தொல்லைகள் தீர்க்கும் எல்லையம்மன்
‘எல்லையம்மன் கோயிலுக்குப் போங்கள்; உங்கள் தொல்லைகள் எல்லாம் தீரும்’ என்று கூறுகிறார்கள்.
இக்கோயில் ‘வெட்டுவானம்’ என்ற ஊரில் அமைந்துள்ளது. இது சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் வேலூரிலிருந்து 23 கி.மீ.தொலைவில் இருக்கிறது. அம்பாளின் பெயர் ‘எல்லையம்மன்’. வரலாற்றுப் பெயர் ரேணுகாதேவி.
தொல்லை நீங்கும்
வெட்டுவானம் என்னும் இவ்வூருக்கு ‘மேலை வித்தூர், ‘வித்தகாபுரி’ என்னும் பெயர்களும் உண்டு. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள். அவர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். இங்கு வந்து வழிபட்டால் மணமாகாத பெண்களுக்கும் திருமணம் நடக்கும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மகப்பேறு கிட்டும் என்கிறார்கள். நோய் நொடி, துயரங்கள். தொல்லைகள் துடைக்கும் சந்நிதி இது என்றும் கூறுகிறார்கள்.
வரலாறு
ஈசன், ஜமதக்னி என்ற மாமுனியாகவும், ரேணுகாதேவி என்ற பெயரில் பார்வதிதேவியும் மண்ணுலகில் கணவன்- மனைவியாக வாழ்ந்தனர். இவர்களுக்கு விசு. விசுவாஸ், விஸ்வரூபன், பரஞ்சோதி, பரசுராமன் என ஐந்து மகன்கள்.
நாளும் பூஜைக்கு ஜமதக்னி முனிவருக்கு ரேணுகாதேவி மண்ணில் புதிதாய் குடம் செய்து நீர் கொண்டுவந்து தரவேண்டும். ஒருநாள் குடத்தில் தண்ணீரை நிரப்பும்போது.நீரில் கந்தர்வன் ஒருவனின் உருவம் தெரிய, அந்த வசீகரத்தில் சில நொடி ஆழ்ந்து விட்டாள், ரேணுகாதேவி.
அதன் விளைவு, மண்கலம் கரைந்து ஆற்றுடன் கலந்தது. தவறை உணர்ந்த தேவி, காட்டு விலங்கு தன்னை விரட்டியதாக பொய்கூற, ஞானியாகிய ஜமதக்னி உண்மையை உணர்ந்து கோபமுற்றார். முதல் நான்கு மகன்களையும் அழைத்து தாயின் தலையை வெட்டப் பணித்தார். அவர்கள் மறுத்தனர். எனவே, அவர்களை செடி கொடிகளாக சபித்தார்.
பிறகு, கடைசி மகன் பரசுராமனைப் பணித்தார். பரசுராமன் தமக்கு இரு வரங்கள் வேண்டும் என்ற நிபந்தனைப்படி தாயைக் காட்டுக்கு அழைத்துச்சென்று தலையை வெட்ட முடிவு செய்தார். அது புரிந்த ரேணுகாதேவி தப்பித்து ஓடினாள். பரசுராமன் விரட்டினான்.
ரேணுகாதேவி, ஆவாரம் பட்டைகளை வெட்டிக் கொண்டிருந்த பெண்ணைக் கட்டிப்பிடித்து தன்னைக் காப்பாற்ற வேண்டினாள். அவளை பரசுராமன் எச்சரித்தான். அவள் கண்டுகொள்ளவில்லை. பரசுராமன் ஆத்திரமானான். பரசுராமனால் வீசப்பட்ட கோடறியால் இருவரது தலைகளும் துண்டிக்கப்பட்டு மண்ணில் விழுந்தன.
பெயர்க் காரணம்
வேதனை மனதுடன், தாயின் தலையை தந்தையிடம் எடுத்துச்சென்ற பரசுராமன், தான் கேட்ட வரங்களின்படி தன் சகோதரர்களை உயிர்ப்பிக்க வேண்டினான். அடுத்து, தாயை உயிர்ப்பிக்க வேண்டினான். எல்லாம் நடந்தது. ஆனால், தாயின் தலையை அந்தப் பெண்ணுக்கும், அவளது தலையை தன் தாய்க்கும் மாற்றி வைத்துவிட்டான். அவர்கள் உயிர்ப்பித்த பெண்ணை மாரியம்மன் எனவும், வெட்டுப்பட்ட இவ்வூர் ‘வெட்டுவானம்’ எனவும் ஆயிற்று.
சவ்வாது மலையில் உற்பத்தியாகும் ஆறானது இரு கிளைகளாகப் பிரிகிறது. படவேடு கிராமத்தின் வழியாகச் செல்வது ‘கமண்டல ஆறு ‘ எனவும், வெட்டுவானம் கிராமத்தில் வழியாகச் செல்வது ‘புண்ணிய தீர்த்த ஆறு எனவும் பெயர்களைப் பெறுகிறது.
புண்ணிய தீர்த்த ஆற்று நீர், கசக்கால்வாய் வழியே இத்திருக்கோயில் அருகே ஓடிவந்துள்ளது. பாசனத்திற்குக் கால்வாயை செம்மைப்படுத்தும்போது அம்மன் சிலை ஒன்று விவசாயியின் மண்வெட்டியில் வெட்டுப்பட்டது. அதிலிருந்து இரத்தம் கொட்டியது. விவசாயி மயங்கி விழுந்தார். ‘நான் எல்லையம்மன்’ என தெய்வ வாக்கு கூற, அம்மனுக்கு அங்கு கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினர்.
இப்போது துர்க்கைத் தலங்களில் முக்கியமான கோயிலாக இது விளங்குகிறது. பக்தர்கள் இங்கு தங்கியிருந்து, குறை நீங்கப் பெற்று செல்கின்றனர். அம்மன் திருக்கோயில் எதிரே புனித திருக்குளம் உள்ளது. சற்று தூரத்திலேயே ஆனந்தவல்லி – சுந்தரேஸ்வரர் கோயிலும், பள்ளிகொண்டா உத்தர ரெங்கநாதர் கோயிலும், கீழச்சூர் நாகநாத ஈஸ்வரர் கோயிலும், பள்ளிகொண்டா மலையில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலும், ஒலக்காசியில் காசி விஸ்வநாதர் கோயிலும் உள்ளன.
விழாக்கள்
எல்லையம்மன் கோயிலில் ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் அலைமோதும். அப்போது திருத்தேர் பவனி, தெப்பத் திருவிழா, இலட்ச தீபம் ஆகியன ஆகியன நடைபெறும் இங்கு பௌர்ணமி விழா, நவராத்திரி விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
கோவில் இருப்பிடம்