திருப்பள்ளியெழுச்சி பாடல் 1
அருணனும் அணுகினன் அணிகீழைத் திசைக்கண்
அம்மநின் முகம்போல அலர்ந்தன மரைகள்
குருகுகள் பெடையுடன் இரைதேட வெங்கும்
கூவியே பறந்தன குறையொன்று மின்றி
யிருகரம் ஏந்திய எழில்மல ருடனே
எய்தினர் அன்பரும் ஏத்திய நின்னைத்
திருமுடி மன்னர்கள் மடிதவழ்ந் திட்ட
செந்தமிழ்த் தாய்பள்ளி யெழுந்தரு ளாயே.
பொருள் :
தமிழ்நாட்டுத் திருமுடி மன்னர்களின் மடிகளில் தவழ்ந்து விளையாடிய செந்தமிழ்த் தாயே! சூரியனும் அழகிய கிழக்குத் திசையைச் சேர்ந்துவிட்டான்;உடனே தாமரை மலர்களும் நின் திருமுக மலர்ச்சிபோல் மலர்ந்தன; ஆண்பறவைகள் பெடைகளுடன் யாதொரு குறையுமில்லாமல் இரைதேடும்பொருட்டு நாற்புறமும் மகிழ்ச்சியால் கூவிக் கொண்டே பறந்தன; நின் அன்பர் யாவரும் தம் இரண்டு கரங்களிலும் மலர்களை ஏந்தியவர் களாய் நின்னை ஏத்த வந்து நின் பள்ளியெழுச்சியை எதிர் நோக்கியிருக்கின்றனர். ஆதலால் நீ திருப்பள்ளியினின்றும் எழுந்தருளுவாயாக.