சிவபெருமான் திருமணத்தின்போது அனைத்து தேவர்களும் முனிவர்களும், புண்ணியஸ்தர்களும்,கயிலையில் கூடியதால், வடதிசை மற்றும் தென்திசையில் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதை சமன் செய்யும் பொருட்டு, சிவபெருமானின் கட்டளைப்படி தென் திசை நோக்கி ‘அகத்தியர்’ பயணம் மேற்கொண்டார், இவ்வாறு இவர் தென்திசை நோக்கி வரும்போது, நித்திய பூஜைகளுக்காக நிறைய சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
இவ்வாறு அகத்தியர் தங்கி வழிபட்டு, பிரதிஷ்டை செய்த சிவ ஸ்தலங்கள் எல்லாம் ‘அகத்தீஸ்வரம்’ என சிறப்பிக்கப்படுகின்றன.
அந்த வகையில் மதுராந்தகத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் ஊர் ‘புத்திரன் கோட்டை’. இவ்வூரில் வீற்றிருக்கும் அருள்மிகு “அகத்தீஸ்வரர்” ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக கருதப்படுகிறது.
அகத்தியர் இத்தல சிவனாரை வழிபட்டதற்கு சாட்சியாக, கருவறை வாயிலின் மேல் அகத்தியர் சிவபெருமானை பூஜிப்பது போன்ற புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.
அகத்தியரின் பெயரைத் தம்முடன் சேர்த்துக் கொண்டிருக்கும் அகத்தீஸ்வர பெருமான்,அகத்தீயினை, அதாவது நம் மனம் எனும் அகத்தைத் தீயெனச் சுட்டெரிக்கும் பேராசை, பொறாமை போன்ற அனைத்தையும் அணைக்கும் அருள் திறம் கொண்டவராகத் திகழ்கிறார்.
அம்பாளின் திருநாமம் ‘முத்தாரம்பிகை’, கல்வெட்டுகள், ‘மரகத வடிவுடை நாச்சியார்’ என்று குறிப்பிடுகின்றன.பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப் பட்ட கோயில் என்பதையும் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன.
இங்கு வந்து, சிவனாரை வழிபட்டுச் சென்றால் வயிறு தொடர்பான பிணிகள் நீங்கும் என்பது பக்தர்களது நம்பிக்கை. புத்திர தோஷத்தால் வருந்திய சோழ மன்னன் ஒருவன், இங்கு வந்து வழிபட்டுக் குழந்தை பாக்கியம் பெற்றதாக கூறப்படுகிறது.
எனவே இத்தலம், “புத்திர தோஷம் நீக்கும்” தலமாகத் திகழ்கிறது, மேலும் இத்தலத்தில் தொடர்ந்து ஆறு பிரதோஷ தினங்களில் இங்கு வந்து சிவபெருமானையும் அம்பிகையையும் தரிசித்து வழிபட்டால் புத்திரதோஷம் நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும், பிள்ளைகள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வர் என்பது நம்பிக்கை.
கோவில் இருப்பிடம் :