலிருந்து விலகி சைவசமயம் சார அருள்புரிய வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய வயிற்று வலி தாக்குகிறது. அவர் தங்கியிருந்த சமண மண்டபத்தில் செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் யாவும் பலனளிக்கவில்லை. சூலை நோயின் கொடுமை தாங்க முடியாமல் தன்னுடைய தமக்கை இருக்கும் திருவதிகை சென்று முறையிடுகிறார்.
தம்பி துன்பப்படுவதை கண்ட திலகவதி திருவதிகை இறைவனிடம் அழைத்துச் சென்று அத்தல திருநீரை அவருக்கு பூசி இறைவன்மேல் மனமுருகி பாடச் சொல்கிறார். அவரும்
கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன் நான் அறியேன்
ஏற்றாய அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம் படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதி கைக்கெடில
வீரட்டானத் துறை அம்மானே
என்ற பாடலுடன் தொடங்கும் பதிகத்தைப் பாடி சூலை நோய் நீங்கப் பெற்றார்.
மேலும் நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு தருமசேனர் ஆக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் சைவ சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார். தனது சூலை நோயை நீக்க பாடிய பதிகமே இவர் பாடிய முதல் பதிகமாகும்.
திருவதிகை இறைவனை வணங்கித் தொழுது அன்பர்கள் நாள்தோறும் பக்தி சிரத்தையுடன் திருநாவுக்கரசர் பாடிய இப்பதிகத்தை பாடினால் வயிற்றுவலி நீங்குவது அனுபவ பூர்வமான உண்மையாகும்.
வழித்தடம்:
கடலூரில் இருந்து திருவந்திபுரம் பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்று திருவதிகை கோவில் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்கு செல்லும் சாலையில் சுமார் 1 கிலோமீட்டர் சென்றால் அதிகை வீரட்டேஸ்வரர் கோவிலை அடையலாம். பண்ருட்டி அருகில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர் ,விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் போன்ற ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.